Published:Updated:

அவதூறு வழக்கு எனும் அபத்த ஆயுதம்!

நீதி
பிரீமியம் ஸ்டோரி
நீதி

அவதூறு வழக்குகளைத் தனிநபர்கள் தொடுப்பதற்கும் அரசுப் பதவியில் இருப்பவர்கள் தொடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு

அவதூறு வழக்கு எனும் அபத்த ஆயுதம்!

அவதூறு வழக்குகளைத் தனிநபர்கள் தொடுப்பதற்கும் அரசுப் பதவியில் இருப்பவர்கள் தொடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு

Published:Updated:
நீதி
பிரீமியம் ஸ்டோரி
நீதி

அதிகார நாற்காலியில் அமர்ந்து ஆட்சியாளர்கள் செய்கிற தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் கேள்வி கேட்பதும் ஊடகங்களின் தார்மிகக் கடமை. மக்களின் குரலாய் இதைச் செய்யும் ஊடகங்களை மிரட்டுவதற்கு ஆட்சியாளர்கள் கையில் எடுக்கும் ஆயுதமே, அவதூறு வழக்கு. தமிழகத்தை எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் விகடன் குழும இதழ்களின்மீது அவதூறு வழக்குகள் பாயத் தவறுவதில்லை.

குறிப்பாக ஜெயலலிதா 2011-ம் ஆண்டு முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 2012 முதல் 2016 வரையிலான நான்கு ஆண்டுகளில் மிக அதிக அவதூறு வழக்குகளைச் சந்தித்தது விகடன். ஆனந்த விகடனில் வெளியான ஒரே ஒரு கட்டுரைக்காக மட்டுமே ஒன்பது தனித்தனி வழக்குகள் போடப்பட்டன. அரசு சார்பில் இப்படிப் போடப்படும் அவதூறு வழக்குகளை நடத்துவதற்காகத் தனி அரசாணை வெளியிட்டு சிறப்பு மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஒருவரைத் தனியாக நியமிக்கும் அளவுக்கு வேகம் காட்டியது அரசு.

வழக்கறிஞர் ரமேஷ்
வழக்கறிஞர் ரமேஷ்

இப்படி அந்தக் காலகட்டத்தில் 44 அவதூறு வழக்குகள் விகடன் நிறுவன இதழ்கள்மீது போடப்பட்டன. நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி இந்த வழக்குகளை எதிர்கொண்டது விகடன். இப்போது இந்த 44 அவதூறு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்பது நிறைவு தரும் செய்தி.

விகடன் குழுமத்துக்காக இந்த வழக்குகளை நடத்திய வழக்கறிஞர் என்.ரமேஷ் இதுகுறித்து விவரிக்கிறார். ‘‘அவதூறு வழக்குகளைத் தனிநபர்கள் தொடுப்பதற்கும் அரசுப் பதவியில் இருப்பவர்கள் தொடுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. முதல்வர், அமைச்சர் போன்ற பதவிகளில் இருந்துகொண்டு ஒருவர் ஆற்றிய கடமைகளைப் பற்றி அவதூறு செய்ததாகக் கருதினால்தான் அரசு சார்பில் அவதூறு வழக்கு போட முடியும். தனிப்பட்ட முறையிலான அவர்களைப் பற்றிய விமர்சனத்தை அவதூறு எனக் கருதினால், அதைத் தனிநபராகவே அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்த வித்தியாசத்தை அவர்கள் உணரவில்லை. எது நியாயமான விமர்சனம், எது அவதூறு என்ற எல்லைக்கோடும் அவர்களுக்குத் தெரியவில்லை. ‘முதல்வராகத் தன் கடமையைச் செய்யாமல் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் சென்று ஓய்வெடுக்கிறார்’ என்று எழுதியதற்குக்கூட அவதூறு வழக்கு பாய்ந்தது. அவசரக் கோலத்தில் வழக்குகளைப் போட்டார்கள்.

அவதூறு வழக்குகள் போடப்பட்ட பெரும்பாலான ஊடகங்கள், உடனடியாகவே உயர்நீதிமன்றத்தை நாடி வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை வைத்தன. ஆனால், நாம் வழக்குகளை விசாரணை நீதிமன்றத்திலேயே சந்திக்கத் தயாராக இருந்தோம்.

ஒவ்வொரு வழக்கின் விசாரணைக்கும் முறையாக ஆஜராகி, வழக்கை விசாரிக்குமாறு கோரிக்கை வைப்போம். ஆனால், ஒருசில வழக்குகளைத் தவிர வேறு எதையும் விசாரணைக்குக் கொண்டுவருவதில் அரசுத் தரப்பு ஆர்வம் காட்டவே இல்லை. பல வழக்குகளில் எட்டு ஆண்டுகளாக அலைக்கழித்தார்கள். இப்படி அலைய விட்டது அநீதி.

அவதூறு வழக்கு போட வேண்டும் என முடிவு செய்தால், அதற்கு அரசாணை ஒன்று வெளியிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட கட்டுரை எந்த வகையில் அரசை அவதூறு செய்தது என்று அரசாணையில் குறிப்பிட வேண்டும். அதேபோல, அவதூறாகக் கருதப்படும் வரிகளையும் புகாரில் குறிப்பிட வேண்டும். விகடன் மீதான வழக்குகளில் இந்த நடைமுறைகள் எதையுமே பின்பற்றவில்லை. நாகரிகமான வார்த்தைகளால் நாம் செய்திருந்த விமர்சனங்களை அவதூறாக அரசால் காட்ட முடியவில்லை என்பதே உண்மை.

அவதூறு வழக்குகள் அரசு சார்பில் போடப்பட்டால்கூட, ‘தாங்கள் எப்படி பாதிக்கப்பட்டோம்’ என முதல்வரோ, குறிப்பிட்ட அமைச்சர்களோ வந்து சாட்சி சொல்ல வேண்டும். விகடன் மீதான 44 வழக்குகளில் முதல்வரோ, அமைச்சர்களோ சாட்சிப் பட்டியலில்கூட இல்லை. அவதூறு வழக்குக்கு அரசாணை வெளியிட்ட அன்டர் செக்ரட்டரி, குறிப்பிட்ட இதழைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஆவணக் காப்பாளர் போன்றவர்களையே சாட்சிகளாகக் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

அவதூறு வழக்கு எனும் அபத்த ஆயுதம்!

இந்த எல்லா விவரங்களையும் உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு, ‘சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், சும்மா அலைக்கழிக்கவே இந்த வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவற்றை நடத்த அரசு ஆர்வம் காட்டவில்லை. இனி நடத்துவதிலும் பயனில்லை. எனவே, இவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தோம். நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் இந்த மனுக்களை விசாரித்து, 44 அவதூறு வழக்குகளையும் தள்ளுபடி செய்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு விகடன் குழும இதழ்கள்மீது அரசு சார்பில் ஐந்து அவதூறு வழக்குகள் போடப்பட்டன. அவற்றில்கூட இரண்டு வழக்குகள் இதுவரை தள்ளுபடி ஆகிவிட்டன. மற்ற வழக்குகளிலும் சட்டப் போராட்டம் நடத்தி வெல்வோம்’’ என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் வழக்கறிஞர் ரமேஷ்.

அவதூறு வழக்கு என்ற முனை மழுங்கிய ஆயுதத்தை விகடன் என்றென்றும் அதே துணிச்சலுடன் எதிர்கொள்ளும். வாசகர்களின் பேராதரவு அதற்குத் துணை நிற்கும்.