Published:Updated:

இனி அவருக்குப் பதில் இவர்! - சென்னை உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது?

ஜெனிஃபர்.ம.ஆ

உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நியமிப்பதற்கு மூத்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் அமைப்பு, நீதிபதிகள் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

கடந்த சில ஆண்டுகளாகவே, நீதித்துறை சர்ச்சைகளின் பிடியிலேயேதான் இருக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் போராட்டம் செய்தது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் எழுந்தது, நீதிபதிகள் நியமனத்தில் புகார் எழுந்தது எனத் தினம் ஒரு புகார் வந்தவண்ணமே இருக்கிறது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அதிலும் குறிப்பாக உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தன்னிச்சையாக முடிவெடுப்பது குறித்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் குறித்து வெளிப்படையாகவே பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமீபத்தில்கூட அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ரங்நாத் பாண்டே, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், ``உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை முடிவுசெய்வது, சாதியும் சிபாரிசுகளும்தான்" என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பாரபட்சம் நிலவுவதுடன், வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது, அறிந்தவர்களுக்குப் பதவிகொடுப்பது போன்ற அநியாயங்கள்தான் நிறைந்திருக்கின்றன என்பது பரவலாகக் காணப்படும் விமர்சனம்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடங்களை நியமிப்பதற்கு மூத்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் அமைப்பு, நீதிபதிகள் பெயரை மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும். உயர் நீதிமன்றத்துக்கான நியமனங்கள் மற்றும் பணியிடமாற்றத்துக்கு மூத்த மூன்று நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரைகளை மேற்கொள்ளும். கொலிஜியம் பரிந்துரைத்த பின்னர் அரசு ஒப்புதல் அளித்ததும், நீதிபதிகள் நியமன உத்தரவை குடியரசுத் தலைவர் அறிவிப்பார். அரசாங்கம் ஏதாவது நீதிபதிக்கான பரிந்துரையை கொலிஜியத்துக்குத் திருப்பியனுப்பலாம். கொலிஜியம் மீண்டும் அவரைப் பரிந்துரைக்குமானால் மத்திய அரசு, இரண்டாவது முறை அளிக்கப்படும் பரிந்துரையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். நீதிபதிகள் நியமன முறை தற்போது இந்த நடைமுறையில்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

நீதிபதி வி.கே.தஹில்ரமணி
நீதிபதி வி.கே.தஹில்ரமணி

இந்நிலையில், நீதிபதிகள் பணிமாற்றத்தைப் பற்றிய கொலிஜியத்தின் சமீபத்திய முடிவு இதுதான். தற்போதைய சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் வி.கே.தஹில்ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்தும், மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் மாற்றல் செய்யக்கோரி உச்ச நீதிமன்ற கொலிஜியம், அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.

இந்தப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு நீதிபதி வி.கே.தஹில்ரமணி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்தக் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது, கொலிஜியம். இதையடுத்து விரைவில், ஏ.கே.மிட்டல் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

நீதிபதி ஏ.கே.மிட்டல்
நீதிபதி ஏ.கே.மிட்டல்

நீதிபதிகள் வேறு மாநிலங்களுக்கோ, வேறு உயர் நீதிமன்றங்களுக்கோ மாற்றலாவது புதிய விஷயமில்லை. ஆனால், தற்போது நடந்திருப்பது சற்றே வித்தியாசமானது. பொதுவாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாற்றலாகும்போது, தற்போது பணியாற்றிக்கொண்டிருக்கும் உயர் நீதிமன்றத்தைவிட அளவில் பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த உயர் நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்வதோ, நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகவோ நியமனம் செய்யப்படுவது நடக்கும்.

ஆனால், இந்தியாவில் அளவில் நான்காவது பெரிய நீதிமன்றமாக, 75 நீதிபதிகள்வரை அமர்வு இருக்கும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பொறுப்பிலிருந்த ஒருவரை, மூன்றே மூன்று நீதிபதிகள் கொண்ட மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மாற்றியிருப்பதற்கான காரணமும் விளக்கப்படவில்லை. அதை விளக்க வேண்டிய அவசியமும் தற்போதைய கொலிஜியம் அமைப்புக்கு இல்லை என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். குறிப்பாக, நீதிபதி வி.கே.தஹில்ரமணி மீது எந்தவொரு புகாரும் குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேகாலயா உயர்நீதிமன்றம்
மேகாலயா உயர்நீதிமன்றம்

நீதிபதி வி.கே.தஹில்ரமணி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம்தான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். அதேசமயம், நீதிபதி ஏ.கே.மிட்டல், 2019 மே 28-ம் தேதிதான் மேகாலயா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வெளிப்படைத்தன்மையற்ற கொலிஜியத்தின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள், குறுகிய காலத்தில் நடைபெற்றிருக்கும் இந்த நீதிபதிகள் பணிமாற்றத்தை முக்கிய முகாந்திரமாகக் கொள்வார்கள் என்பது நிஜம்.