Published:Updated:

சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு... நடிகர் திலீப்பை சுற்றும் சர்ச்சைகள்... நடிகைக்கு நீதி கிடைக்குமா?

பாலசந்திரகுமார் - திலீப்
பிரீமியம் ஸ்டோரி
பாலசந்திரகுமார் - திலீப்

நடிகர் திலீப்பின் நண்பரான சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் கோர்ட்டில் கொடுத்த வாக்குமூலம், மீண்டும் இந்த வழக்கை உயிர்ப்பித்துள்ளது

சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு... நடிகர் திலீப்பை சுற்றும் சர்ச்சைகள்... நடிகைக்கு நீதி கிடைக்குமா?

நடிகர் திலீப்பின் நண்பரான சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் கோர்ட்டில் கொடுத்த வாக்குமூலம், மீண்டும் இந்த வழக்கை உயிர்ப்பித்துள்ளது

Published:Updated:
பாலசந்திரகுமார் - திலீப்
பிரீமியம் ஸ்டோரி
பாலசந்திரகுமார் - திலீப்

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதை வீடியோவாகவும் பதிவுசெய்த வழக்கு, 2017-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னேற்றமில்லாமல் சென்றுகொண்டிருந்த வழக்கில், இரண்டு மாதங்களுக்கு முன்பு நடிகர் திலீப்புக்கு எதிராக, கோர்ட்டில் சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் வாக்குமூலம் கொடுத்ததும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது. ‘சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை வீடியோ லீக் ஆனதாக’ பாதிக்கப்பட்ட நடிகை பிரதமர் வரை புகார் அனுப்ப... இன்னொரு புறம் நடிகர் திலீப்புக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்த இயக்குநர் பாலசந்திரகுமார் மீது பெண்ணொருவர் பாலியல் புகார் கொடுக்க... கேரளமே தகிக்கிறது!

சினிமா நிகழ்ச்சி ஒன்றுக்காக துபாய் ட்ரிப் சென்றபோது நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனுடன் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளார். இருவரின் பழக்கம் பற்றி, திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியரிடம் பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து, மஞ்சு வாரியருக்கும் திலீப்புக்கும் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு விவாகரத்தானது. பின்னர் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்தான், ஒரு பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு... நடிகர் திலீப்பை சுற்றும் சர்ச்சைகள்... நடிகைக்கு நீதி கிடைக்குமா?

இந்த வழக்கில், நடிகையின் கார் டிரைவராக இருந்த பல்சர் சுனி கைதுசெய்யப்பட்டார். நடிகையைக் கடத்தும்படி பல்சர் சுனியைத் தூண்டிவிட்டது நடிகர் திலீப் என போலீஸ் விசாரணையில் கூறப்பட்டது. தனது வாழ்க்கையில் குறுக்கிட்ட அந்தப் பிரபல நடிகையைப் பழிவாங்கவே, திலீப் இப்படிச் செய்ததாக போலீஸார் தெரிவித்தார்கள். இதையடுத்து நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்த திலீப், ஜாமீனில் வெளியே வந்தார். அவர் ஜாமீன் பெறும் சமயத்தில், ‘பல்சர் சுனியை எனக்கு இதற்கு முன்பு அறிமுகமே இல்லை’ என்று கூறியிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது.

நடிகர் திலீப்பின் நண்பரான சினிமா இயக்குநர் பாலசந்திரகுமார் கோர்ட்டில் கொடுத்த வாக்குமூலம், மீண்டும் இந்த வழக்கை உயிர்ப்பித்துள்ளது. இயக்குநர் பாலசந்திரகுமாரின் படத்தில் திலீப் நடிக்க மறுத்ததால், இருவருக்குள்ளும் பகை ஏற்பட்டதாகவும், அதனால்தான் இயக்குநர் பாலசந்திரகுமார் நடிகர் திலீப்புக்கு வில்லனாக மாறிவிட்டதாகவும் திலீப் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து மீடியாவிடம் பேசிய பாலசந்திரகுமார், ‘‘நடிகர் திலீப்பின் வீட்டில்வைத்து நான் பல்சர் சுனியைப் பார்த்திருக்கிறேன். பல்சர் சுனியுடன் நட்பில் இருப்பது தெரியவந்தால், தனக்கு ஜாமீன் கிடைக்காது என்பதால், அது பற்றி வெளியே சொல்லக் கூடாது என என்னிடம் திலீப் கூறியிருந்தார். மேலும், குறிப்பிட்ட அந்தப் பாலியல் வன்கொடுமை வீடியோவை ஒரு விஐபி திலீப்பிடம் கொடுத்து, அதை அவர் பார்த்ததை நான் பார்த்தேன். அத்துடன், தன்னைக் கைதுசெய்த போலீஸ் அதிகாரிகளைக் கொலைசெய்ய, தன் சகோதரன் உள்ளிட்டவர்களுடன் சதித்திட்டம் தீட்டினார்’’ என்று கூறினார். மேலும், திலீப் பேசிய ஆடியோ உள்ளிட்டவற்றையும் கோர்ட்டில் ஒப்படைத்தார். இதையடுத்து, போலீஸ் அதிகாரிகளைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் உள்ளிட்ட ஆறு பேர் மீது க்ரைம் பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்தார்கள்.

இந்த வழக்கில், கோர்ட் வழிகாட்டுதல்படி மூன்று நாள்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார் திலீப். தனது மூன்று மொபைல் போன்கள், சகோதரர் உள்ளிட்டவர்களின் மூன்று போன்கள் என ஆறு மொபைல் போன்களை கோர்ட்டில் ஒப்படைத்தார். அதிகாரிகளைப் பழிவாங்குவது குறித்து திலீப் பேசியதாக ஒரு ஆடியோவை பாலசந்திரகுமார் கோர்ட்டில் ஒப்படைத்தார். ‘அது தனது குரல் இல்லை’ என திலீப் மறுக்கவில்லை. இருப்பினும், அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வுசெய்ய நடிகர் திலீப், அவரின் சகோதரர் அனூப், சகோதரியின் கணவர் சூரஜ் ஆகியோரது குரல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பாலியல் வன்கொடுமை வழக்கும், அதிகாரிகளுக்கு எதிராகச் சதிசெய்ததாகக் கூறப்படும் வழக்கும் திலீப்புக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வழக்குகள் பற்றி மீடியாவிடம் பேசுவதைத் தவிர்த்துவருகிறார் திலீப். அதேசமயம், ‘‘பாலசந்திரகுமார் என்னிடமிருந்து பலமுறை பணம் வாங்கியுள்ளார். கடைசியாகப் பணம் கேட்டபோது கொடுக்காததால், எனக்கு எதிராகத் திரும்பிவிட்டார். அவரது படத்திலிருந்து நான் விலகியதும் அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தியதால் இப்படிப் பேசுகிறார்’’ என்று கோர்ட்டில் சொல்லியிருக்கிறார் திலீப்.

நடிகை கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, எர்ணாகுளம் செஷன்ஸ் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ‘அது கோர்ட்டிலிருந்து லீக் ஆனதாக’ பாதிக்கப்பட்ட நடிகை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு புகார் எழுதியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலசந்திரகுமார் - திலீப்
பாலசந்திரகுமார் - திலீப்

இதற்கிடையே, ‘எனக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இயக்குநர் பாலசந்திரகுமார் என்னைப் பத்து ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்தார்’ என ஒரு பெண் கொச்சி போலீஸில் புகாரளித்திருக்கிறார். ‘இது, திலீப் தனக்கு எதிராகச் செய்யும் சதி’ எனத் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறாராம் பாலசந்திரகுமார்.

‘மலையாள சினிமா தொழிலிலும், தியேட்டர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் நடிகர் திலீப் தனி ஆவர்த்தனம் செய்துவருகிறார்’ என்று சில புகார்கள் அரசுக்குச் சென்றுள்ளன. அதுமட்டுமல்லாமல், நடிகை மஞ்சுவாரியர் உள்ளிட்டவர்கள், ‘பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என வலியுறுத்தி, அரசுத் தரப்புக்குச் சில தகவல்களைக் கொடுத்திருப்பதால், வழக்கை விரைந்து முடிப்பதில் அரசும் கோர்ட்டுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில், அரசு கூடுதல் கவனம் செலுத்தி, விரைந்து நீதி கிடைக்கச் செய்ய வேண்டும்!