Published:Updated:

வீட்டை எழுதிக்கொண்டு பெற்றோரை விரட்டிய மகன்; சொத்துப் பத்திரத்தை ரத்துசெய்த சப்-கலெக்டர்

ஜெ.முருகன்
தனம் ஏ கே

ரூ.1.5 கோடி மதிப்புள்ள வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு பெற்றோரை வெளியேற்றிய மகனின் சொத்துப் பத்திரத்தை ரத்துசெய்திருக்கிறது புதுச்சேரி முதியோர் பராமரிப்பு தீர்வு நடுவர் தீர்ப்பாயம்.

மகனிடம் இருந்து சொத்தை மீட்க மனு அளித்த தந்தை
மகனிடம் இருந்து சொத்தை மீட்க மனு அளித்த தந்தை

புதுச்சேரி வழுதாவூர் சாலை, கவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த சங்கரதாஸ் (61) - சிவகாமி (59) தம்பதிக்கு ராஜ்மோகன்(35) என்ற மகனும் சவிதா (29) என்ற மகளும் இருக்கின்றனர். சவிதாவுக்கு திருமணமாகி புதுச்சேரியில் கோபாலன்கடை என்ற பகுதியில் வசித்துவருகிறார். ஐ.டி.ஐ படித்தவரான ராஜ்மோகன், சாதனா என்ற பெண்ணை காதலித்திருக்கிறார். மகனின் காதலையும் ஆசையையும் நிறைவேற்ற நினைத்த சங்கரதாஸ்-சிவகாமி தம்பதியினர், இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர். முதல் தளத்தில் மகனையும் மருமகளையும் தங்கவைத்த சங்கரதாஸ், தனது மனைவியுடன் தரைதளத்தில் வசித்துவந்தார்.

சொத்துப் பத்திரம்
சொத்துப் பத்திரம்
விகடன்

இந்நிலையில், வங்கியில் கடன் பெற்று சொந்தமாக வியாபாரம் செய்யப்போவதாகவும், அதற்கு வீட்டை தனது பெயருக்கு எழுதித் தரும்படியும் தந்தை சங்கரதாஸிடம் கேட்டிருக்கிறார் ராஜ்மோகன். அதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு ரூ.1.5 கோடி மதிப்புள்ள 1,614 சதுர அடி வீட்டை தனது மகன் பெயருக்கு பத்திரம் எழுதிக்கொடுத்தார் சங்கரதாஸ். சில நாள்களில் தனது பெற்றோர்கள்மீது வெறுப்பு வார்த்தைகளை உமிழத் தொடங்கிய ராஜ்மோகன், ஒருகட்டத்தில் அவர்களை வீட்டைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்.

அன்பைக் கொட்டி வளர்த்த மகனின் இந்தச் செயலால் நொந்துபோன அந்தப் பெற்றோர், தனது மகள் திருமணம் செய்துகொண்ட வீட்டில் அடைக்கலம் புகுந்தனர். ஆனால், அங்கு நிலவிய பொருளாதார நெருக்கடி, அவர்களை வாட்டத் தொடங்கியது. இறுதியாக, ’என் பெயரில் இருந்த வீட்டை ஏமாற்றிப் பறித்துக்கொண்ட என் மகன், என்னையும் என் மனைவியையும் வீட்டை விட்டு துரத்திவிட்டார். அவரிடமிருந்து எனது சொத்தை மீட்டுத் தாருங்கள்’ என்று சாரம் பழைய ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் முதியோர் பராமரிப்புத் தீர்வு நடுவர் தீர்ப்பாய அலுவலகத்தில் புகார் அளித்தார். மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ராஜ்மோகனிடமும், அவரது உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ’வீடு எனது பெயரில் உள்ளது.

முதியோர்கள்
முதியோர்கள்

அது எனக்குத்தான் சொந்தம். அதனால், அவர்களை வீட்டினுள் அனுமதிக்க முடியாது’ என்று கல் மனதுடன் சீறிய மகனிடம், 2-ம் தளத்தில் இருக்கும் வீட்டிலாவது அவர்களை வசிக்க அனுமதிக்கும்படி அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், விடாப்பிடியாக அதையும் ஏற்க மறுத்தார் மகன். அதையடுத்து, மகன் ராஜ்மோகனுக்கு சங்கரதாஸ் எழுதிக் கொடுத்த 1,614 சதுர அடி பரப்புகொண்ட வீட்டின் பத்திரத்தை அதிரடியாக ரத்துசெய்த தீர்ப்பாய நடுவர், சங்கரதாஸுக்கு சொந்தமான அந்தச் சொத்தை அவரிடமே திருப்பித் தர உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகலை பாதிக்கப்பட்ட பெற்றோர் சங்கரதாஸ்–சிவகாமியிடம் ஒப்படைத்தார் சப் கலெக்டர் சுதாகர். அதேபோல, உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்துக்கும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறைக்கும் அந்த நகல் அனுப்பிவைக்கப்பட்டது.