Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: `30 பேருக்கு சம்மன்; 5 நாள்கள்!’ - 22-ம்கட்ட விசாரணை தொடக்கம்

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் 22-ம்கட்ட விசாரணை இன்று தொடங்கியிருக்கிறது.

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த 2018-ம் ஆண்டு, மே 22-ம் நாள் நடந்த முற்றுகைப் போரட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தை எதிர்த்து நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தை நியமித்தது தமிழக அரசு. இந்த ஆணையத்தின் விசாரணைக் காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி - அருணா ஜெகதீசன்
ஓய்வு பெற்ற நீதிபதி - அருணா ஜெகதீசன்

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 679 ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 704 சாட்சியங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்கள், போலீஸ் அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என இதுவரை 21 கட்டமாக 517 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

Vikatan

கொரோனா தொற்று பரவலால் முடங்கிய ஆணையம், இன்று (23-ம் தேதி) தனது 22-ம்கட்ட விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில் ஆஜராக வருவாய்த்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறை அதிகாரிகள் என 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. முதல் நாளான இன்று, ஐந்து பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான இந்த விசாரணை ஆணையத்தின் விசாரணை ஒரே ஒரு நீதிபதியைக் கொண்டு மாதத்தில் ஐந்து நாள்கள்தான் நடக்கிறது. கடந்த இரண்டு ஆண்டு விசாரணையில் இதுவரையில் 522 பேர்தான் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விசாரணை நீதிபதி
விசாரணை நீதிபதி

ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் தரப்பிலேயே குறைந்தபட்சம் 50 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும். தொடர்ச்சியாக மாதத்துக்கு 10 முதல் 15 நாள்கள் விசாரணை நடத்தியிருந்தால், இதற்குள் முழு விசாரணையும் முடிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கும். ஏற்கெனவே இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் விசாரணை, இன்னும் ஓராண்டாண்டுக்கும் மேல் நீடிக்கும். அதற்குள் மக்களும் அந்த துயரச் சம்பவத்தை மறந்துவிடுவார்கள். விரைவாக விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு