Published:Updated:

‘‘தவமணி வெளியே வந்தால், பல உண்மைகள் வெளிவரும்!”

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு... திகில் கிளப்பும் வழக்கறிஞர்

பிரீமியம் ஸ்டோரி

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த விவகாரத்தில் பலர்மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

இந்த நிலையில், ‘`தற்போது போலீஸ் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அனைவரும் பலியாடுகள்தான். இன்னும் பலர் வெளியில் இருக்கின்றனர்’’ என்று திகில் கிளப்பியிருக்கிறார், டி.எஸ்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் தவமணியின் வழக்கறிஞர் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரன்
ரவிச்சந்திரன்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தவமணி. டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் ஒருவரிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்தவர். 2012-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு வினாத்தாள்களை விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப் பட்டார். இவர்மீது, கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதியப்பட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். கொலை வழக்கில் விடுதலையான நிலையில், டி.என்.பி.எஸ்.சி வழக்கில் விசாரணைக் கைதியாக சிறையில் இருக்கிறார். இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி முறைகேடு குறித்து சில விஷயங்களை நம்மிடம் சொன்னார், தவமணியின் வழக்கறிஞர் ரவிச்சந்திரன்.

‘‘டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக, தவமணியுடன் சிவகுரு, ரவிக்குமார் ஆகியோரும் கைதானார்கள். ‘தவமணிக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால் டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள் மீண்டும் தொடரும்’ என்று சொல்லி, 2022-ம் ஆண்டு வரை தவமணியைச் சிறையில் வைப்பதற்கான உயர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. அதனால், கடந்த ஏழு ஆண்டுகளாக விசாரணைக் கைதியாகவே தவமணி சிறையில் இருக்கிறார். நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி சொன்ன விஷயம் உண்மையென்றால், தவமணி சிறையில் இருக்கும்போது டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள் எப்படி நடந்திருக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பிய ரவிச்சந்திரன் தொடர்ந்தார்.

‘‘டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் மற்றும் சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் முக்கியமான போட்டித்தேர்வு பயிற்சி மையத்தினர் என 30 நபர்கள்குறித்து விசாரணையின்போது தவமணி சொல்லி யிருக்கிறார். அவர் குறிப்பிட்டிருந்தவர்களில் ஒருவர்தான் தற்போது கைதாகியுள்ள ஜெயக்குமார். ஆனால், மிச்சம் இருப்பவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. தவமணியைக் கைதுசெய்தபோது அவரிடமிருந்து 81 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, ஒரு ரூபாய்கூட பறிமுதல் செய்யப்படவில்லை.

முறைகேடுகள் குறித்த அனைத்து விவரங்களும் சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு நன்கு தெரியும். இத்தனை ஆண்டுகள் விட்டுவிட்டு கண்துடைப்புக்காக இப்போது நடவடிக்கை எடுக்கிறார்கள். தவமணி உட்பட போலீஸாரிடம் சிக்கியுள்ள அனைவருமே பலியாடுகள்தான். 2005-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தவமணி மூலம் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முறைகேடாக அரசுப்பணியில் சேர்ந்திருக்கின்றனர். தவிர, தவமணியுடன் தொடர்புடையவர்கள்மூலம் 2020-ம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கானோர் முறைகேடாக அரசுப்பணியில் சேர்ந்திருக்கின்றனர். இந்த விவகாரத்தில், டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் முதல் முதல்வர் அலுவலகம் வரை தொடர்பு இருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு

தற்போது வெளியான குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ‘அழியும் மை’ பயன்படுத்தப் பட்டதாகச் சொல்வதும் அப்பட்டமான பொய். வினாத்தாள் விற்பனை மூலமாகத்தான் முறைகேடு நடக்கிறது. அதை அனைவரும் மூடிமறைக் கிறார்கள். தேர்வுக்கு முன்பே பயிற்சி மையங்களிடம் வினாத்தாள்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்துவிடுவார்கள். வினாத்தாள்களை விலைக்கு வாங்கிய பயிற்சி நிறுவனங்கள், தங்களின் மாணவர்களுக்கும் மற்ற சிறு பயிற்சி நிறுவனங்களுக்கும் விற்பனை செய்வார்கள். போட்டித்தேர்வுக்காக பயிற்சி அளித்துவரும் பல முன்னணி நிறுவனங்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுவருகின்றன. அந்த வகையில்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு பயிற்சி மையம் சிக்கியது. டி.என்.பி.எஸ்.சி போட்டித்தேர்வில் வெற்றிபெற்றவர்களின் பின்னணியை விசாரித்தாலே பல முறைகேடுகள் வெளிவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2005-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை குரூப்-1 உள்ளிட்ட அதிகாரிகளுக்கான தேர்வுகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. ஆனால், கடைநிலை ஊழியர்களுக்கான குரூப்-4 தேர்வில் மட்டும் முறைகேடு நடந்தது என ஆரம்பத்தில் சொல்லிவந்தனர். டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்காகக் கொண்டுவந்துள்ள ஆதார் எண், கைரேகைப் பதிவு என எந்த மாற்றத்தாலும் ஒரு விளைவும் ஏற்படப்போவதில்லை. வினாத்தாள் விற்பனைக்கு முடிவுகட்டினால் மட்டும்தான் முறைகேட்டைத் தவிர்க்க முடியும்’’ என்ற ரவிச்சந்திரன் நிறைவாக,

‘‘தவமணி வெளியே வந்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பதால்தான், அவரை சிறைக்குள் முடக்கிவைத்துள்ளனர். அத்துடன், அவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மிரட்டியிருக்கிறார்கள். குடும்பம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்திருக்கும் தவமணி, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதால் எங்கள் மூலம் உண்மைகளை வெளிக்கொண்டுவர நினைக்கிறார். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம், கடலூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பலருக்கும் மனு அனுப்பியுள்ளேன். நீதிபதிகளின் மேற்பார்வையில் விசாரித்தால், பல உண்மைகள் வெளிவரும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு