Published:Updated:

`லாக்கப் என்கவுன்டர்!’ - எஸ்.ஐ-க்கு ஆயுள் தண்டனை வழங்கிய ராமநாதபுரம் நீதிமன்றம்

போலீஸார் வாலிபர் செய்யது முகமதுவை ஸ்டேஷனுக்குக் கூட்டி சென்றனர். அங்கு எஸ்.ஐ-யாகப் பணியாற்றும் காளிதாஸ் ராமநாதபுரம் சென்றிருந்ததால் செய்யது முகமதுவை லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர்.

காவல் துறை எஸ்.ஐ காளிதாஸ்
காவல் துறை எஸ்.ஐ காளிதாஸ் ( உ.பாண்டி )

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் 2014 -ம் ஆண்டு வாலிபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற காவல்துறை உதவி ஆய்வாளருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.

காவல் துறை எஸ்.ஐ காளிதாஸ் சுட்டுக்கொன்ற செய்யது முகமது
காவல் துறை எஸ்.ஐ காளிதாஸ் சுட்டுக்கொன்ற செய்யது முகமது
உ.பாண்டி

ராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியாக உள்ள கிராமம் எஸ்.பி.பட்டினம். இந்த ஊரைச் சேர்ந்த காட்டு பாவா ராவுத்தரின் மகன் செய்யது முகம்மது. எஸ்.பி.பட்டினம் காவல் நிலையம் அருகே மெக்கானிக் ஷாப் நடத்திவருபவர் அருள்தாஸ். 2014-ம் ஆண்டு அக்டோபர் 14-ல் இருவருக்கும் இடையே தகராறு நடந்துள்ளது. இது தொடர்பாக அருள்தாஸ் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். போலீஸார் வாலிபர் செய்யது முகமதுவை ஸ்டேஷனுக்குக் கூட்டி சென்றனர். அங்கு எஸ்.ஐ-யாகப் பணியாற்றும் காளிதாஸ் ராமநாதபுரம் சென்றிருந்ததால் செய்யது முகமதுவை லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர்.

இந்நிலையில், அன்று மாலை ஸ்டேஷனுக்கு வந்த எஸ்.ஐ காளிதாஸிடம் லாக்கப்பில் இருந்த செய்யது முகமதுவைப் பற்றி போலீஸார் தெரிவித்ததுடன், அவரிடமிருந்து பறிமுதல் செய்து வைத்திருந்த கத்தியையும் எஸ்.ஐ காளிதாஸிடம் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து லாக்கப்பில் இருந்த செய்யது முகமதுவை வெளியே வரச் சொல்லி விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையின்போது ஆத்திரம் அடைந்த செய்யது முகமது, டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து எஸ்.ஐ காளிதாஸை குத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலிலிருந்து தன்னை காத்துக்கொள்ள எஸ்.ஐ காளிதாஸ் தனது கைத் துப்பாக்கியை எடுத்து செய்யது முகமதுவை நோக்கி சுட்டுள்ளார். இதில் செய்யது முகம்மதுவின் கழுத்து மற்றும் மார்பில் குண்டு பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

செய்யது முகமது உடல் (பழைய படம்)
செய்யது முகமது உடல் (பழைய படம்)
உ.பாண்டி

துப்பாக்கிக் குண்டு வெடித்த சத்தத்தைக் கேட்ட காவலர்கள் பதற்றத்துடன் வந்து பார்த்தபோது செய்யது முகமது உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் நிலையத்தின் கதவுகளைப் பூட்டிய போலீஸார் உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதற்குள் செய்யது முகமது சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் பரவவே எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு காவல் நிலையத்தில் இருந்து செய்யது முகமதுவின் உடலையும் காயம் அடைந்த எஸ்.ஐ காளிதாஸையும் மீட்டு ராமநாதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக எஸ்.ஐ காளிதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் பணியில் சேர்ந்தார். தற்போது அவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த ராமநாதபுரம் செஷசன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

சம்பவத்தின் போது காவல் துறை எஸ்.ஐ காளிதாஸ் (பழைய படம்)
சம்பவத்தின் போது காவல் துறை எஸ்.ஐ காளிதாஸ் (பழைய படம்)
உ.பாண்டி

இதன்படி எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் வாலிபர் செய்யது முகமதுவை சுட்டுக் கொன்ற எஸ்.ஐ காளிதாஸுக்கு ஆயுள் தண்டனையும் 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து ஷெசன்ஸ் நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.