Published:Updated:

இறுதிக்கட்டத்தில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு... “நியாயம் கிடைக்குமென நம்புகிறோம்!”

டாக்டர் சுப்பையா
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் சுப்பையா

- தழுதழுக்கும் உறவுகள்...

இறுதிக்கட்டத்தில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு... “நியாயம் கிடைக்குமென நம்புகிறோம்!”

- தழுதழுக்கும் உறவுகள்...

Published:Updated:
டாக்டர் சுப்பையா
பிரீமியம் ஸ்டோரி
டாக்டர் சுப்பையா

கடந்த ஏழு வருடங்களாக உருண்ட ஒரு கொலை வழக்கு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவுக்குப் பிறகு தீர்ப்பை நோக்கி நகர்ந்திருக்கிறது. தமிழகத்தின் பிரபல நரம்பியல் மருத்துவரான சுப்பையா, 2013-ம் ஆண்டு, செப்டம்பர் 14 அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். தமிழகத்தையே குலை நடுங்கச் செய்த இந்தக் கொலையின் பின்னணி குறித்து 29.9.2013 தேதி யிட்ட ஜூனியர் விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டோம். வழக்கின் நிலை தொடர்பாக தொடர்ச்சியாக எழுதியும் வந்திருக்கிறோம். 26.2.2020 தேதியிட்ட ஜூ.வி-யிலும், ‘சுப்பையா கொலை வழக்கின் இப்போதைய நிலை என்ன?’ என்கிற தலைப்பில் செய்தி வெளியானது. இந்தநிலையில்தான், சுப்பையா கொலை வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.

ஒரு சிறு அறிமுகம்... அரசு நரம்பியல் மருத்துவரான சுப்பையாவுக்கு கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்புதான் பூர்வீகம். இவரின் தாய்மாமன் பெருமாள், அன்னபழம் என்பவரை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சிறிது காலத்திலேயே, பெருமாளைவிட்டுப் பிரிந்த அன்னபழம், மூன்று வருடங்கள் கழித்து கையில் ஒரு குழந்தையுடன் வந்து சொத்தில் பங்கு கேட்டிருக்கிறார். ‘அந்தக் குழந்தை எனக்குப் பிறக்கவேயில்லை’ என மறுத்த பெருமாள், தனது சொத்தையெல்லாம் தன் சகோதரியும், சுப்பையாவின் தாயுமான அன்னக்கிளியின் பெயரில் எழுதி வைத்துவிடுகிறார். பிரச்னை இங்கேயிருந்துதான் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இறுதிக்கட்டத்தில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு... “நியாயம் கிடைக்குமென நம்புகிறோம்!”

சொத்தில் பங்கு கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் அன்னபழம் தொடர்ந்த வழக்கில் அவருக்கு சார்பாகத் தீர்ப்பாகிவிடுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அன்னக்கிளி தொடர்ந்த வழக்கு கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்தபோது, அன்னக்கிளியும் அன்னபழமும் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அதன்படி, அஞ்சுகிராமத்திலுள்ள இரண்டே கால் ஏக்கர் நிலம் அன்னக்கிளி வசம் வந்திருக்கிறது.

வருடங்கள் கழிந்தன... அன்னபழத்தின் மகன் பொன்னுசாமி, தான் வளர்ந்து பெரியவரானதும் தன் தாய் செய்துகொண்ட சமாதான உடன்படிக்கை செல்லாது என்று அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற மறுசீராய்வு வரை சென்று தள்ளுபடியாகிவிட்டது. இதையடுத்து, தன் பெயரிலேயே இல்லாத அஞ்சுகிராம சொத்தை தன் மனைவி மேரி புஷ்பத்தின் பெயரில் பொன்னுசாமி செட்டில்மென்ட் எழுதிக் கொடுக்கிறார். நாகர்கோவில் - கன்னியாகுமரி சாலையை ஒட்டியிருக்கும் இந்த நிலத்தின் இன்றைய மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் என்கிறார்கள். இந்த நிலத்தின்மீது கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, யாரும் உரிமை கொண்டாட தடையாணையும் பெறுகிறார் பொன்னுசாமி. இதை எதிர்த்து சுப்பையாவும் போலீஸில் புகார் அளிக்க, இருதரப்புக்கும் தகராறு முற்றியிருக்கிறது.

இறுதிக்கட்டத்தில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு... “நியாயம் கிடைக்குமென நம்புகிறோம்!”

இந்தநிலையில்தான், 2013, செப்டம்பர் 14-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த மருத்துவர் சுப்பையாவை, கூலிப்படையை ஏவி பொன்னுசாமி வகையறா வெட்டி சாய்த்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பையா செப்டம்பர் 23-ம் தேதி இறந்துபோனார். இந்தக் கொலை வழக்கில் பொன்னுசாமி, அவரின் மனைவி மேரி புஷ்பம், மகன்கள் வழக்கறிஞர் பேசில், போரிஸ், பேசிலின் நண்பர்களான வழக்கறிஞர் வில்லியம்ஸ், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், கூலிப்படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 2015-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, 2017-ல் சாட்சிகள் விசாரணையுடன் சூடுபிடித்தது. பிறகு அப்படியே தேங்கிப்போனது.

சமீபத்தில், ‘வழக்கு விசாரணையை எந்த வகையிலும் தாமதப்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என்று சுப்பையாவின் மைத்துனர் மோகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த மே 31-ம் தேதி மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் இந்த வழக்கை விசாரித்து, தீர்ப்பளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.

இறுதிக்கட்டத்தில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு... “நியாயம் கிடைக்குமென நம்புகிறோம்!”

வழக்கு தொடர்ந்த மோகனிடம் பேசினோம். “இந்த வழக்கில் இதுவரை 57 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். 173 ஆவணங்கள், 42 பொருள்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பிறழ் சாட்சிகளாக யாரும் மாறவில்லை. கடந்த 2019-ம் ஆண்டே இந்த வழக்கை தினமும் விசாரித்து, தீர்ப்பளிக்க வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல, 2020-ம் ஆண்டிலும், ‘ஒரே மாதத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஒவ்வொரு முறை தீர்ப்பு தேதி நெருங்கும் வேளையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பினர் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி வழக்கைத் தள்ளிப்போடுகிறார்கள். இந்தமுறை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வே உத்தரவிட்டிருப்பதால், விரைவில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றார் தழுதழுத்த குரலில்.

அரசு தரப்பு வழக்கறிஞர் விஜய்ராஜிடம் பேசினோம். “வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எதுவும் பேச முடியாது” என்றார். பொன்னுசாமியின் தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “இது முழுக்க முழுக்க கற்பனைகளால் போலீஸ் உதவியுடன் ஜோடிக்கப்பட்ட வழக்கு. நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிப்போம்” என்றனர்.

தமிழகத்தையே உலுக்கிய ஒரு வழக்கு, இறுதி அத்தியாயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. தீர்ப்பு என்ன வருகிறது என்று பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism