Published:Updated:

சொகுசு கார் விவகாரம்:`எத்தனை கார் வேண்டுமென்றாலும் வாங்குங்கள், ஆனால்...’ -தனுஷுக்கு நீதிபதி கண்டனம்

நடிகர் தனுஷ் | Actor Dhanush
நடிகர் தனுஷ் | Actor Dhanush

நடிகர் தனுஷ் வாங்கிய சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கேட்டிருந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் தனுஷ் கடந்த 2015-ம் ஆண்டு சொகுசு கார் ஒன்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு வரியாக 60.66 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று வணிகத்துறை உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து வரிவிலக்கு கோரி நடிகர் தனுஷ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் காரைப் பதிவு செய்ய இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. வரித்தொகையில் 50 சதவிகிதத்தை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்றும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

வரி செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் 30.33 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து கடந்த 2016-ம் ஆண்டு, ஏப்ரலில் விதிகளைப் பின்பற்றிப் பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷ் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்று (05-08-2021) ஒத்திவைக்கப்பட்டது.

இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனுஷ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஏற்கெனவே வரித்தொகையில் பாதியைச் செலுத்திவிட்டதாகவும், மீதமுள்ள தொகையையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கை முடித்து வைக்குமாறும் கூறினார்.

இதற்கு நீதிபதி, ``இத்தனை ஆண்டுகள் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அப்போதெல்லாம் வழக்கைத் திரும்பப்பெற வேண்டும் என்று முடிவு செய்யவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் வழக்கை முடித்துக் கொள்ள நீங்கள் எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. இந்த வழக்கை இழுத்தடிக்க நினைப்பதன் நோக்கம் என்ன?" என்றார். தொடர்ந்து ``நீங்கள் எத்தனை கார் வேண்டுமென்றாலும் வாங்குங்கள். ஆனால் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாகச் செலுத்துங்கள்” என்றார்.

நடிகர் தனுஷ் | Actor Dhanush
நடிகர் தனுஷ் | Actor Dhanush

தொடர்ந்து பேசியவர், ``வழக்கறிஞர்தான் உங்களின் தரப்பினருக்கு எடுத்துக் கூற வேண்டும். அதேபோல, மனுதாரர், தான் என்ன வேலை பார்க்கிறார் என்பதையும் மனுவில் குறிப்பிடவில்லை. ஓர் உயர்தர சொகுசு கார் வாங்கும் மனுதாரரால் தான் என்ன வேலையில் இருக்கிறோம், என்ன தொழில் செய்கிறோம் என்பதைக் குறிப்பிட முடியாதா? அதை ஏன் மறைத்தார் என்பது குறித்து ஒரு மனுத்தாக்கல் செய்ய வேண்டும். தனுஷ் செலுத்தவேண்டிய வரி பாக்கி எவ்வளவு என்பது குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

விஜய் மட்டும்தான் Entry Tax கட்டவில்லையா… ரோல்ஸ் ராய்ஸ் விவகாரத்தில் நடந்தது என்ன?

இந்தத் தொகை என்ன என்பது தெரிந்த பின்னர்தான் என்றைக்குள் அதைச் செலுத்த வேண்டும் என்பது தெரியவரும். நடிகர் விஜய் தனது சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்டிருந்த வழக்கையும் விசாரித்து உத்தரவு பிறப்பித்தது இதே உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு