மணிப்பூரை சேர்ந்த 25 வயது பெண் தன் காதலனுடன் சேர்ந்து திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவர்கள் உறவு கொண்டதில் அப்பெண் கர்ப்பமானார். ஆனால் அப்பெண் கர்ப்பமான பிறகு அப்பெண்ணை அவரின் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதையடுத்து கர்ப்பம் தரித்து 23 வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் தனது கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பெண் மனுத்தாக்கல் செய்தார்.

திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில், தன்னால் இக்குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார் மணிப்பூர் பெண். இம்மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கர்ப்பம் 20 வாரங்களை கடந்துவிட்டதால் கலைக்க அனுமதிக்க முடியாது என்றும், குழந்தை பிறந்த பிறகு அதனை அரசிடம் ஒப்படைக்கலாம் என்றும் தெரிவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த உத்தரவை எதிர்த்து அப்பெண் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். 2003-ம் ஆண்டுக்கான கருக்கலைப்பு சட்டத்தின் 3 பி பிரிவில் 20 முதல் 24 வாரங்கள் வரையிலான கருவை கலைக்க குறிப்பிட்ட சில பிரிவு பெண்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டு இருப்பது குறித்தும் அப்பெண் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இம்மனு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், கருக்கலைப்பு சட்டத்தில் 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்தின் 3வது பிரிவில் கணவன் என்பதற்கு பதில் பார்ட்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, ’இச்சட்டதிருத்தத்தின் கீழ் திருமணமாகாத பெண்களும் கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் 20 வாரத்திற்கு அதிகமான கருவை கலைக்க திருமணமான பெண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் மனுதாரர் திருமணம் செய்யவில்லை என்பதற்காக அவரை கருக்கலைப்பு செய்ய அனுமதிக்காமல் இருக்கமுடியாது. எனவே எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழு மனுதாரரை சோதித்து மனுதாரரின் உயிருக்கு ஆபத்தில்லாமல் கருக்கலைப்பு செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.