Published:Updated:

தேனி: `அழிக்கப்பட்ட படம்; சிக்க வைத்த செல்போன்!’ - கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி

சீனிவாசன்
News
சீனிவாசன்

கொலை வழக்கு ஒன்றினை விசாரித்து வந்த தேனி நீதிமன்றம், நேற்று (12.08.2020) தீர்ப்பளித்தது.

தேனி பழைய பேருந்துநிலையம் அருகே ஸ்டூடியோ வைத்து நடத்திவரும் முரளிதரன் என்பவரின் மாமனார் கோவிந்தராஜன், 2013 செப்டம்பர் 12-ம் தேதி அன்று காணாமல் போனார். எங்கு தேடியும் கோவிந்தராஜன் கிடைக்காததால், தேனி நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார் முரளிதரன். வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸார், கோவிந்தராஜனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தேனி நீதிமன்றம்
தேனி நீதிமன்றம்

அதே ஆண்டு டிசம்பர் மாதம், முரளிதரனை தொலைபேசியில் தொடர்புகொள்ளும் மர்ம நபர் ஒருவர், “உன் மாமனார், ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. பணம் கொடுத்துவிட்டு, ஆதாரமாக இருக்கும் செல்போனை வாங்கிச்செல். நான் சொல்லும்போது சின்னமனூர் பேருந்துநிலையத்திற்கு வர வேண்டும்’’ எனக் கூறியுள்ளான். அதனை அடுத்து சின்னமனூர் சென்ற முரளிதரன், மர்மநபர்கள் சொன்ன இடத்தில் கிடந்த செல்போனை எடுத்துள்ளார். அது, அவருடைய மாமனார் செல்போன். அதில், பச்சை நிற சேலை கட்டி, ரத்த வெள்ளத்தில் கிடக்கும் பெண்ணின் உடல் இருக்கும் புகைப்படம் இருந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சம்பவம் அறிந்து செல்போனைக் கைப்பற்றிய தேனி நகர் போலீஸார், விசாரணையை தீவிரப்படுத்தினர். செல்போனை ரெக்கவரி செய்து, அழிக்கப்பட்ட படங்கள் ஏதும் உள்ளதா என ஆய்வு செய்யும்போது, அதில், அல்லிநகரம் பகுதியில் செங்கல் சூளையில் வேலை செய்யும் சீனிவாசன் படம் இருந்துள்ளது. சந்தேகமடைந்த போலீஸார், சீனிவாசனை பிடித்து விசாரித்த போது, அதிர்ச்சியடையச் செய்யும் தகவல்கள் கிடைத்தன.

சீனிவாசன்
சீனிவாசன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி காலை, ஸ்டூடியோவில் காணாமல் போன கேமராக்கள் இருக்கும் இடம் தங்களுக்குத் தெரியும் என கூறி, சீனிவாசனும், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் வேலை செய்யும் மாரிச்சாமியும் கோவிந்தராஜனை அழைத்துள்ளனர். இருவரது பேச்சை நம்பி, தேனி புதிய பேருந்துநிலையம் பைபாஸ் சாலையில் உள்ள வால்கரடு காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளார் கோவிந்தராஜன். சாலையில் இருந்து காட்டிற்குள், சுமார் 300 மீட்டர் தூரம் அழைத்துச் சென்று, ஒரு இடத்தினைக் காட்டி, கோவிந்தராஜனை தோண்டச் சொல்லியுள்ளனர். கூடவே, மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து, கோவிந்தராஜனை குடிக்கச் சொல்ல, இருவர் மீதும் சந்தேகமடைந்து, அங்கிருந்து கிளம்பியுள்ளார் கோவிந்தராஜன்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும், தாங்கள் மறைத்துவைத்திருந்த அரிவாளால் கோவிந்தராஜனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். மேலும், அவர் அணிந்திருந்த வேட்டி சட்டையை கழட்டி, பச்சை நிற புடவையை அணிய வைத்து பெண் போல வேடமிட்டு, அதனை கோவிந்தராஜன் செல்போனில் படம் எடுத்துள்ளனர். அப்போது, சீனிவாசனும் அந்த செல்போனில் படம் எடுத்து அதனை டெலீட் செய்துள்ளார். போலீஸார், செல்போனை ரெக்கவரி செய்தபோது, அழிக்கப்பட்ட சீனிவாசனின் படம் கிடைக்க, வசமாக சிக்கினார் சீனிவாசன். வழக்கு விசாரணையின் போது, மாரிச்சாமி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.

Theni Court
Theni Court

வழக்கு விசாரணை முடிவடைந்து, தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி அப்துல் காதர், ஐ.பி.சி பிரிவு 379ன் கீழ் 3 ஆண்டுகள் கடும்காவல் தண்டனை, ஐ.பி.சி பிரிவு 201ன் கீழ் 7 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை, ரூ 2 லட்சம் அபராதம். அதனைக் கட்ட தவறினால் 2 வருட சிறை தண்டனை. ஐ.பி.சி பிரிவு 302ன் கீழ், ஆயுள் தண்டனையும், ரூ 3 லட்சம் அபராதமும் வித்தித்து தீர்ப்பளித்தார்.

மேலும், குற்றவாளி, தான் செய்த தவறை எண்ணி வருந்துவதற்காக, 3 மாதம் தனிமைச் சிறையில் அடைக்க வேண்டும் எனவும், மாதம் 20-ம் தேதிக்குள் 5 நாள்கள் வீதம், 18 மாதங்களுக்குள் தண்டனையை நிறைவேற்றி முடிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்த நீதிபதி, சிறையில் குற்றவாளி வேலை செய்வதற்கான கூலியில் இருந்து 20% பணத்தை, இறந்தவரின் வங்கிக்கணக்கில் 3 மாதத்திற்கு ஒருமுறை செலுத்த வேண்டும் எனவும் அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.