Published:Updated:

`இந்தியப் பெண்களால் வன்கொடுமைக்குள்ளான பின் தூங்க முடியாது!' - கர்நாடக உயர்நீதிமன்றம்

Court (Representational Image)
Court (Representational Image)

கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு வன்கொடுமை வழக்கு சம்பந்தமான உத்தரவு விவரங்கள் தேசிய அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது.

கர்நாடகாவைச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர், தன்னிடம் வேலைபார்த்த ஒரு 27 வயதான ஆண், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வன்கொடுமை செய்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அந்த ஆண் மீது ஐபிசி சட்டப்பிரிவு 376 (rape), 420 (cheating) and 506 (criminal intimidation) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66-B ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

அந்தப் பெண் அவரது புகாரில், தன்னிடம் இரண்டு ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் அந்த நபர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்ததாகக் கூறியிருக்கிறார். சம்பவம் நடந்த அன்று இரவு அந்தப் பெண் இந்திரப்ரஸ்தா உணவகத்துக்குச் சென்று உணவருந்தியிருக்கிறார். பின்னர் அந்த ஆண், தன்னுடன் காரில் ஏறியதாகவும், அங்கிருந்து இருவரும் அவர்களின் அலுவலகத்துக்குச் சென்றதாகவும், அங்குதான் தன்னை அந்த நபர் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மே மாதம் பதியப்பட்ட இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அந்த ஆணின் தரப்பிலிருந்து முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கீழ் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் நிராகரிக்கப்படவே, உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ்.தீட்சித் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

Court (Representational Image)
Court (Representational Image)

நீதிபதி, மனுதாரரான அந்தக் குற்றம் சாட்டப்பட்ட ஆணுக்கு முன்ஜாமீன் வழங்கினார். அதற்குக் காரணமாக மூன்று விஷயங்களைத் தன்னுடைய உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர் தன்னுடைய காரில் ஏறும்போது அந்தப் பெண் ஏன் போலீஸாரையோ, அருகில் உள்ளவர்களையோ தொடர்பு கொள்ள முயலவில்லை

புகார் அளித்திருக்கும் பெண், ஏன் குற்றம்சாட்டப்பட்ட மனுதாரரோடு மது அருந்தினார்?

ஏன் தான் வன்கொடுமை செய்யப்பட்டதும் புகார் அளிக்க மறுநாள் காலை வரை காத்திருந்தார்?

மேற்கண்ட கேள்விகளின் மூலம் நீதிபதி சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். முதலில், அந்தப் பெண் இரவு 11 மணிக்கு எதற்காகத் தன்னுடைய அலுவலகத்துக்குச் சென்றார் என விளக்கம் அளிக்கவில்லை. இரண்டாவது, சம்பவம் நடந்தவுடன் மிகவும் சோர்வாக இருந்ததால் அங்கேயே தூங்கிவிட்டதாகவும் மறுநாள் காலைதான் புகார் அளிக்க முடிந்ததாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் நீதிபதி, ``தான் வன்கொடுமைக்கு ஆளானதும் எந்த இந்தியப் பெண்ணும் அங்கேயே தூங்க மாட்டார். இந்தியப் பெண்கள் யாரும் தான் பாதிக்கப்பட்டதும் அப்படி எதிர்வினை ஆற்ற மாட்டார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Prison (Representational Image)
Prison (Representational Image)

மேற்சொன்ன காரணங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நிபந்தனையுடன்கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. அரசு தரப்பு வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது இருக்கும் புகார் மிகவும் தீவிரமானது எனவும், அவர் வெளியில் இருப்பது பொதுமக்களுக்கு நல்லதல்ல எனவும் வாதாடினார்.

அதற்கு நீதிபதி, ``குற்றம் எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும் அது மட்டுமே ஒரு மனிதனின் சுதந்திரத்தைப் பறிப்பதற்கான போதுமான காரணம் ஆகாது'' எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை. யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை நீதிமன்றம் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கும். சட்டம் நிச்சயம் நின்று கொல்லும்.

ஐசோலேஷன் வார்டில் பாலியல் வன்கொடுமை; இளம் பெண் உயிரிழப்பு?! - பீகார் சர்ச்சை

அதேசமயம், ஒரு பெண் மீதான ஆணின் உரிமை எவ்வளவு என்ற கேள்விக்கான விவாதங்களை இந்த வழக்கு தூண்டிவிட்டிருப்பது உண்மையே. ஆக, இந்த வழக்கைத் தாண்டி, நீண்ட நாள்களாக இந்தியாவில் இருக்கும் ஒரு பிரச்னை மீதான பார்வை அவசியமாகிறது.

இந்தியாவில் `Marital rape' குற்றம் அல்ல. அதாவது, திருமணமான ஆண், தன்னுடைய மனைவியுடன் அவளது விருப்பம் இல்லாமலேயே உடலுறவு கொண்டாலும் அது குற்றமாகாது. திருமணத்துக்குப் பின் தன்னுடைய விருப்பம் இல்லாமல் கணவர் தன்னை உடலுறவில் ஈடுபடச் செய்தால், அந்தப் பெண் குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் மூலமாக மட்டுமே கணவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஒரு பெண்ணோடு உறவு கொள்ளுவது என்பது முழுக்க முழுக்க அவளது விருப்பத்தின், ஒப்புதலின் அடிப்படையில் நடப்பது மட்டுமே சரி என்பதை நிலைநிறுத்தவே, இந்தச் சட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

sexual abuse (Representational Image)
sexual abuse (Representational Image)

திருமண உறவுகளிலேயே இப்படி எனில், திருமணமில்லாத இரு உறவில், ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்வது என்பது, அந்தப் பெண்ணின் நடத்தை, எதிர்வினை இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு குற்றமே என்பதே இன்று பலர் முன்வைக்கும் கருத்து. சுருக்கமாகச் சொல்வதானால், அவர்கள் முன்வைக்கும் கருத்து இதுதான், `நோ மீன்ஸ் நோ'.

அடுத்த கட்டுரைக்கு