Published:Updated:

வழக்குகள் ரத்து... கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டிய விகடன்!

கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டிய விகடன்!
பிரீமியம் ஸ்டோரி
News
கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டிய விகடன்!

இது பத்திரிகைச் சுதந்திரத்தின்மீதான தாக்குதல். கருத்துக்கணிப்பு எடுப்பது பத்திரிகையாளரின் கடமை.

கடந்த 2019, டிசம்பர் 9, 10 தேதிகளில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2014-க்கு முன்பு இந்தியாவுக்குக் குடிபெயர்ந்த மதச் சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகிய சமூகத்தினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அதில் இலங்கை அகதிகள் பற்றி எதுவும் இல்லை. இதையடுத்து, தமிழகத்திலுள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் கருத்து கேட்பதற்காக சர்வே ஒன்றை ‘ஜூனியர் விகடன்’ நடத்தியது. 37 முகாம்களில் நிருபர்கள் சர்வே எடுத்தனர். 27.12.2019 அன்று சர்வே பணி நடந்துவந்த நிலையில், இதைப் பொறுக்க முடியாத அன்றைய அ.தி.மு.க அரசு வழக்கு பதிவுசெய்தது.

கன்னியாகுமரி மாவட்டம் ஞாறம்விளை, கோழிவிளை முகாம்களில் சர்வே எடுத்ததற்காக, 28.12.2019 அன்று மார்த்தாண்டம், களியக்காவிளை ஆகிய காவல் நிலையங்களில், விகடன் நிருபர் ஆர்.சிந்து, புகைப்படக்காரர் ரா.ராம்குமார் ஆகியோர்மீது பிணையில் விட முடியாத பிரிவு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம்புரியும் நோக்குடன் அத்துமீறி நுழைதல் (பிரிவு 447), அரசு அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் இருத்தல், அதன் காரணமாக மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துதல் (பிரிவு 188), இரு பிரிவு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி அரசுக்கு எதிராகக் குற்றம்புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல், பிரசுரங்களை விநியோகித்தல் (பிரிவு 505(1) பி) ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பாய்ந்தன. ஆனாலும், துணிச்சலோடு கருத்துக்கணிப்பை வெளியிட்டது ஜூ.வி.

வழக்குகள் ரத்து... கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டிய விகடன்!

அ.தி.மு.க அரசின் இந்தச் செயலுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கத்தினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை ஆகியவற்றைப் பறிக்கும் ஜனநாயக விரோத காரியங்களைத்தான் எடப்பாடி அரசு செய்துவருகிறது. ஈழத்தமிழர்களைச் சந்தித்து பத்திரிகையாளர்கள் கருத்து கேட்பது தவறு என்றால், இந்த (அ.தி.மு.க) அரசாங்கம் அந்த அகதிகள் முகாமுக்குச் சென்று கருத்து கேட்டதா? ‘ஈழத்தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி வருகிறேன்’ என்று சொல்லும் முதலமைச்சர் (எடப்பாடி பழனிசாமி), அந்த மக்களின் உணர்வை, கருத்தை அறிய அரை மணி நேரமாவது செலவு செய்தாரா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

விகடன் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டபோது ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், ‘‘இது பத்திரிகைச் சுதந்திரத்தின்மீதான தாக்குதல். கருத்துக்கணிப்பு எடுப்பது பத்திரிகையாளரின் கடமை. இதற்காக வழக்கு பதிவுசெய்வது சட்டவிரோதம்’’ என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், நிபந்தனை இல்லாத ஜாமீன் வழங்கியது.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் அந்த எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜூனியர் விகடன் சார்பில் மனுத்தாக்கல் செய்தார் வழக்கறிஞர் ரமேஷ். அதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எஃப்.ஐ.ஆரை ரத்துசெய்து டிசம்பர் 14-ம் தேதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் வாதாடிய வழக்கறிஞர் ரமேஷ், ‘‘இந்த எஃப்.ஐ.ஆரை அவர்களாகவே முடித்து வைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததாலேயே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் இந்த வழக்கு முதன்முதலாக விசாரணைக்கு வந்தபோதே, ‘இது போன்ற வழக்கெல்லாம் எப்படித் தாக்கல் செய்கிறீர்கள், ரத்து செய்யலாமா?’ என்று அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டார். அதற்கு அவர், ‘இல்லை, என்ன நடந்தது என போலீஸிடம் அறிவுறுத்தல் வாங்கிவிடுகிறோம். அதற்கு அவகாசம் வேண்டும்’ என்று கேட்டார்.

ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த வழக்கு டிசம்பர் 14-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘இவர்கள் ரிப்போர்ட்டர், போட்டோகிராபர்தானா என்று தெரியாது’ என்றார்கள். அதற்கு நீதிபதி, ‘நீங்கள் எஃப்.ஐ.ஆரில் ரிப்போர்ட்டர் என்றுதானே சொல்லியிருக்கிறீர்கள்? ஜூனியர் விகடன் சார்பில்தான் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள். அந்தச் செய்தியும் ஜூனியர் விகடனில்தான் வந்திருக்கிறது. அந்தச் சந்தேகம் தேவையில்லை. வேறு என்ன அப்ஜெக்‌ஷன் இருக்கிறது?’ என்று கேட்டார். ‘அத்துமீறி அகதிகள் முகாமுக்குள் சென்றதால் எஃப்.ஐ.ஆர் போட்டது சரிதான்’ என்றார் அரசுத் தரப்பு வழக்கறிஞர். இதையடுத்து, இந்த வழக்கு பதிவு தொடர்பாக, அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், ‘இது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது. வழக்கு பதியப்பட்டது தவறு’ என்று கூறியதை நாம் சுட்டிக்காட்டினோம். உடனே நீதிபதி, ‘எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது சொன்னது, இப்போது கருத்து மாறியிருக்குமா?’ என்று கேட்டார்.

ரமேஷ்
ரமேஷ்

அதன் பிறகு சட்டரீதியாக வாதாடியபோது, ‘குற்றம் செய்யும் நோக்கத்தோடு, தடை செய்யப்பட்ட இடத்துக்குள் நுழைந்தால்தான் குற்றப்பிரிவு 447-ன்படி வழக்கு பதிவுசெய்ய முடியும். எஃப்.ஐ.ஆரில் குற்றம் செய்யும் எண்ணத்துடன் நுழைந்ததாகச் சொல்லப்படவில்லை. அவர்கள் சர்வே எடுக்கத்தான் போயிருக்கிறார்கள். அதனால், இந்த செக்‌ஷன் பொருந்தாது. சட்டப் பிரிவு 188-ல் போலீஸ் எஃப்.ஐ.ஆர் போட முடியாது. 505(1) பி படி, அங்குள்ள இரண்டு பிரிவினர் யார் என்றும் சொல்லவில்லை. அதன் தொடர்ச்சியாகக் கலவரம் நடந்ததாகவும் பதிவு இல்லை. கருத்துக்கணிப்பு நடத்தக் கூடாது என்பதற்காக, பயமுறுத்தும் நோக்கில் ஒரே நாளில் இரண்டு காவல் நிலையங்களில் வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே, இந்த எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தது செல்லாது’ என்ற நமது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை சிறப்பாகக் கையாண்டு எப்.ஐ.ஆர்-களை ரத்துசெய்து உத்தரவிட்டார்’’ என்றார்.

இப்போது மட்டுமல்ல... எப்போதுமே கருத்துச் சுதந்திரத்துக்காக களத்தில் நிற்கும் விகடன்!