Election bannerElection banner
Published:Updated:

சோலி சோரப்ஜி: உச்சநீதிமன்றத்தைத் தயங்காமல் விமர்சித்தவர், மனித உரிமைகளுக்காகப் போராடியவர் மறைவு!

சோலி சோரப்ஜி
சோலி சோரப்ஜி

அவர் மதித்த உச்ச நீதிமன்றமே தவறிழைத்தபோதும் சுட்டிக்காட்ட தயங்காதவர். கடந்த வருடம் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷானிற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தை அவர் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

சோலி ஜஹாங்கிர் சோரப்ஜி. மூத்த வழக்கறிஞர், முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் (Attorney General of India), பத்ம விபூஷண் பெற்றவர், தன்னுடைய 91வது வயதில் உடல்நல கோளாறு காரணமாக இயற்கை எய்தினார். கொரோனா நோய் தொற்று என செய்திகள் வெளியாகின்றன. ஆனால், அவருடைய நெருங்கிய வட்டத்திலுள்ள சிலர் அதை மறுத்துள்ளனர். இந்திய பிரதமர், ஜனாதிபதி, உள்துறை அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர்கள் என பல முக்கிய தலைவர்கள் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்தியாவின் மிக முக்கியமான சில வழக்குகளில் வழக்காடியவர் சோலி சோரப்ஜி. மும்பை உயர்நீதிமன்றத்தில் 1953-ம் ஆண்டு வழக்கறிஞராக தன் பணியைத் தொடங்கியவர் சோலி சோரப்ஜி. 1971-ம் ஆண்டு அவரை மூத்த வழக்கறிஞராக நியமித்தது உச்ச நீதிமன்றம். 1989-90 ஆகிய ஆண்டுகளிலும் 1998-2004-ம் ஆண்டுகளிலும் இந்திய அரசு வழக்கறிஞராக பணியாற்றினார் சோலி சோரப்ஜி.

சோலி சோரப்ஜி
சோலி சோரப்ஜி

2002-ம் ஆண்டு மார்ச் மாதம் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்ததிற்காகவும், கருத்து சுதந்திரத்தை நிலைநாட்ட உழைத்ததற்காகவும் அவருக்கு இந்திய அரசால் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்திலும் பதவி வகித்தவர் சோலி சோரப்ஜி.

போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடியவர். யூனியன் கார்பைட் நிறுவனம் அவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட எத்தனித்தபோது. அதை உச்ச நீதிமன்றம் அனுமதிக்க, இப்படியான ஒரு கோர தாக்குதல் நீதியின் விசாரணைகளுக்குள் அடங்க வேண்டும் எனப் போராடி நீதி விசாரணையை மீண்டும் தொடங்கினார் சோலி சோரப்ஜி.

இந்திய அரசியலமைப்பில் பெரும் மாற்றங்களை கொண்டு வந்த முக்கிய வழக்குகளான கேசவனந்த பாரதி vs. தி ஸ்டேட் ஆப் கேரளா, மேனகா காந்தி vs. யூனியன் ஆப் இந்தியா, எஸ்.ஆர். போம்மாய் vs. யூனியன் ஆப் இந்தியா போன்ற வழக்குகளில் வாதாடியவர். தன்னுடைய அறுபது ஆண்டுகால வழக்கறிஞர் பணியில் கம்பீரமான தெளிவான வாதங்களுக்குச் சொந்தக்காரர். அவரது ஆளுமை, சட்ட அறிவு, எதிர்கட்சியினருக்கு அவர் கொடுக்கும் மரியாதை என பலவிஷயங்களை நினைவுகூர்ந்து அவருடன் பணிபுரிந்த மூத்த வழக்கறிஞர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.

சோலி சோரப்ஜி
சோலி சோரப்ஜி

தனக்கு சரியென பட்டதை எவ்வித தயக்கமும் இன்றி யாராக இருந்தாலும் கூறும் வல்லமை படைத்தவர் என்கிறார்கள். வழக்கறிஞர் தொழிலை புனிதமாகக் கருதியவர் சோலி சோரப்ஜி. அவர் மதித்த உச்ச நீதிமன்றமே தவறிழைத்தபோதும் சுட்டிக்காட்ட தயங்காதவர். கடந்த வருடம் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷானிற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தை அவர் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி அவரது இரங்கல் செய்தியில், "ஸ்ரீ சோலி சோரப்ஜி ஒரு திறமையான வழக்கறிஞர் மற்றும் பெரும் புத்திசாலி. வறியவர்களுக்கு சட்டத்தின் மூலம் உதவ எப்போதும் முன்களத்தில் நின்றவர். அவரது சிறப்பான பணிக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவருடைய மறைவு வருத்தமளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், "சோலி சோரப்ஜி எனும் இந்திய சட்டத்துறையின் ஓர் அடையாளத்தை நாம் இழந்துள்ளோம். இந்தியாவின் அரசியலமைப்பையும், நீதித்துறையையும் வழிநடத்தி வடிவமைத்த சிலரில் முக்கியமானவர் அவர். மிக தேர்ந்த சட்ட நிபுணர். அவரின் குடும்பத்திற்கு என் அனுதாபங்கள்" எனச் செய்தி பகிர்ந்துள்ளார்.

சோலி சோரப்ஜி ஜாஸ் இசையின் மீது அவர் அளப்பரிய பற்று கொண்டிருந்ததை நினைவுகூர்கிறார்கள் அவர் குடும்பத்தினர். அவரது மகள் ஜியா மோடி பிரபலமான வழக்கறிஞர். அவரது மகன் ஹோர்மஸ்ட் சோரப்ஜி 'ஆட்டோகார்' எனும் இதழின் ஆசிரியர். அவரது மற்றோரு மகன் ஜஹாங்கிர் சோரப்ஜி மும்பை மருத்துவமனையில் மருத்துவர். வழக்கறிஞர் சோலி சோரப்ஜியின் மறைவினை அடுத்து அவரது மனைவி மற்றும் மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து ஆறுதல் செய்திகள் பகிரப்படுகின்றன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு