Published:Updated:

கண்மூடித்தனமான கைதுகள்... நிரம்பி வழியும் சிறைகள்! - அரசியல் அஜண்டா காரணமா?

சிறைகள்
பிரீமியம் ஸ்டோரி
சிறைகள்

ஒட்டுமொத்த சிறைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றில் விளிம்புநிலையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கண்மூடித்தனமான கைதுகள்... நிரம்பி வழியும் சிறைகள்! - அரசியல் அஜண்டா காரணமா?

ஒட்டுமொத்த சிறைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றில் விளிம்புநிலையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Published:Updated:
சிறைகள்
பிரீமியம் ஸ்டோரி
சிறைகள்

இந்தியாவில் அனைத்துச் சிறைகளும் கைதிகளால் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக, கடந்த ஐந்தாறு ஆண்டுகளில், மூச்சுவிட முடியாத அளவுக்கு கைதிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்திருக்கிறது. “என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளின் கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகளே இதற்குக் காரணம்” என்று சமீபத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம். சிறைகள் நிரம்பியதற்கு, ‘அரசியல் பழிவாங்கல்’ என்ற ஆட்சியாளர்களின் மறைமுக அஜண்டாவே காரணம் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

`உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என்று பெருமைகொள்ளும் இந்தியாவில், அளவுக்கு அதிகமான கைதிகள் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இது குறித்துக் கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ‘விசாரணை அமைப்புகள் கண்மூடித்தனமாகவும், தேவையில்லாமலும் கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இத்தகைய நடவடிக்கை, காலனியாதிக்கத்தைப் பிரதிபலிக்கிறது... இங்கு ‘போலீஸ் ஆட்சி’ நடைபெறுவது போன்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது’ என்று விமர்சித்திருக்கிறது.

கண்மூடித்தனமான கைதுகள்... நிரம்பி வழியும் சிறைகள்! - அரசியல் அஜண்டா காரணமா?

கடைசியாக வந்த தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி (2020), இந்தியா முழுவதுமிருக்கும் சிறைகளில் அதிகபட்சமாக 4,14,033 கைதிகள் வரை அடைத்துவைக்க முடியும். ஆனால், 4,88,511 கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், சிறைக் கைதிகளில் மூவரில் ஒருவர் விசாரணைக் கைதிகள் என்பதுதான். அதிகமான விசாரணைக் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆசிய நாடுகளில், மூன்றாவது இடத்தை இந்தியா வகிக்கிறது. அதிகமான சிறைக் கைதிகளைக்கொண்ட மாநிலங்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. அங்குள்ள சிறைகளில் அதிகபட்சம் 60,685 கைதிகளை அடைத்துவைக்கலாம் என்கிற நிலையில், 1,07,395 கைதிகள் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்தபடியாக, பீகார் (51,934), மத்தியப் பிரதேசம் (45,484), மகாராஷ்டிரா (31,825), மேற்கு வங்கம் (25,863) ஆகிய மாநிலங்கள் வருகின்றன. இவற்றோடு ஒப்பிட்டால், தமிழ்நாடு பரவாயில்லை. இங்குள்ள சிறைகளில் 23,592 கைதிகளை அடைத்துவைக்கலாம் என்கிற நிலையில், 14,302 கைதிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சி.பி.ஐ., என்.ஐ.ஏ., அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட விசாரணை அமைப்புகள், தங்கள் இஷ்டப்படி கைது நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. அதைத்தான், ‘கண்மூடித் தனமான கைது’ என்று உச்ச நீதிமன்றம் விமர்சித்திருக்கிறது. `அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்காக என்.ஐ.ஏ போன்ற அமைப்புகளை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்தக் குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிப்பதுபோல உச்ச நீதிமன்றத்தின் விமர்சனம் அமைந்திருக்கிறது. சிறையில் தள்ளப்பட்ட பிறகு, விசாரணையே நடத்தப்படாத நிலையில் ஆயிரக்கணக்கானோர் சிறையில் வாடிக்கொண்டிருக் கிறார்கள். இன்னொருபுறம், கைதிகளைப் பராமரிப்பதற்குப் போதுமான எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லை.

ஒட்டுமொத்த சிறைக் கைதிகளில் 70 சதவிகிதம் பேர் சாதி, மதம், பாலினம் ஆகியவற்றில் விளிம்புநிலையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம், சிறைகளில் மனித உரிமை மீறல்கள் அதிக அளவில் நடப்பதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. கைதிகளுக்கான சட்டபூர்வ உரிமைகளான மருத்துவச் சிகிச்சை, உணவு, சட்ட ஆவணங்களைப் பெறுதல், வீட்டில் சமைத்த உணவைப் பெறுதல், வீடியோ கான்ஃபரன்ஸிங் வசதி, குடும்பத்தினருடன் சிறையில் சந்திப்பு போன்றவை மறுக்கப்படுவதாகவும் நிறைய புகார்கள் உண்டு.

பீமா கோரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த 84 வயது சமூகச் செயற்பாட்டாளரான ஸ்டான் சுவாமி. பாரிசவாயு நோயால் பாதிக்கப்பட்ட அவர், கை நடுக்கம் காரணமாக தண்ணீர் குடிக்க முடியவில்லை என்று ‘உறிஞ்சு குழல்’ கேட்டார். அதை வழங்க சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. சிறையிலேயே ஸ்டான் சுவாமி மரணமடைந்தார். சிறையிலேயே மரணமடைபவர்களின் எண்ணிக்கை ஏழு சதவிகிதம் அதிகரித்திருப்பதாக என்.சி.ஆர்.பி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில், சிறை நெரிசலைக் குறைக்கும் வகையில், கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. சிலரை விடுவித்துவிட்டு, சில மாதங்களிலேயே அவர்களை மீண்டும் சிறையில் அடைத்தார்கள். அது மட்டுமல்ல, கொரோனா காலத்தில் கூடுதலாக 90,000 கைதிகள் சிறையில் தள்ளப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தது. ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக நோய்கள், காவல் வன்முறைகளால் பலர் சிறையில் மரணமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண் கைதிகளைவிட பெண் கைதிகளின் நிலைமை மோசம். இந்திய சிறைகளில் சுமார் 20,000 பெண் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் 1,427 பேர், குழந்தைகளுடன் சிறையில் இருக்கிறார்கள். இந்த 1,427 பெண்களில் 1,184 பேர் விசாரணைக் கைதிகள்!

இந்தச் சூழலில்தான், சிறைக் கைதிகள் தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, மத்திய அரசுக்கு முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. `ஜாமீன் வழங்கும் நடைமுறைகளைத் தளர்த்த வேண்டும், அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள். மேலும், `பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும்!

கண்மூடித்தனமான கைதுகள்... நிரம்பி வழியும் சிறைகள்! - அரசியல் அஜண்டா காரணமா?

ஜாமீன் கிடைப்பதில் என்ன சிக்கல்?

குற்றவியல் நடைமுறைச்சட்டம் 167ன் படி, கைதுசெய்யப்பட்டு 90 நாள்களைக் கடந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றால், விசாரணைக் கைதிக்கு ஜாமீன் பெறும் உரிமை தானாகவே கிடைத்துவிடும். அப்படியிருந்தும் இத்தனை பேர் சிறையில் இருப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.சிவக்குமாரிடம் பேசினோம்.

“திருட்டு, கொலை, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோரை ஜாமீனில் எடுப்பதற்கு உறவினர்களோ, நண்பர்களோ இருப்பதில்லை. ஒருவர் ஜாமீனில் வெளியே வருவதாக இருந்தால், அவருக்கு இரண்டு பேர் பிணை உத்தரவாதம் வழங்க வேண்டும். அதற்கு ஆளிருக்க மாட்டார்கள். நில அபகரிப்பு, பண மோசடி போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு, குறிப்பிட்ட தொகையைக் கட்டினால்தான் ஜாமீன் கிடைக்கும். ஆனால், அவர்களிடம் பணம் இருக்காது. இப்படிப்பட்ட கைதிகள்தான், வெளியே வர முடியாமல் சிறையிலேயே இருக்கிறார்கள். குற்றவியல் நடைமுறைச்சட்டம் 167, சிறப்பு சட்டங்களில் கைதானவர்களுக்குப் பொருந்தாது. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவுப்படி, ஜாமீன் நடைமுறைகளை எளிமைப்படுத்தினால் சிறைகளிலிருந்து வெளியே வருவது பலருக்கும் சாத்தியமாகும். தேசத்துரோக (121 ஏ) வழக்கில் கைதுசெய்யப்பட்டவர்கள், அந்த வழக்கிலிருந்து தற்போது விடுவிக்கப்படுகிறார்கள். என்.ஐ.ஏ வழக்குகளில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. அவர்களுக்கு ஜாமீன் கிடைப்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது” என்கிறார்.