Published:Updated:

`அச்சு ஊடகச் செய்தியாளர் வீடியோ எடுக்கலாமா?!' - ரொட்டிக்கு உப்பு விவகாரத்தில் மிரளவைத்த கலெக்டர்

கலிலுல்லா.ச

`பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது”

 Pawan Jaiswal
Pawan Jaiswal ( PTI )

உத்தரப்பிரதேச மாநிலம் மிசாபூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் ரொட்டிக்கு உப்பு வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றும் வைரலானது. இந்த வீடியோவை எடுத்த பத்திரிகையாளர் மீது அம்மாநில அரசு வழக்கு பதிவுசெய்துள்ளது. அந்தப் புகாரில், `உத்தரப்பிரதேச அரசின் மீது அவதூறு பரப்பும் வகையில் பத்திரிகையாளர் செயல்பட்டுள்ளார்’ எனக் குறிபிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், மாணவர்கள் வரிசையாக அமர்ந்துகொண்டு ரொட்டிக்கு உப்பைத்தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள், `சரியான உணவுகள் வழங்கப்படுவதில்லை.

Roti With Salt
Roti With Salt

சமயங்களில் சாதத்துக்கும் கூட, உப்பைத்தருகிறார்கள்’ என்று புகார் தெரிவித்துள்ளனர். இதை வீடியோ எடுத்த பத்திரிகையாளர் பவன் ஜெய்ஸ்வால், மாவட்ட கலெக்டர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். கலெக்டர் அனுராக்படேல் நிருபரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, ``அச்சு ஊடகத்தைச் சேர்ந்த நீங்கள் எந்தத் தவறு நடந்தாலும் புகைப்படம் எடுக்கலாம்; தவறில்லை. ஆனால், நீங்கள் அப்படிச்செய்யவில்லை. வீடியோவாக எடுத்ததால்தான் உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

பத்திரிகையாளர் பவன் ஜெய்ஸ்வால் மீதான வழக்கை வாபஸ்பெற வேண்டும் எனப் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. ``பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பது கண்டனத்துக்குரியது” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ``ஊழல் தொடர்பான குற்றச்சாட்டை யார் பொதுவெளிக்குக் கொண்டுவந்தாலும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது” என அம்மாநிலப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Roti With Salt
Roti With Salt

தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள பத்திரிகையாளர், ``இது பத்திரிகைச் சுதந்திரத்துக்கு எதிரானது. நான் எதையும் புதிதாக உருவாக்கவில்லை. என்ன நடந்தது என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் கடந்தவாரம் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், `4 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.