தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள இலுப்பையூரணியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சவரத் தொழில் செய்துவந்தார். இவரின் மனைவி பாண்டியம்மாள். இவர்களின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கணபதி. பாண்டியம்மாளுக்கும், கணபதியின் மனைவி கருப்பாயிக்கும் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பது சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்படுவதும், தெருவில் உள்ளவர்கள் விலக்கி சமாதானம் செய்துவைப்பதும் தொடர்கதையாகவே இருந்துவந்திருக்கிறது. இதனால், இரண்டு குடும்பத்தினரிடையே முன்விரோதமும் இருந்துவந்தது.

இந்த நிலையில், கடந்த 2014, ஏப்ரல் 3-ம் தேதி ராஜேந்திரன் அவரின் வீட்டின் அருகே நடந்து வந்துகொண்டிருந்தாராம். அப்போது கணபதிக்கும் ராஜேந்திரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கணபதி, அவரின் மனைவி கருப்பாயி, மகன்கள் ராமர், லெட்சுமணன், கண்ணன் ஆகியோர் ராஜேந்திரனைக் கத்தியால் குத்தியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலைசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதைத் தடுக்க வந்த ராஜேந்திரனின் மனைவி பாண்டியம்மாளுக்கும் கத்திக் குத்து விழுந்தது. இந்தக் கொலைச் சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீஸார், கணபதியின் குடும்பத்தினர் ஐந்து பேரின் மீதும் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில், கணபதி தன் குடும்பத்தினருடன் மும்பைக்குச் சென்று தலைமறைவாகிவிட்டார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 2-ம் தேதி மும்பையில் அவர்களைக் கைதுசெய்து தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்தனர். இந்த வழக்கு, தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அரசுத் தரப்பில் 15 சாட்சிகளும், 29 சான்று ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனையும் தலா ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்.