Published:Updated:

நீதி ஜெயிச்சிருக்கு! - போராடி வென்ற பூவரசன்...

பூவரசன்
பிரீமியம் ஸ்டோரி
News
பூவரசன்

கை, கால், முகமெல்லாம் வீங்கிப் போயிருந்ததைப் பார்த்த ஜட்ஜ் அம்மா, ‘போலீஸ் அடிச்சாங்களா?’னு கேட்டாங்க.

2014-ல் மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞர் பூவரசன், போலீஸ் கஸ்டடியில் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார். ஏழாண்டுகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட இந்த இளைஞருக்கு தமிழக அரசு தற்போது இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட இளைஞர் பூவரசனை சந்தித்துப் பேசினோம்... ‘‘அப்போ எனக்கு 28 வயசு. பாலாற்றுல நடக்குற மணல் கொள்ளைக்கு எதிரா போராடுனேன். அதுக்காக, 23.09.2014 அன்னிக்கு நைட் 11 மணிக்கு காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையில் போலீஸ்காரங்க, திடீர்னு என் வீட்டுக்கு வந்து அடிச்சு இழுத்துட்டுப் போனாங்க. ஸ்டேஷன்ல என் டிரஸைக் கழட்டி, நிர்வாணமா நிக்க வெச்சு லத்தியால அடிச்சு, சித்ரவதை பண்ணாங்க. வலி தாங்காம கத்தினப்ப வாய்க்குள்ள லத்தியை விட்டுக் குத்துனவங்க, மர்ம உறுப்பையும் காயப்படுத்தினாங்க. ‘பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிச்சேன். இன்ஸ்பெக்டரையே மிரட்டுனேன்’னு எஃப்.ஐ.ஆர் போட்டு வாலாஜா பேட்டை கோர்ட்டுல ஆஜர்படுத்துனாங்க.

நீதி ஜெயிச்சிருக்கு! - போராடி வென்ற பூவரசன்...

கை, கால், முகமெல்லாம் வீங்கிப் போயிருந்ததைப் பார்த்த ஜட்ஜ் அம்மா, ‘போலீஸ் அடிச்சாங்களா?’னு கேட்டாங்க. நானும், ‘ஆமாங்க அம்மா, என்மேல பொய் கேஸ் போட்டிருக்காங்க’னு சொன்னேன். போலீஸ் மேல கோவப்பட்ட ஜட்ஜ் அம்மா, என்னை ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் ட்ரீட்மென்ட் கொடுக்கச் சொன்னாங்க. வாலாஜாபேட்டை கவர்மென்ட் ஹாஸ் பிட்டலுக்குப் போனோம். முதலுதவி சிகிச்சை கொடுத்த டாக்டரு, ‘உள்காயம் அதிகமாக இருக்கு. வேலூர் ஜி.ஹெச்-க்கு கூட்டிட்டுப் போங்க’னு சொன்னாரு. 108 ஆம்புலன்ஸ்ல கிளம்பும்போது, எங்களை மறிச்ச இன்ஸ்பெக்டர் காண்டீபன் துப்பாக்கியைக் காட்டி, ‘போலீஸை மாட்டிவிட்டா உன் குடும்பத்துல புழு பூச்சிக்கூட மிஞ்சாது’னு மிரட்டினாரு. உடனே என் அப்பா வக்கீலுக்குத் தகவல் சொல்ல... அவர் ஜட்ஜ் அம்மாகிட்ட சொல்லிட்டாரு. அவங்க வேலூர் எஸ்.பி-க்குத் தகவல் சொல்லி, ‘பூவரசனை உடனே என் முன்னாடி ஆஜர்படுத்தணும்’னு உத்தரவு போட்டாங்க. என்னை கோர்ட்டுல கொண்டுபோய் ஆஜர்படுத்தினதும், உண்மை நிலவரத்தைத் தெரிஞ்சுகிட்ட ஜட்ஜ் அம்மா, என்னை சொந்த ஜாமீன்ல விடுவிச்சாங்க.

அடுத்து, மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை இலவசமா எடுத்து நடத்துற வக்கீல் சுரேஷ், எனக்கு நடந்த அநீதிக்கு நியாயம் கேட்டு மெட்ராஸ் ஹை கோர்ட்டுல வழக்கு போட்டாரு. இந்த வழக்கு விசாரணையிலதான், ‘அப்பட்டமான மனித உரிமை மீறல் நடந்திருக்குது’னு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க 2015-ம் வருஷமே உத்தரவு போட்டது. நீதி கிடைச்சாலும், நிம்மதி கிடைக்கல. இழப்பீடு தரமறுத்து அரசுத் தரப்புல மேல்முறையீடு செஞ்சாங்க. இப்போ மேல்முறையீட்டுலேயும், எனக்கு வழங்கப்பட்ட நீதி உறுதி செய்யப் பட்டிருக்குது. சமீபத்துல வேலூர் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து ரெண்டு லட்ச ரூபாய் இழப்பீடு கொடுத்தாங்க. போலீஸ் அத்துமீறலால என்னால கல்யாணம்கூட செஞ்சிக்க முடியலை. இந்த மன உளைச்சல்லேயே என் அப்பா, இறந்துபோயிட்டாரு. என் வாழ்க்கையே சீர்குலைஞ்சு போச்சு... ஆனாலும், கடைசியில நீதி ஜெயிச்சிருக்கு’’ என்றார் நம்பிக்கையுடன்!

ஒட்டுமொத்த காவல்துறையின் சித்ரவதை மனோபாவம் மாறுவது மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்க முடியும்!