Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `ரஜினிக்கு அடுத்த மாதம் சம்மன்!’ - ஆணையத்தின் வழக்கறிஞர்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்துக்கு ஏற்கெனவே அனுப்பிய சம்மனுக்கு, படப்பிடிப்பை காரணம் காட்டி விலக்கு கேட்ட நிலையில், ’ரஜினிக்கு அடுத்த மாதம் சம்மன் அனுப்பப்படும்’ என ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் தெரிவித்திருக்கிறார்.

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 2018-ம் ஆண்டு, மே 22-ம் தேதி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் திடீரென ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு. கொரோனா ஊரடங்கால் இந்த ஆணையத்தின் விசாரணை கடந்த எட்டு மாதங்களாகத் தடைப்பட்டது. கடந்த மாதம் முதல் விசாரணை மீண்டும் நடைபெற்றுவருகிறது. இந்த ஆணையம், இதுவரை 22 கட்ட விசாரணையை நடத்தி முடித்திருக்கிறது.

அருள் வடிவேல் - ஆணையத்தின் வழக்கறிஞர்
அருள் வடிவேல் - ஆணையத்தின் வழக்கறிஞர்

23-வதுகட்ட விசாரணை கடந்த நான்கு நாள்களாக நடைபெற்றுவருகிறது. இதில், ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்ட அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தநிலையில், ஒரு நபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக 23-வதுகட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது. இதில், 49 பேருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை, 775 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு, 586 சாட்சிகளிடம் விசாரணை செய்யப்பட்டிருக்கிறது. அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி மாதம் நடைபெறும். அதில், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விசாரிக்கப்படவிருக்கிறார்கள். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பணி, அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறோம்” என்றார்.

``விசாரணை ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் எப்போது விசாரணைக்கு அழைக்கப்படுவார்” என்ற நம் கேள்விக்கு, ``அடுத்த மாதம் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படும்” என்றார். துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில்பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ரஜினிகாந்த் நேரில் ஆறுதல் கூறினார்.

ஆறுதல் கூறிய ரஜினி
ஆறுதல் கூறிய ரஜினி

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில், வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம். போலீஸை மட்டும் குறை கூறுவது தவறு. மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும் போலீஸ்தான். போராட்டத்தில் பங்குகொண்டு போலீஸாரையே தாக்கிய சமூக விரோதிகளை உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டும்” எனக் கூறியிருந்தார். ரஜினியின் இந்தப் பேச்சு பல தரப்பினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ``ரஜினியை விசாரணைக்கு ஆஜர்படுத்த வேண்டும்” எனப் பல தரப்பினரும் ஆணையத்தில் மனு அளித்தனர். இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் ஆஜராக சம்மன் அனுப்பபட்டது. ஆனால், தனக்கு படப்பிடிப்பு பணிகள் இருப்பதாலும், தான் தூத்துக்குடி வந்தால் தன்னைக் காண அதிகப்படியான ரசிகர்கள் திரள்வதால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதாலும் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கும்படியும், ஆணையம் கேட்கும் கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது. ரஜினியின் வழக்கறிஞர் இளம்பாரதி இந்தக் கோரிக்கை மனுவை ஆணையத்தில் சமர்ப்பித்தார்.

ஒருநபர் விசாரணை ஆணைய கட்டிடம்
ஒருநபர் விசாரணை ஆணைய கட்டிடம்

ரஜினி கூறிய இரண்டு காரணங்களில் முதல் காரணத்தை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டாவது காரணத்தின் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அன்று மட்டும் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது. கொரோனா ஊடரங்குக்குப் பிறகு நடைபெற்ற விசாரணைகளில் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்படவில்லை. இது குறித்தும் பல தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இந்தநிலையில், இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு, `ரஜினிக்கு அடுத்த மாதம் சம்மன் அனுப்பப்படும்’ என ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் கூறியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு