Published:Updated:

கேஸ் டிஸ்மிஸ்! - சேதாரமாகும் ஆதாரங்கள்... கோட்டைவிடும் காவல்துறை

‘ஸ்காட்லாந்து போலீஸ்’ என்று பெருமை பீற்றிக்கொள்ளும் நமது காக்கிச்சட்டைகளுக்கு என்னதான் ஆகிவிட்டது...

பிரீமியம் ஸ்டோரி
‘‘இந்த வழக்கில் தொடர்புடைய பலரிடம் போலீஸ் விசாரணையே நடத்தவில்லை. அதிகாரிகள் முதல் வழக்கறிஞர்கள் வரை அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். இந்த வழக்கில் மட்டுமல்ல... 50 சதவிகித வழக்குகளில் விசாரணையின் தரம் குறைவாகவே இருக்கிறது. இதேநிலை தொடர்ந்தால், பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள். மெத்தனமான விசாரணையால் குற்றவாளிகள் விடுதலையாகும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறதா, விசாரணையை உயரதிகாரிகள் எப்படிக் கண்காணிக்கிறார்கள்... இந்தக் கேள்விகளுக்கு உள்துறைச் செயலர், டி.ஜி.பி ஆகியோர் பதிலளிக்க வேண்டும்.”


- சிவகங்கை மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற ஒருவர், தண்டனையை ரத்துசெய்யக் கோரி தாக்கல் செய்த மனு விசாரணையில்தான் சமீபத்தில் இப்படி கண்டனக் கணைகளைப் பதிவுசெய்திருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

இந்தச் சம்பவம் ஒரு சோறு பதம்தான். நாளிதழ்களைப் புரட்டினால், ‘போதிய சாட்சிகள் இல்லாததால் குற்றவாளிகள் விடுதலை’, ‘சந்தேகத்தின் பலனை குற்றம்சாட்டப்படுபவருக்குச் சாதகமாக அளித்து தீர்ப்பு வழங்கப்படுகிறது’... போன்ற வரிகளைப் படித்துப் படித்து கண்கள் பூத்துவிட்டன. சட்டங்கள் எதற்கு, காவல்துறை எதற்கு, நீதி அமைப்புகள் எதற்கு என்றெல்லாம் விரக்தி ஏற்படுகிறது.

திண்டுக்கல் அருகே ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, வாயிலும் மூக்கிலும் மின்சாரம் செலுத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார் சம்பந்தப்பட்ட நபர். தவிர, மோப்பநாய் அடையாளம் காட்டியதற்கு ஏற்ப அவரது வீட்டின் பீரோவிலிருந்து ரத்தக்கறை படிந்த துணியும் கைப்பற்றப்பட்டது. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் படுகேவலமாக அந்த வழக்கைக் கையாண்டு கோட்டைவிட்டிருக்கிறது கையாலாகாத தமிழகக் காவல்துறை.

இப்படி ஒன்றா... இரண்டா? சில ஆண்டுகளுக்கு முன்னர் நடுரோட்டில் வெட்டிக் கொல்லப்பட்ட உடுமலை சங்கரின் வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலரை ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி விடுவித்தது நீதிமன்றம். 2015-ல் வேலூரில் மகா என்கிற ரெளடி கொலை செய்யப்பட்ட வழக்கில், ‘புலன்விசாரணையில் குளறுபடி’ என்று சொல்லி 2019, அக்டோபர் மாதம் ஏழு பேரை விடுவித்தது நீதிமன்றம். நெல்லை சுத்தமல்லி அருகே வழக்கறிஞர் சரவணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் 2020, ஜனவரி மாதம் தீர்ப்பளித்த நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால், குற்றம்சாட்டப்பட்டவர் களை விடுவித்தது. மயிலாடுதுறை மாவட்டம், வரதம்பட்டு கிராமத்தில் சின்னகுஞ்சு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் கடந்த பிப்ரவரி மாதம் ‘போலீஸ் தரப்பில் சரியாக நிரூபிக்கவில்லை’ என்று கூறி குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்தது நீதிமன்றம்!

இதுமட்டுமல்ல... ஆதாரங்களைச் சேதாரமாக்கும் போலீஸாரின் சொதப்பல்களைப் பார்த்து ‘கேஸ் டிஸ்மிஸ்... கேஸ் டிஸ்மிஸ்’ என்று சொல்லி நீதிமன்றங்களுக்கே அலுத்துவிட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட போலீஸார் மட்டும் டிஸ்மிஸ் செய்யப்படுவதே இல்லை! சுகமாகக் காலாட்டிக்கொண்டே கரன்ஸியில் புரள்கிறார்கள்.

‘ஸ்காட்லாந்து போலீஸ்’ என்று பெருமை பீற்றிக்கொள்ளும் நமது காக்கிச்சட்டைகளுக்கு என்னதான் ஆகிவிட்டது, சோம்பேறிகள் ஆகிவிட்டார்களா, அலட்சியம் காட்டுகிறார்களா அல்லது திட்டமிட்டே வழக்குகளைக் கோட்டைவிடுகிறார்களா போன்ற கேள்விகள் போலீஸாரை நோக்கி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

வழக்கு நடத்துவது இருக்கட்டும்... முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதற்கே முக்கி முனகுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அதற்கும் நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னை அண்ணா நகரில், பெண் தொழிலதிபரை அந்தரங்கப் படங்களை எடுத்து மிரட்டிய விவகாரம், ராதிகா செல்வியின் தம்பி, திருமணம் செய்துகொண்டு கைவிட்ட பெண்ணொருவரின் விவகாரம், நடிகர் சூரி ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படும் நில விவகாரம் என ஒவ்வொன்றிலும் நீதிமன்றப் படியேறிய பிறகே முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறது காவல்துறை. அப்படியானால், முதல் தகவல் அறிக்கையும் பதியப்படாமல்... நீதிமன்றத்தை அணுகுவதற்கும் தெம்பில்லாமல் எத்தனை எத்தனை சாமானியர்கள் தினந்தோறும் காவல்நிலையங் களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டும்... கட்டைப் பஞ்சாயத்தால் பாதிக்கப்பட்டும் வேதனையில் உழன்று கொண்டிருப் பார்கள்!

முதல் தகவல் அறிக்கைக்கே இந்த லட்சணம் என்றால், குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதில் எவ்வளவு அலட்சியமும் அவலட்சணமும் அகம்பாவமும் காட்டுவார்கள் காவல்துறை அதிகாரிகள்!

கேஸ் டிஸ்மிஸ்! - சேதாரமாகும் ஆதாரங்கள்... கோட்டைவிடும் காவல்துறை

“என் மகன் தானாகக் கழுத்தை அறுத்துக்கிட்டானா?’’

பிரபல வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார், 2011-ல் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். நீதி கேட்டு கடுமையாகச் சட்டப் போராட்டம் நடத்திய சங்கரசுப்பு, “என் மகனை தெற்கு காலனி அருகேயுள்ள குளத்தில் பிணமாகக் கண்டெடுத்தார்கள். கழுத்தில் நான்கு வெட்டுக்காயங்கள் இருந்ததைவைத்து, ‘இது கொலைதான்’ என்றது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை. கொலையின் பின்னணியில் சில போலீஸ் அதிகாரிகள்மீது சந்தேகம் இருந்தது. தற்கொலை வழக்காக போலீஸ் ஜோடனை செய்யப் பார்த்ததால், வழக்கு சி.பி.ஐ-க்குப் போனது. அவர்களும், இது தற்கொலையாக இருக்கலாம் என்று மழுப்பினார்கள்.

முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையில் சிறப்பு டீம் அமைக்க உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். அவர்களும், ‘நடந்தது கொலைதான். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று சொல்லிவிட்டனர். ஒன்பது வருடங்களாகியும் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவிடாமல் சதி செய்கிறது போலீஸ். `என் மகன், தானாகக் கழுத்தை அறுத்துக்கொண்டானா, நீதி எங்கே இருக்கிறது?’ என்று கண்ணீர் வடித்தார் சங்கரசுப்பு. சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருக்கே இந்த கதி என்றால், பொதுமக்களின் வழக்குகள் என்னவாகும்?

ஒரு வழக்கைப் பொறுத்தவரை எஃப்.ஐ.ஆர் பதிவது தொடங்கி அதில் சுமத்தப்படும் குற்றங்களுக்கு ஏற்ப மிகச் சரியான சட்டப் பிரிவுகளைப் பதிவுசெய்வது, தடயங்கள் சேகரிப்பது, குற்றத்தில் தொடர்புடையவர் களை விசாரிப்பது, திறம்பட குற்றப் பத்திரிகையை எழுதுவது இவற்றிலெல்லாம் போலீஸாரின் திறமையின்மையே ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தோல்வியடைய முக்கியக் காரணமாகிறது. கொலை, கொள்ளைகளில் போதிய ஆதாரம் சேகரிக்காமல் கோட்டைவிடுவது, எஃப்.ஐ.ஆரில் குழப்பம், அப்ரூவர் மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் குளறுபடிகள், பிறழ் சாட்சியங்கள்... இப்படிப் பல நடவடிக்கைகளில் போலீஸார் சொதப்புகிறார்கள். உதாரணமாக, மயிலாடுதுறை காவல் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்குகளில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மட்டுமே ஐந்து வழக்குகளில் போதிய ஆதாரம் இல்லாததால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எங்கே கோட்டைவிடுகிறது போலீஸ்?

இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகரிடம் பேசினோம். ‘‘நீதிமன்றக் காவலில் குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, வழக்குக்குத் தேவையான சாட்சிகள், ஆதாரங்களை போலீஸார் புலன்விசாரணை செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள். அத்துடன், வழக்கின் தன்மைக்கேற்ப 60 அல்லது 90 நாள்களுக்குள் விசாரணையின் இறுதி அறிக்கையை போலீஸார் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இங்குதான் காவல்துறையினர் கோட்டைவிடுகின்றனர். பெரும்பாலான வழக்குகளில் இறுதி அறிக்கையை உரிய நேரத்தில் நீதிமன்றங்களில் சமர்ப்பிப்பதில்லை. அதனால், அந்தக் குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் ஜாமீனில் வெளியில் வந்துவிடுவார்கள்.

பொதுவாக, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கு விசாரணை நடைபெறும். முதலில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவார். பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர், குறுக்கு விசாரணை நடத்துவார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, சாட்சிகள், ஆதாரங்கள் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படும். இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். காவல்துறையினரின் விசாரணை அடிப்படையிலேயே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதம் அமையும். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர், குற்றப் பத்திரிகையிலுள்ள குளறுபடிகளை எளிதாகக் கண்டுபிடித்து, சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்து உடைத்துவிடுகிறார். அதனால்தான், வழக்குகளிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகின்றனர். இது போன்ற சூழலில், `ஆதாரங்களைத் திரட்டி குற்றத்தை நிரூபிக்கத் தவறும் காவல்துறை எதற்கு?’ என்ற கேள்வி எழுகிறது. சிவில் வழக்குகளை வழக்கறிஞர்களே நடத்து வதைப்போல, குற்ற வழக்குகளையும் வழக்கறிஞர்களே நடத்தினால் தண்டனை சதவிகிதம் அதிகரிக்கும்’’ என்றார்.

கேஸ் டிஸ்மிஸ்! - சேதாரமாகும் ஆதாரங்கள்... கோட்டைவிடும் காவல்துறை

சி.பி.ஐ-யும் விதிவிலக்கல்ல!

உள்ளூர் போலீஸ் மட்டுமல்ல... வழக்குகளைச் சொதப்புவதில் சி.பி.ஐ கொஞ்சமும் சளைத்ததல்ல. 1980-களில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என மூன்று மாநிலங்களையும் உலுக்கிய வழக்கு, வழக்கறிஞர் ரஷீத் கொலை வழக்கு. அப்போது, கர்நாடகா உள்துறை அமைச்சராக இருந்த ஜாலப்பாதான் வழக்கின் முதல் குற்றவாளி. 1987-ல் நடந்த கொலையில், 30 வருடங்களுக்கும் மேலாக வழக்கு மெதுவாக உருண்டுகொண்டிருக்கிறது.

இந்தக் கொலை வழக்கை விசாரித்த முன்னாள் சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனிடம் பேசினோம். ‘‘கர்நாடகா உள்துறை அமைச்சராக இருந்த ஜாலப்பாவுக்கும், கல்வி நிறுவனங்களை நடத்திவந்த சதாசிவம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. சதாசிவத்துக்காக வழக்கறிஞர் ரஷீத் ஆஜரானார். வழக்கிலிருந்து விலகுவதற்காக மிரட்டியும் அவர் பணியவில்லை. அதனால், அவர்மீது பொய் வழக்கு போட்டார்கள். இதையெல்லாம் நீதிமன்றத்தில் சொல்லிக் கதறினார் ரஷீத். ஜாலப்பா மீதான வழக்கு, விசாரணைக்கு வரும் முன்பு திடீரென பெங்களூரில் ரஷீத் காணாமல் போய்விட்டார். ஓரிரு நாள்கள் கழித்து சேலம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரஷீத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரின் மூக்கில் காயங்கள் இருந்தன. இரண்டு விரல்கள் நசுக்கப்பட்டிருந்தன. இதை விசாரித்தவர்கள், தற்கொலை என்று சொல்லிவிட்டார்கள். அதன் பிறகுதான் விசாரணை அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்டேன்.

ரஷீத் முதலில் பெங்களூரில் ஒரு லாட்ஜில் தங்கியிருக்கிறார். அவரை அழைத்துச் சென்று இன்னொரு லாட்ஜில் தங்கவைத்திருக்கிறார்கள். அங்கு திடீரென காணாமல் போனவர், பிறகு சடலமாகக் கண்டெடுக்கப் படுகிறார். இந்த வழக்கில் போலீஸ் எஸ்.ஐ., சில காவலர்கள், ரயில்வே கேங்மேன்கள் ஆகியோரைக் கைது செய்தேன். வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடந்தது. ‘ஆயில்’ என்று அழைக்கப்பட்ட கூலிப்படைத் தலைவன் சாட்சிகளை மிரட்ட ஆரம்பித்தான். ‘சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று கோவை, சேலம் போலீஸாரிடம் நான் புகார் கொடுத்து, பாதுகாப்பு கேட்டேன். யாரும் கண்டுகொள்ளவில்லை. எதிர்பார்த்தபடியே, ரஷீத் கொலை வழக்கில் சாட்சிகள் பல்டி அடித்தனர். அமைச்சர் ஜாலப்பா விடுவிக்கப்பட்டார். வழக்கில் தொடர்புடைய காவல் துணை ஆணையருக்கு இரண்டு ஆண்டுகளும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிற்பாடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப் பட்டுவிட்டனர்.

அப்போது பல்டி அடித்த சாட்சிகள் மூவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ அதிகாரிகள் தீவிரமாக இருப்பதாக, சமீபத்தில் கேள்விப்பட்டேன். என்னுடைய 30 வருட அனுபவத்தில் வி.வி.ஐ.பி-கள் தொடர்புள்ள ஊழல் வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடுகள் இருக்கும். ஆட்சிகள் மாறும்போது, வழக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகச் சொல்லி வாபஸ் பெறுவார்கள். பொதுவாகவே, உயரதிகாரிகள் சொல்வதைத்தான் நாங்கள் கேட்க வேண்டிய நிலை இருக்கிறது. கீழ்மட்ட விசாரணை அதிகாரிகளைச் சுதந்தரமாக விசாரிக்கவிட்டால், ஒரு குற்றவாளிகூட தப்பிக்க முடியாது’’ என்றார் கறாராக!

ரகோத்தமன் - விஜயராஜ்
ரகோத்தமன் - விஜயராஜ்

“போலீஸைக் குற்றம் சொல்லாதீர்கள்!”

பூந்தமல்லி தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தின் சிறப்பு அரசு வழக்கறிஞர் விஜயராஜிடம் பேசினோம். ‘‘குற்றத்தைப் பார்த்த சாட்சிகள், ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர்கள், மெடிக்கல் ஆதாரம் என எல்லாம் இருந்தாலும், முக்கியமான சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறுவதுதான் குற்றவாளிகள் தப்பிக்க அடிப்படைக் காரணம். இந்த விவகாரத்தில் அரசையும் காவல்துறையையும் பொத்தாம் பொதுவாகக் குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது.

‘சாட்சியாக போகக் கூடாதுப்பா... நடையா நடக்கவெப்பாங்க. போலீஸுக்கு பேப்பர், இங்க் பாட்டிலெல்லாம் வாங்கிக் கொடுக்கணும்’ என்று ஏதோ படத்தைப் பார்த்துவிட்டு நீதிமன்றம் என்றாலே அசூயையுடன் பார்க்கும் மனோபாவம் பலருக்கும் இருக்கிறது. உண்மை அதுவல்ல. சாட்சிகளுக்கான பாதுகாப்பை ‘சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் 2019’ உறுதி செய்கிறது. குருவி தலையில் பனங்காயை வைத்ததுபோல, ஏற்கெனவே பணிச்சுமையில் இருக்கும் போலீஸாருக்கு நெருக்கடி கொடுப்பது சரியல்ல’’ என்றார்.

முன்பெல்லாம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சார்ஜ் சீட் போடுவதற்கென்றே நிபுணத்துவம் பெற்றவர்கள் இருப்பார்கள். எந்த வழக்குக்கு எப்படி சார்ஜ் சீட் எழுத வேண்டும், எந்தச் சட்டப் பிரிவைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு சில காவலர்கள், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கே பாடம் எடுப்பார்கள். ஆனால், இப்போது அப்படிப்பட்ட வர்களைக் காண்பதே அரிதாகிவிட்டது.

அதேநேரம் காவல்துறையினர் ஒருவரை என்கவுன்ட்டர் செய்தால், ‘அது என்கவுன்ட்டர் இல்லை... தற்காப்புக்காகவே சுட்டோம்’ என்று அறிக்கை அளிப்பார்கள். அப்படித் தயாரிக்கப்படும் அறிக்கையை, எத்தனை வழக்கறிஞர்களைவைத்து விசாரித்தாலும் உடைக்க முடியாத அளவுக்கு சட்டப் பிரிவுகளைக் கையாண்டு கண்ணும் கருத்துமாக வழக்கைக் கொண்டு செல்வார்கள். அந்தச் சிரத்தையை சிறார் பாலியல் வழக்குகளிலும், பிற குற்ற வழக்குகளிலும் கையாண்டாலே குற்ற வாளிகள் விடுதலையாவதைத் தவிர்த்துவிடலாம்.

ஆயிரம் சாமானியர்கள் பாதிக்கப்படலாம்; ஆனால், ஒரு குற்றவாளி தண்டிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறதுபோல தமிழகக் காவல்துறை!

“குற்ற வழக்குகளில் பெஸ்ட்!”


இது குறித்தெல்லாம் மேற்கு மண்டல ஐ.ஜி-யான பெரியய்யாவிடம் கேட்டோம். “குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை ஆவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், கொலை வழக்குகளில் தண்டனை வாங்கிக் கொடுத்ததில், இந்திய அளவில் முன்னணியிலிருக்கிறது தமிழகக் காவல்துறை. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் இந்தியாவிலேயே 90 சதவிகிதம் தண்டனை வாங்கிக் கொடுப்பது தமிழகம்தான். குற்ற வழக்குகளில் பெஸ்ட் ஆகச் செயல்படுவதை வெளிப்படுத்தும் காவல்துறை, திறனாய்வுப் போட்டிகளில் தொடர்ந்து அகில இந்திய அளவில் சாம்பியன் பட்டத்தைப் பெற்றுவருகிறது.

தமிழகத்திலுள்ள நான்கு மண்டலங்களில், கொலை வழக்குகளில் தண்டனை வாங்கிக் கொடுத்த பட்டியலில் மேற்கு மண்டலம் முதலிடத்தில் இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் குற்றம்சார்ந்த 46 வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்திருக்கிறார்கள். அதில், 22 கொலை வழக்குகள். கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற முக்கிய குற்ற வழக்குகளில் கண்டிப்பாக தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதில் காவல்துறை உறுதியாக இருக்கிறது. குற்றம்சாட்டப்படுபவர்கள் விடுதலையாகும் வழக்குகளை சீரியஸாக விவாதிக் கிறோம். பெரும்பாலும் பிறழ் சாட்சியங்களால்தான் இவர்கள் விடுதலையாகிறார்கள். அதையும் சரிசெய்ய உறுதியான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்” என்றார் பொறுப்புடன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு