Published:Updated:

பாலியல் சீண்டல்… மாணவியின் 7 வருட சட்டப் போராட்டம்... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நாகராஜ், புகழேந்தி
நாகராஜ், புகழேந்தி

`ஆசிரியர் பணி என்பது மகத்தான பணி. நிறைய நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் நல்லாசிரியர்கள் என்ற போர்வையில் சமூகத்தில் வலம் வருகிறார்கள். இது அவர்களுக்குக் கிடைத்த சாட்டையடி தீர்ப்பு’

மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களை குற்றவாளிகள் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் ஒருவர் நல்லாசிரியர் விருது பெற்றவர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை
பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை

செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியர் நாகராஜன், இயற்பியல் ஆசிரியர் புகழேந்தி ஆகிய இருவரும் சில மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக 17.1.2013 அன்று, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், சமூகநலத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின் அடிப்படையில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நாகராஜ் என்பவர் அந்தப் பள்ளியில் 30 வருடமாக வேதியியல் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். நல்லாசிரியர் விருது பெற்றவர். அவரிடம் படித்தவர்கள் தற்போது உயர் பதவிகளில் இருக்கிறார்கள். இயற்பியல் ஆசிரியரும் உள்ளூர் அரசியல் செல்வாக்குடன் அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் செல்வாக்கு இருந்த காரணத்தால், அடுத்த சில தினங்களிலேயே அந்த ஆசிரியர்களுக்கு ஆதரவாகப் பள்ளியின் முன் மாணவிகள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அரசியல் பிரமுகர்களும் ஆசிரியர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கினார்கள். இதனால் இரு தரப்பிலும் போராட்டங்கள் வெடித்தன. புகார் அளித்த 8 மாணவிகளில் நான்கு மாணவிகள் பெண் ஆசிரியர் ஒருவரின் தூண்டுதலால்தான் புகார் அளித்தோம் என அப்போது புகாரை திரும்பப் பெறுவதாகக் கூறினார்கள்.

ஆசிரியர்களுக்கு எதிரான போராட்டம்
ஆசிரியர்களுக்கு எதிரான போராட்டம்

வல்லம் பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் தங்கள் மகளுடன் சேர்த்து நான்கு மாணவிகள் பாதிக்கபட்டதாக செங்கல்பட்டு மகளிர் காவல்நிலையத்தில் அந்த ஆசிரியர்களுக்கு எதிராகப் புகார் அளித்தார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த ஆசிரியர்கள் முன்ஜாமின் பெற்றனர். ஐந்து வருடங்களாக செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த அந்த வழக்கிலிருந்து கடந்த 2018-ல் இரண்டு ஆசிரியர்களும் விடுதலையானார்கள். கடந்த வருடம் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி வேல்முருகன் அந்த இரண்டு ஆசிரியர்களும் குற்றவாளிகள் என நேற்றுமுன்தினம் தீர்ப்பு அளித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் அம்மாவான ஜெயந்தியிடம் பேசினோம், `` `நாகராஜ் சார் என்னைத் தொட்டுதொட்டுப் பேசுவார். ஆய்வுக்கூடத்தில் வகுப்பு நடக்கும்போது உள்ளாடைகளைத் தொடுவார். இதனால் நான் ஃபெயிலானாலும் பரவாயில்லை. பள்ளிக்குச் செல்ல மாட்டேன்’ என என் பொண்ணு சொல்லுவாள். அதன் பிறகுதான் மாதர் சங்கத்தின் மூலமாகப் புகார் கொடுத்தோம்.

மாணவிகள் போராட்டம்
மாணவிகள் போராட்டம்

தாய், தந்தைக்குப் பிறகு ஆசிரியர்கள்தான்னு சொல்வாங்க. அவங்களே இப்படித் தவறா நடந்து கொள்ளலாமா..? புகார் கொடுத்த பிறகு, சில அரசியல்வாதிங்க எங்களை மிரட்டினாங்க. அப்பவும் நாங்க பின்வாங்கல. அந்த ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும்னு இத்தனை வருடம் போராடினோம். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டாலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்திருக்கிறது” என்கிறார்.

``இதெல்லாம் என்கிட்டயே இல்லையே?'' - என்.பி.ஆர் கேள்வியும் எடப்பாடி ரியாக்‌ஷனும்!

மாணவிகள் தரப்பு வழக்கறிஞரான காரல் மார்க்ஸ் என்பவரிடம் பேசினோம், ``பாதிக்கப்பட்ட பெண்களின் சாட்சிகள் தெளிவாக இருந்தால் அந்த சாட்சி மட்டுமே போதுமானது என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. நான்கு மாணவிகளும், காவல்துறை, நீதிபதி என மூன்று தரப்பினரிடமும் ஒரேமாதிரியாக சாட்சி சொல்லி இருக்கிறார்கள். அது போதுமான சாட்சி. இந்த நான்கு மாணவிகளும் பலமுறை அந்த ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

வழக்கறிஞர் காரல் மார்க்ஸ்
வழக்கறிஞர் காரல் மார்க்ஸ்

வகுப்பு ஆசிரியர் சொன்ன காரணத்தால் மாணவிகள் பொய்யான குற்றச்சாட்டு வைத்ததாக எதிர்தரப்பினர் வாதாடினார்கள். இதனால் அப்போது அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2019-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், குற்றம் சாட்டப்பட்ட நாகராஜ், புகழேந்தி ஆகியோர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார். மேலும் 25-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும். அப்போது குற்றவாளிகள் நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

ஆசிரியர் பணி என்பது மகத்தான பணி. நிறைய நல்லாசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு சிலர் நல்லாசிரியர்கள் என்ற போர்வையில் சமூகத்தில் வலம் வருகிறார்கள். இது அவர்களுக்குக் கிடைத்த சாட்டையடி தீர்ப்பு” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு