Published:Updated:

பள்ளிப் பேருந்து ஓட்டையில் விழுந்து சிறுமி இறந்த வழக்கு; `அனைவரும் விடுதலை!' - நீதிமன்றம் உத்தரவு

பேருந்து ஓட்டையில் விழுந்து உயிரிழந்த சிறுமி

கடந்த 2012-ம் ஆண்டு தாம்பரத்தில் தனியார்ப் பள்ளிப் பேருந்து ஓட்டையிலிருந்து தவறி விழுந்து, மாணவி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

பள்ளிப் பேருந்து ஓட்டையில் விழுந்து சிறுமி இறந்த வழக்கு; `அனைவரும் விடுதலை!' - நீதிமன்றம் உத்தரவு

கடந்த 2012-ம் ஆண்டு தாம்பரத்தில் தனியார்ப் பள்ளிப் பேருந்து ஓட்டையிலிருந்து தவறி விழுந்து, மாணவி உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

Published:Updated:
பேருந்து ஓட்டையில் விழுந்து உயிரிழந்த சிறுமி

சென்னை அருகிலுள்ள முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சேதுமாதவன். இவருக்கு ஏழு வயதான சுருதி என்ற மகள் இருந்தாள். இந்தச் சிறுமி தாம்பரம் பகுதியிலுள்ள ஒரு தனியார்ப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம், 25-ம் தேதி மாலை, வழக்கம்போல சிறுமி பள்ளிப் பேருந்தில் ஏறி வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.

சிறுமி சுருதி
சிறுமி சுருதி

அந்தப் பேருந்தில் பெரிய ஓட்டை இருந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளிப் பேருந்து முடிச்சூர், லட்சுமிபுரம் பகுதியில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தபோது, இருக்கையில் அமர்ந்திருந்த சிறுமி எதிர்பாராதவிதமாக அந்த ஓட்டையிலிருந்து தவறி விழுந்தார். கீழே விழுந்ததில், பேருந்தின் பின்சக்கரம் சிறுமியின் தலையில் ஏறி இறங்கியது. அதில், சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், ஆத்திரமடைந்து அந்தப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கி, பேருந்துக்கு தீ வைத்தனர்.

பள்ளிச் சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், இந்த விபத்து தொடர்பாக, பேருந்தின் ஓட்டுநர், கிளீனர் சிறுவன், ஒப்பந்தக்காரர் யோகேசுவரன், பள்ளி தாளாளர் விஜயன், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்த விபத்து தொடர்பான வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

பேருந்தில் இருந்த ஓட்டை
பேருந்தில் இருந்த ஓட்டை

கடந்த பத்து வருடங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று நீதிபதி காயத்திரி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பள்ளி தாளாளர், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்ட எட்டு பேரையும் விடுதலைசெய்து உத்தரவு பிறப்பித்தார். ``தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலைசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது" என வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.