Published:Updated:

இழுக்கப்படும் வழக்குகள்... நசுக்கப்படும் உண்மைகள்!

நிர்மலா தேவி வழக்கு
பிரீமியம் ஸ்டோரி
நிர்மலா தேவி வழக்கு

‘மறதி ஒரு தேசிய வியாதி’ என்பார்கள். அது வியாதியல்ல... அன்றாட வாழ்வு தரும் அழுத்தங்களால் மறந்துகொண்டேயிருப்பது மக்களின் இயல்பு.

இழுக்கப்படும் வழக்குகள்... நசுக்கப்படும் உண்மைகள்!

‘மறதி ஒரு தேசிய வியாதி’ என்பார்கள். அது வியாதியல்ல... அன்றாட வாழ்வு தரும் அழுத்தங்களால் மறந்துகொண்டேயிருப்பது மக்களின் இயல்பு.

Published:Updated:
நிர்மலா தேவி வழக்கு
பிரீமியம் ஸ்டோரி
நிர்மலா தேவி வழக்கு
சேனல்களில் அரை மணி நேரத்துக்கு ஒரு பிரேக்கிங் செய்தி அனல் பறக்கிறது. அன்றாடம் ஓர் அதிகாரப்புள்ளி நாற்றமெடுக்கும் ஊழலில் சிக்குகிறார். படுபாதகமான பாலியல் குற்றச்சாட்டில் படபடக்கிறார் ஓர் அரசியல்வாதி. சிறுமிகளை வன்புணர்ந்து வேட்டையாடுகிறது ஒரு கூட்டம். இறைவனை பூஜித்துக் கொண்டே கடவுளர் சிலைகளைக் கொள்ளையடிக்கிறது இன்னொரு கூட்டம். அமைச்சரின் வீடுகளிலிருந்து கட்டுக்கட்டாய் லஞ்ச ஆவணங்களைக் கைப்பற்றுகிறார்கள். பேராசையில் ரத்தம் குடிக்க, தாய் முலையறுப்பதுபோல பூமிப்பந்தை வெட்டிச் சூறையாடுகிறது ஒரு கும்பல். வயிற்றுப்பாட்டுக்குச் சென்ற கூலிகளைக் கொத்து கொத்தாய்ச் சுட்டுக் கொன்று அதிகார போதையில் கொக்கரிக்கிறது சீருடை ரெளடிகள் கூட்டம். இரவு பகலாகக் கண்விழித்துப் படித்தவனை வஞ்சித்து, எதிர்காலத்தைத் தட்டிப்பறிக்கிறது தரகர் கூட்டம் ஒன்று. அக்கிரமங்களைப் பட்டியலிட, பட்டியலிட... தீராமல் நீள்கிறது பாவக்கணக்கு. நெஞ்சு பொறுக்காமல், காறி உமிழ்கிறார்கள் மக்கள். வெட்கமே இல்லாமல் துடைத்துக் கொண்டு, அடுத்த அசிங்கத்தை அரங்கேற்றத் தயாராகிறது அதிகார வர்க்கம்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘மறதி ஒரு தேசிய வியாதி’ என்பார்கள். அது வியாதியல்ல... அன்றாட வாழ்வு தரும் அழுத்தங்களால் மறந்துகொண்டேயிருப்பது மக்களின் இயல்பு. நினைவுபடுத்திக்கொண்டே இருப்பது ஊடகங்களின் கடமை. அப்படித்தான் கடந்த சிலபல ஆண்டுகளில் தமிழக மக்களை அதிரவைத்தன பல வழக்குகள். சட்டத்தின் பிடிக்குள் வந்தும்கூட இன்னும் சிக்காமல் சதுரங்கம் ஆடுகிறார்கள் வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள். நீறுபூத்த நெருப்பாக இருக்கும் அந்த வழக்குகளை நீர்த்துப்போகச் செய்ய நடக்கும் முயற்சிகள் ஏராளம்... ஏராளம். அப்படியான அந்த வழக்குகளின் இப்போதைய நிலை என்ன? பார்ப்போம், வாருங்கள். நாம் ஒருபோதும் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்!

சுடுகாட்டில் உறங்கிய சகாயம்... உறங்கும் ‘அம்பல’ அறிக்கை!

2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு, பி.ஆர்.பி நிறுவன அதிபர் பழனிச்சாமி கிரானைட் மோசடிப் புகாரில் கைதுசெய்யப் பட்டார். உண்மைகளை வெளிக்கொண்டுவந்த சகாயத்தை மதுரையிலிருந்து தூக்கியடித்தது தமிழக அரசு. ஆனாலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், கிரானைட் மோசடியை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கனிமம் காக்க சுடுகாட்டில் தனியே படுத்துறங்கினார் சகாயம் ஐ.ஏ.எஸ். நாடே அதிர்ந்தது. நரபலி விவகாரம் வரை வெளியே வந்தது. கிரானைட் கொள்ளைகளைத் தோலுரித்த சகாயத்தின் மிக விரிவான அறிக்கை, 2015, நவம்பரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாகக் கிணற்றில் போடப்பட்ட கிரானைட் கல்லாய்க் கிடக்கிறது அந்த வழக்கு. இதற்கிடையே, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர், இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதி இயக்குநர் என்று மாற்றப்பட்டு, மாற்றப்பட்டு, இறுதியாக தற்போது ‘அறிவியல் நகர’த்தின் துணைத் தலைவராகப் பதவிவகிக்கிறார் சகாயம்.

இழுக்கப்படும் வழக்குகள்... நசுக்கப்படும் உண்மைகள்!

இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணித்துவரும் வழக்கறிஞர் பி.ஸ்டாலினிடம் பேசினோம், “2013-ல் மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மேலூர் மாஜிஸ்ட்ரேட் மகேந்திரபூபதி, 2016, மார்ச் 29-ம் தேதி பழனிச்சாமியை விடுதலை செய்தார். அத்துடன் நிற்காமல், அன்சுல் மிஸ்ரா உட்பட அரசு வழக்கறிஞர்கள்மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். வெகுண்டெழுந்த உயர் நீதிமன்றம் இரண்டு நீதிபதிகள் குழுவை அனுப்பி விசாரித்தது. இடைநீக்கம் செய்யப்பட்டார் மகேந்திரபூபதி. பழனிசாமி உட்பட மூவர் விடுதலை செய்யப் பட்டதை, கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ரத்துசெய்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. கூடவே, ‘இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும் வகையில் கனிமவள வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்படுகிறது. அந்த நீதிமன்றத்தில் மதுரையின் தற்போதைய கலெக்டர் இரண்டு மாதங்களுக்குள் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும்’ என்று கண்டிப்புடன் குட்டுவைத்தது உயர் நீதிமன்றம். இதுதான் அந்த கிரானைட் வழக்கின் இன்றைய நிலை. நீதிமன்றம் சொன்னபடி சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரித்தால் மட்டுமே நியாயம் கிடைக்கும்” என்கிறார்.

நீதிமன்றத்தில் சகாயம் சமர்ப்பித்த அறிக்கையில், 1,11,000 கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் மோசடி நடந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக் கிறது. அந்த அறிக்கையை எதிர்த்து கிரானைட் அதிபர்கள் தரப்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால், சகாயம் அறிக்கை நீதிமன்றத்தில் உறங்குகிறது. பழனிச்சாமி தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார். மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் நடந்துவரும் 90-க்கும் மேற்பட்ட கிரானைட் மோசடி வழக்குகளில் 78 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், பெரும்பாலான வழக்குகள் பி.ஆர்.பி சம்பந்தப்பட்டவை. மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி சில காலம் பங்குதாரராக இருந்த ஒலிம்பஸ் நிறுவனத்தின் மீதும் வழக்கு உள்ளது. இன்றளவும், பிரான்மலை உட்பட மலைகளைக் குடையும் வெடிச்சத்தம் அடங்கவில்லை. நீதிமன்றங்களின் கண்டனங்களைப் பொருட்படுத்தாமல் தொடர்கிறது கனிமக் கொள்ளை. நியாயத்துக்காகக் காத்திருக்கிறார்கள் மக்கள். அதிகாரத்தைச் சுழற்றி கற்களை உடைப்பதுபோல நீதியையும் உடைக்கப் பார்க்கிறார்கள்.

“என்னை விட்ருங்கண்ணா...” அந்தக் குரலை மறந்துவிட்டோமா?

பொள்ளாச்சி சம்பவத்தில், பாலியல் அத்துமீறல் வீடியோவில் கதறும் அந்த இளம்பெண்ணின் குரல் இப்போதும் நெஞ்சை ரணமாய் அறுக்கிறது. காதல் வலைவிரித்து, இளம்பெண்களை துரோகத்தில் வீழ்த்தி, அவர்களைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தி, அதை வக்கிரமாக வீடியோ எடுத்தது படுபாதகக் கும்பல் ஒன்று. இந்தக் குற்றச்சாட்டில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மணிகண்டன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை 2019, ஏப்ரல் 26-ம் தேதி கையிலெடுத்த சி.பி.ஐ., ஒரு மாதத்தில் தனது முதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.

ஆனால், எந்த வழக்கில்தான் திறம்படச் செயல்பட்டது சி.பி.ஐ? அந்த விசாரணை அமைப்பு தாக்கல் செய்த ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதைக் காரணம் காட்டி, 2019 நவம்பரில் திருநாவுக்கரசு, சபரிராஜன் மீதான குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது. 2020, பிப்ரவரியில் இந்த வழக்கு மகிளா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இறுதியாக, கடந்த மார்ச் 10-ம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். தற்போது, கொரோனாவைக் காரணம் காட்டி நீதிமன்றத்துக்கு அவர்கள் அழைத்து வரப்படுவதில்லை. வசதியாக உறங்குகிறது இந்த வழக்கு. குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறையில் சுகபோகமாக இருப்பதாகத் தகவல்.

வழக்கு குறித்து பேசிய அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ராதிகா, “இந்த வழக்கு சி.பி.ஐ விசாரணைக்குச் சென்ற பிறகு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இதில் தொடர்புடைய அரசியல் புள்ளிகளின் பெயர்கள் வெளியில் வரவே இல்லை. குற்றம்சாட்டப் பட்டவர்களுக்குச் சாதகமாகவே விசாரணை அமைப்புகள் செயல்படுகின்றன. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் சி.பி.ஐ கோட்டை விட்டதால், கடும் குற்றம் புரிந்தவர்கள்மீதான குண்டர் சட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளில்கூட இவ்வளவு அலட்சியம் காட்டுவதால்தான், அடுத்தடுத்து நாகர்கோவில் காசி, கன்னியாகுமரி முன்னாள் எம்.எல்.ஏ ‘நஞ்சு’முருகேசன் போன்றோர் உருவாகிறார்கள்” என்று கோபத்துடன் படபடத்தார்.

சி.பி.ஐ தரப்பில் கேட்டோம். “கடந்த ஒரு வாரமாக பொள்ளாச்சியில் விசாரணை நடத்திவருகிறோம். கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்களைத் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பியிருக்கிறோம். விரைவில் இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று வழக்கம்போல பதில் வருகிறது! காலத்தால் அழிக்க முடியாத ‘பொள்ளாச்சி’ கறைக்கு தமிழக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்!

இழுக்கப்படும் வழக்குகள்... நசுக்கப்படும் உண்மைகள்!

ரத்தத்தால் சிவந்த செம்மரக்காடு! - நாதியற்றுப்போன தமிழனுக்கு நீதி கிடைக்குமா?

2015, ஏப்ரல் 7-ம் தேதி. ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி, 20 தமிழர்களை இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்றது ஆந்திர காவல்துறை. வயிற்றுப்பாட்டுக்குக் கூலிக்குச் சென்றவர்கள் சிந்திய ரத்தத்தால் சிவந்தது செம்மரக்காடு.

ஆந்திராவில் விளையும் செம்மரக் கட்டைகளுக்கு சீனா உட்பட உலகெங்கும் கடும் கிராக்கி நிலவுகிறது. இந்த மரங்களை வெட்டிக் கடத்துவதைத் தொழிலாகக்கொண்ட பெரும் மாஃபியாக்கள், தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி மாவட்டங்களில் வாழும் மலைவாழ் பழங்குடியினரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நாளொன்றுக்கு, பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்று ஆசைகாட்டி சேஷாசலம் காட்டுக்கு அனுப்பிவைக்கிறார்கள். அப்படிச் சென்றவர்களைத்தான் சுட்டுக் கொன்றது ஆந்திர போலீஸ். ‘முப்பது நாள்களில் நியாயம் தேடித்தருவோம்’ என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டினார்கள் அன்றைய ஆந்திர ஆளுங்கட்சியினர். ஏறக்குறைய 2,000 நாள்கள் கடந்துவிட்டன, எதுவும் நடக்கவில்லை. அந்த ஏழைகள் மண்ணில் புதைந்து அதில் மரமே முளைத்துவிட்டது. ஆனால், செம்மர மாஃபியா முதலாளிகளில் ஒருவர்கூட இன்னும் தண்டிக்கப்படவில்லை. ஏன், இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அவர்கள் சுகபோக வாழ்க்கை வாழ, குடும்பத் தலைவரையும் வாழ்வாதாரத்தையும் இழந்து, வறுமையில் தவிக்கின்றன 20 குடும்பங்கள்.

“இந்தச் சம்பவம் நடந்த ஒன்றரை மாதத்தில், தேசிய மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்தியது. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எட்டு லட்சம் ரூபாய் வரை நிவாரணம் தர உத்தரவிட்டது. ஆந்திர டி.ஜி.பி-யை டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், டி.ஜி.பி தரப்பில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தடையாணை வாங்கிவிட்டனர். அதை உடைக்க வேண்டிய பொறுப்பு, தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உள்ளது. ஆனால், பலமுறை நாங்கள் நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் எந்தப் பலனும் இல்லை. இதற்கிடையில், ‘நடந்தது என்கவுன்ட்டர் அல்ல’ என்று சித்தூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து, வழக்கை முடிக்க முயன்றது ஆந்திர காவல்துறை. வழக்கு அப்படியே தேங்கி நிற்கிறது. சம்பவத்துக்கு மூன்று பேர் சாட்சிகள், அவர்களின் கதிதான் பரிதாபமாக இருக்கிறது.” என்று வருத்தத்துடன் பேசினார் ‘மக்கள் கண்காணிப்பகம்’ நிர்வாக இயக்குநர் ஹென்றி டிபேன்.

இந்த வழக்கின் தற்போதைய நிலை பற்றி அறிய திருப்பதி (புறநகர்) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் ரெட்டியைத் தொடர்புகொண்டோம். அவரது வாட்ஸ்அப் எண்ணுக்குத் தகவல் அனுப்பினோம். ஆனால், கடைசிவரை அவர் பதிலே சொல்லாமல் பதுங்கிக்கொண்டார். சம்பவம் நடந்து ஐந்து வருடங்களாகியும் தேசிய மனித உரிமை ஆணையமும் வேகம் காட்டவில்லை, தமிழக அரசும் நியாயம் கேட்கவில்லை. நாதியற்றுப் போனான் தமிழன் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்!

‘சிலையாய்’ நிற்கும் சிலை வழக்குகள்!

இழுக்கப்படும் வழக்குகள்... நசுக்கப்படும் உண்மைகள்!

2017-ம் ஆண்டுக்குப் பிறகு, சிலைக்கடத்தல் விசாரணை தீவிரமானது. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் இருந்தவரை பல அதிரடிகள் அரங்கேறின. சிலைக்கடத்தல் தொடர்பாக, தொழிலதிபர்கள் ரன்வீர் ஷா, கிரண் ராவ் உள்ளிட்டோரின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு பழங்காலச் சிலைகள், தூண்கள் மீட்கப்பட்டன. யாரும் எதிர்பார்க்காத வகையில் ராஜராஜனின் சிலையையே மீட்டு தஞ்சை பெரியகோயிலில் வைத்தார் பொன்.மாணிக்கவேல், ஆளும்கட்சியே ஆடிப்போனது. தனியொரு அதிகாரிக்கு எதிராக ஓர் அரசாங்கமே அப்போது செயல்பட்டது. சட்டத்தின் வழியாகச் சளைக்காமல் களமாடினார் பொன்.மாணிக்கவேல்.

ஒருகட்டத்தில், பொன்.மாணிக்கவேலிடமிருந்து விசாரணை அதிகாரத்தைப் பறிக்கும் நோக்கில், ‘போதிய அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பம் இல்லை’ என்று சிலைக்கடத்தல் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், வழக்கை சி.பி.ஐ ஏற்க மறுத்துவிட்டது. தற்போது இந்த வழக்குகள் தமிழக ஏ.டி.ஜி.பி தலைமையில் விசாரிக்கப்படுகின்றன. கடந்த 2019, நவம்பர் மாதத்தோடு பொன்.மாணிக்கவேலுவும் ஓய்வுபெற்றுவிட்டார். அத்துடன் கிடப்பில் போடப்பட்டுவிட்டன அந்த வழக்குகள்.

“ஸ்ரீரங்கம் சிலைத்திருட்டு வழக்கில், 2019 டிசம்பரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. ஆனால், இன்றுவரை புகார் அளித்த என்னிடம் விசாரணை நடத்தவில்லை. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைத்திருட்டு வழக்கிலும் இதே நிலைதான். இப்போது விசாரணை அதிகாரி யார் என்பதேகூட தெரியவில்லை” என்று புலம்பினார் சிலைக்கடத்தல் தொடர்பாகத் தொடர்ந்து செயல்பட்டுவரும் சமூக ஆர்வலர் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரனிடம் பேசினோம். “சில அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் பொன்.மாணிக்கவேல். இந்த வழக்குக்கு இடைக்காலத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையே காரணமாகவைத்து, சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கத் தடை இருப்பதாகச் சிலர் செய்தி பரப்புகிறார்கள். மேல் விசாரணை செய்ய சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு எந்தத் தடையும் இல்லை. பல ஆவணங்கள் மாயமாகிவிட்டன. வழக்கில் சம்பந்தப்பட்டவர் களை விடுவிக்க சதிவேலைகள் நடக்கின்றன. ஒரு போலீஸ் அதிகாரியே மரகத லிங்கம் ஒன்றைத் திருடி விற்றுவிட்டார். போலீஸ் - தொழிலதிபர்கள் - இடைத்தரகர்கள் கூட்டணி அமைத்து, சிலைக் கடத்தல் விவகாரத்தை அமுக்கப் பார்க்கிறார்கள்” என்றார் கோபமாக.

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸ் என்ன சொல்கிறது? “கொரோனா அச்சுறுத்தலால் கோயில்கள் மூடப்பட்டிருந்தன. அதனால்தான் விசாரணை சற்று தாமதமானது. தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். விரைவில் குற்றவாளிகளைக் கைதுசெய்வோம்” என்றார்கள். சிலைகளைப் போல நியாயத்தையும் கடத்தி விற்றுவிடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது!

ஆர்.கே.நகர் அரசியல் நாடகம்!

2017, ஏப்ரல் மாதம் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட 32 இடங்களில் ரெய்டு நடத்தியது வருமானவரித்துறை. 89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன. இந்தக் களேபரத்தில் அமைச்சரின் வீட்டிலிருந்து ஓடிவந்த ஒருவர், கொத்தாக ஆவணங்களைத் தூக்கி காம்பவுண்டுக்கு வெளியே வீசினார். வருமானவரித்துறைக்கு ஆதரவாகச் சாட்சியம் அளித்த 12 பேரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விஜயபாஸ்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த வழக்கில் மக்கள் கேட்கும் கேள்விகள் இவைதான். ‘விஜயபாஸ்கர் குற்றம் செய்தாரா... இல்லையா? இந்த வழக்கை விரைந்து நடத்துவதற்கு அரசுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? அவர் குற்றம் செய்திருந்தால், அதை நீதிமன்றத்தில் விரைவில் நிரூபித்து அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும். இல்லை, அவர் குற்றமற்றவர் என்றால் அதையும் நீதிமன்றம் வாயிலாக நிரூபித்திருக்கலாமே... ஏன் இந்த அரசியல் நாடகம்?’ என்று கொந்தளிக்கிறார்கள் மக்கள். கபட நாடகத்தின் காட்சிகள் முடிவுக்கு வருவது எப்போது?

இழுவையில் இரட்டை இலை... தடையாணை தந்திரம்!

இழுக்கப்படும் வழக்குகள்... நசுக்கப்படும் உண்மைகள்!

2017, ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவரைக் கட்டுக்கட்டாகப் பணத்துடன் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையில், “இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்கு, டி.டி.வி.தினகரன் முன்பணமாக 1.30 கோடி கொடுத்தார். இதை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் லஞ்சமாகக் கொடுப்பதற்குப் பேச்சுவார்த்தை நடைபெற்றது” என்று `பகீர்’ கிளப்பினார் சுகேஷ். தினகரனைக் கைது செய்து திகார் சிறையில் அடைத்தது டெல்லி போலீஸ். இந்த வழக்கில், பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என உறுதிசெய்துள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில், தான் பெற்ற தடையாணயை வைத்துத் தப்பித்துக்கொண்டிருக்கிறார் தினகரன். இந்த விவகாரத்தில் முக்கிய ஆதாரமான போன் கால் பதிவுகளைச் சரிபார்க்க, வாய்ஸ் டெஸ்ட் எடுக்கக்கூட தடையாணை வாங்கிவைத்தி ருக்கிறார் தினகரன். மொத்தமாய் நிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கிறது வழக்கு. இது ஜனநாயகத்துக்குப் பெரும் இழுக்கு!

ஐ.ஜி மீதான பாலியல் புகார்; நியாயம் கிடைக்கப்பெறாத பெண் ஐ.பி.எஸ்!

லஞ்ச ஒழிப்புத்துறையில் துறையின் இணை இயக்குநராக இருந்த ஐ.ஜி முருகன் மீது அந்தத் துறையில் பணியாற்றிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளால் கிடுகிடுத்துப்போனது தமிழகக் காவல்துறை. புகாரை விசாரித்த ஏ.டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி, முருகன் மீது 2018, செப்டம்பர் மாதம் சி.பி.சி.ஐ.டி போலீஸ் வழக்கு பதிவுசெய்தது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் வேண்டுகோளை ஏற்று, விசாரணையை தெலங்கானா காவல்துறைக்கு மாற்றியது சென்னை உயர் நீதிமன்றம். அதற்கு ஐ.ஜி முருகன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது. அதோடு சரி... மீளாத்தூக்கத்தில் இருக்கிறது வழக்கு.

ஐ.ஜி முருகன் மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருக்கும்போதே, தென்மண்டல ஐ.ஜி-யாக முருகன் பணியமர்த்தப்பட்டுள்ளது காவல்துறையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தத் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. “ஓர் உயரதிகாரிக்கே இதுதான் நிலை எனும்போது, இப்படியான பாலியல் பிரச்னைகளை எதிர்கொள்ளும் எங்களைப் போன்றவர்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?” என வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்கள் பெண் காவலர்கள்.

தாது மணல் கொள்ளை... நீதி கேட்டு அலையடிக்கும் வங்கக்கடல்!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ஆசிஷ்குமார், 2013-ம் ஆண்டு வி.வி நிறுவனத்தின் தாதுமணல் முறைகேடுகள் குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை அனுப்பினார். தொடர்ந்து ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவினரும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டக் கடற்கரைகளில் தாதுமணல் கொள்ளையை உறுதிப்படுத்தினர். அதற்குள் பல்லாயிரம் கோடி மதிப்பிலான அரிய வகை தாதுக்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகியிருந்தன. பல ஆண்டுகளாக அரசுக்கு வர வேண்டிய வருவாய் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டது. ஆனாலும், இவ்வளவு கொள்ளை அடித்தவர்கள்மீது எந்த நடவடிக்கையும் இல்லை. சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள் தாது மணல் கொள்ளையர்கள். மற்ற எந்தப் பிரச்னைக்கு குரல் கொடுக்கும்போதும் வராத அச்சுறுத்தல்கள், இந்தத் தாதுமணல் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுக்கும்போது மட்டும் வருகின்றன என்று பதைபதைக்கிறார்கள் சூழலியலாளர்கள்.

தற்போது தாதுமணல் சுரங்கப் பணிகளுக்குத் தடைவிதித்துள்ளது தமிழக அரசு. மத்திய அரசும், தனியார் நிறுவனங்கள் தாது மணல் அள்ளத் தடை விதித்திருக்கிறது. இது மட்டுமே இந்த வழக்கில் கிடைத்திருக்கும் தற்காலிக ஆறுதல். நீதி கேட்டு அலையடித்துக்கொண்டே இருக்கிறது வங்கக்கடல்!

முடக்கப்படுகிறதா கொடநாடு வழக்கு?

2017, ஏப்ரல் 23-ம் தேதி, கொடநாடு பங்களாவுக்குள் நுழைந்தது கும்பல் ஒன்று. காவலாளி ஓம் பகதூரைக் கொலை செய்து சில பொருள்களையும் கொள்ளையடித்தது. இந்த வழக்கில் சயான், ஜித்தின் ஜாய், வாளையார் மனோஜ் உட்பட பத்து பேர் கைதுசெய்யப் பட்டனர். அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். கொலைச் சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பு இருப்பதாக சயானும், வாளையார் மனோஜும் ‘பகீர்’ கிளப்பினார்கள். நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கை 90 நாள்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இந்த வழக்கை முடக்கும் பணிகள் திரைமறைவில் நடந்துவருகின்றன என்கிறார்கள். தேர்தல் விளையாட்டுக் களத்தில் நீதி நசுக்கப்படாமலிருக்க வேண்டும்!

நிர்மலா தேவி வழக்கு... நீடிக்கும் மர்மம்!

2018, ஏப்ரல் மாதம், கல்லூரி மாணவிகளை வி.ஐ.பி-களுக்குப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலாதேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது. இந்த வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிட்டது தமிழக அரசு. தமிழக ஆளுநரும் ஒரு தனி விசாரணைக் குழுவை அமைத்தார். வழக்கின் குற்றப்பத்திரிகை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், விபசாரத் தடுப்புச் சட்டம், தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை எனப் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இழுக்கப்படும் வழக்குகள்... நசுக்கப்படும் உண்மைகள்!

இந்த வழக்கில் சிறிது காலம் நிர்மலாதேவிக்காக வழக்காடிய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், “நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் பேசினார் என்பதை சி.பி.சி.ஐ.டி முறையாக விசாரிக்கவில்லை. இதில் முக்கியப் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருக் கிறார்கள். அதனால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். சில நாள்களில் பசும்பொன் பாண்டியனே வழக்கிலிருந்து விலகிக்கொண்டார். நீண்ட இழுபறிக்குப் பிறகு, நிர்மலாதேவி ஜாமீனில் வெளியே வந்தாலும், இந்த வழக்கில் மர்மங்கள் இன்னும் தொடர்கின்றன. எந்தெந்த ‘பெரிய’ மனிதர்களுக்காக மாணவிகளுக்குத் தூண்டில் போட்டார், மாணவிகள் ஏதும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்களா என எந்த விவரங்களும் வெளிவரவில்லை!

இவை மட்டுமா... டி.என்.பி.எஸ்.சி ஊழல், ‘நீட்’ ஆள்மாறாட்ட மோசடி, பேனர் கொலைகள் என்று நீள்கின்றன பாவக்கணக்கு பட்டியல்கள். மொத்தத்தில் மர்மதேசமாகியிருக்கிறது தமிழகம். ஓட்டுப் போடும் இயந்திரங்களாக மட்டுமே மக்களை பாவிக்கும் அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்துக்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்துவிட்டார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தேவை அதிகாரம் மட்டுமே. தன்மானம் தொடங்கி இனமானம் வரை இல்லாத அவர்களால் இந்த பூமிக்கு பாரம் மட்டுமே. மக்கள், தங்கள் கடைசி நம்பிக்கையாகக் கொண்டிருப்பது நீதிமன்றங்களையே. மேலும் சொல்வதற்கு ஒன்றுமில்லை!