Published:Updated:

கொரோனா காலத்தில் நாம் கவனிக்கத் தவறிய சில முக்கிய வழக்குகள் - ஒரு பார்வை!

தேசம் உயிர் காக்க போராடிக்கொண்டிருக்கும் மிகவும் கடினமான இந்தச் சூழலில் நீதிமன்றங்களுக்கு வந்து, அதிகம் கவனம் பெறாமல் போன சில முக்கிய வழக்குகளின் தொகுப்பு இங்கே...

கொரோனா மட்டுமே இன்றைய பிரதான பிரச்னையாக இருக்கிறது. நம் வேலை, உணவு, உறவு தொடங்கி நம்முடைய அன்றாட வாழ்வியலையே ஒரு நோய்த்தொற்று மாற்றி அமைத்திருக்கிறது. அனைத்து செய்திகளையும் கொரோனா மட்டுமே நிறைத்திருக்க, அதைத் தாண்டி இந்தியாவில் வேறொன்றும் நிகழவில்லையா என்ற கேள்வி பலருக்கு எழாமல் இல்லை. நாம் கவனிக்கவில்லை என்றாலும், இந்தியா முழுக்க பல்வேறு முக்கியச் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அப்படி நீதித்துறையில் அதிகம் கவனம் பெறாமல் போன சில முக்கிய வழக்குகளின் தொகுப்பு இங்கே...

Corona
Corona

டெல்லி, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு கொரோனா நோயாளிகளை சரியாகப் பராமரிக்கச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மேற்கண்ட மாநிலங்களில், தானாக முன்வந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மிக மோசமான நிலையில் கொரோனா நோய்த் தொற்று உடையவர்களை நடத்துவதும், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கவனிப்பாரற்று மருத்துவமனை வளாகங்களில் போட்டு வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டி, கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமன்றி மேற்கண்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு, இதுகுறித்து உடனடியாகக் கவனித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா நோய்த் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதனை செய்து பார்ப்பது மிகவும் அவசியம் என்று கூறியிருக்கும் உச்ச நீதிமன்றம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். குறைவான பரிசோதனைகள் செய்வது இந்த நோய்க்கான தீர்வு அல்ல என்றும், மாநில அரசுகள் உடனடியாக பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Corona (Representational Image)
Corona (Representational Image)

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே, மாநில அரசுகள் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் விதிகளைச் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இடையே இன்டெர்- ஸ்டேட் டிராவல் எனப்படும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலவி வந்தது. இதற்கு உத்தரப்பிரதேச அரசு, மற்ற இரு மாநில அரசுகளைவிடவும் மிகவும் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையே மக்களின் நடமாட்டத்தை முறைப்படுத்த இந்த மூன்று மாநிலங்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

கொரோனா போரின் முன்கள வீரர்களான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை முறையாகக் கவனித்துக்கொள்ளவில்லை என அரசாங்கத்தைச் சாடியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மருத்துவத்துறை சார்ந்தவர்களை சிரத்தையுடன் கவனித்துக்கொள்வதாகக் கூறி அவர்கள் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் எல்லாம் ஏற்பாடு செய்ததைக் சுட்டிக்காட்டியது மத்திய சுகாதாரத்துறை. மேலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தங்களைத் தாங்களே முறையாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தரப்பில் சொல்லப்பட்டது. இந்த விவாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசாங்கம் மருத்துவத்துறை சார்ந்தவர்களை கூடுதல் பொறுப்புடன் கவனித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

COVID-19 testing center in New Delhi
COVID-19 testing center in New Delhi
AP Photo / Manish Swarup

வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்கள், திரும்ப வர மத்திய அரசு ஏற்பாடு செய்துகொண்டிருந்தாலும், தமிழகத்தில் வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், தமிழகத்துக்கு வர விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப் பட்டிருந்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்று வரும் வேளையில், இதற்கு உரிய பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.

கொரோனாவை `லெப்ட்’ கையில் டீல் செய்யும் ஒடிசா! சொல்லித்தரும் பாடம் என்ன?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவை தவிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் கொரோனா லாக்டௌன் தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன, அந்த வழக்குகளின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில், மத வழிபாட்டுத்தலங்கள் அடிப்படை அத்தியாவசிய சேவைகள் கிடையாது எனக் கூறி மத வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தடைவிதிக்க வேண்டும் என கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் ஐம்பது படுக்கைகளுக்கு மேல் வசதி கொண்ட அனைத்து மருத்துவமனைகளிலும் 20 சதவிகித படுக்கைகளை கொரோனா நோய் சிகிச்சைக்கு ஒதுக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உள்ளவர்கள், தொற்று இல்லாதவர்கள் என முறையாகப் பிரிக்க வழி செய்யமால் போடப்பட்டிருக்கும் இந்த உத்தரவை நீக்கச் சொல்லி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Delhi
Delhi

டெல்லியில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு மிக அதிகமாக கட்டணம் வசூலிப்பதைத் தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.

தனியார் தொழில் நிறுவனங்கள், இந்த ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது குறித்து, தொழிலாளிகளும் முதலாளிகளும் கலந்து பேசி ஒரு ஒப்பந்தத்துக்கு வர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேவைப்பட்டால் தொழிலாளர் துறை (Labour Dept) இந்தப் பேச்சுவார்த்தைக்குத் துணை புரியும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா எனும் மாபெரும் தேசத்தின், ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமெனில், தேசம் முழுக்க முடங்கி இருந்தாலும், நீதித்துறை தவறாது செயல்பட வேண்டியது அவசியம். டெல்லியில் மட்டும் இந்த 80 நாள்களில் 41,608 வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம். இப்படி இந்தியா முழுக்க மருத்துவர்கள், காவல் துறையினரைப் போலவே, நீதித்துறையும் அயராது செயல்பட்டு வருகிறது. தேசம் உயிர்காக்க போராடிக்கொண்டிருக்கும் மிகவும் கடினமான இந்தச் சூழலில், நீதித்துறை 130 கோடி இந்திய மக்களின் உரிமைகள் காக்கப்படுவதற்கு போராடிக்கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு