தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்க வழக்கின் வழக்கறிஞர் கட்டணம் மற்றும் இடைத்தேர்தல் செலவுகளுக்காக மக்கள் வரிப்பணம் விரயமான விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது ஜூனியர் விகடன்.

‘கூவத்தூரில் எம்.எல்.ஏ-களை அடைகாத்து உங்களை முதல்வர் ஆக்கினால், எங்கள் முதுகில் குத்துவீர்களா?’ எனக் கொதித்துப்போய், எடப்பாடி பழனிசாமியைப் பழிவாங்க ஆளும் தரப்பில் இருந்த 18 எம்.எல்.ஏ-க்களை எடப்பாடிக்கு எதிராக ஏவினார் டி.டி.வி.தினகரன். ‘எடப்பாடியை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என ராஜ்பவன் படியேறினார்கள் 18 பேரும். அன்றைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 18 பேரின் எம்.எல்.ஏ பதவிகளை அதிரடியாகப் பறித்தார் சபாநாயகர் தனபால். இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீண்டுகொண்டிருந் தது. ‘சபாநாயகரின் உத்தரவு செல்லும்’ எனத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், ‘சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது’ என நீதிபதி சுந்தரும் அறிவித்தார்கள். மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதால், மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணாவிடம் வழக்கு போனது. நீதிபதி சத்யநாராயணா அளித்த தீர்ப்பில், ‘சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லும்’ என அறிவித்த பிறகு, வழக்கு முடிவுக்கு வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 2017 செப்டம்பர் 18 முதல் இறுதித்தீர்ப்பு வெளியான 2018 அக்டோபர் 25 வரையில், நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்குக்காக ஆளுங்கட்சியும் தினகரன் தரப்பும் சட்டப்போராட்டம் நடத்தின. முதல்வர் எடப்பாடி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதனும், சபாநாயகர் சார்பில் ஆரியமா சுந்தரமும் அரசு கொறடா சார்பில் முகுல் ரோஹத்கியும் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் ஆஜரான இந்த வழக்கறிஞர்களுக்கான கட்டணம், அரசு கஜானாவில் இருந்துதான் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எடப்பாடி ஆட்சிமீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு வழக்குகளிலும் அரசுத் தரப்பில் ஆஜரானவர்கள் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்கள்.
இந்த வழக்குகளுக்கு தமிழக அரசின் பணம் எவ்வளவு செலவழிக்கப்பட்டிருக்கிறது என விசாரித்தபோது, வழக்கறிஞர் கட்டண விவரம், ஜூ.வி-க்கு பிரத்யேகமாகக் கிடைத்தது.
சட்டமன்றத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் மற்றும் அவரின் உதவி வழக்கறிஞர் ஆகியோருக்கு வழக்குக் கட்டணமாக 2017-2018ம் ஆண்டில் 6,05,13,000 ரூபாயும், 2018-2019ம் ஆண்டில் மூன்று தவணைகளில் 3,78,50,000 ரூபாயும் கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தொகை பிறகு 3,84,58,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், 2019-2020ம் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாயை முதல்கட்டமாக ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த வழக்கு முடிந்த பிறகுதான், இன்னும் எவ்வளவு செலவழித்திருப்பார்கள் என்கிற விவரம் முழுமையாகத் தெரியவரும்.
2017-18 முதல் 2019-20 வரையிலான மூன்று ஆண்டுகளில் இந்த இரண்டு வழக்குகளுக்கும் வழக்கறிஞர்களுக்குக் கட்டணமாக அரசு செலுத்திய மொத்த பணம் 9,92,71,000 ரூபாய். சீனியர் வழக்கறிஞர்கள் லட்சங்களில்தான் ஃபீஸ் வாங்குவார்கள். அவர்களுக்கு சட்டமன்றத்தின் சார்பில் தரப்பட்ட கட்டணம் அத்தனையும் மக்களின் வரிப்பணம்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, இந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அத்துடன் எம்.எல்.ஏ-கள் மரணமடைந்த சூலூர், திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகள், நீதிமன்ற தண்டனையால் பதவியிழந்த பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதி ஆகியவற்றுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. மொத்தமாக 22 தொகுதி களுக்கும் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.
ஏற்கெனவே 18 தொகுதிகளுக்கான வழக்குச் செலவாக 9.92 கோடி ரூபாயை சட்டமன்றம் செலவழித்த நிலையில், இந்த 22 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் செலவு எவ்வளவு ஆகியிருக்கும் எனத் தோண்டினோம். அந்த ஆவணங்களும் நமக்குக் கிடைத்தன. இந்த 22 தொகுதிகள் இடைத்தேர்தல் செலவுக்காக இரண்டு தவணைகளில் 30,42,17,500 ரூபாய் செலவிட்டிருக்கிறார்கள்.
வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குச்சாவடி பொருள்கள், பூத் சிலிப், வாக்கு எண்ணிக்கை, தேர்தல் அலுவலர்களுக்குச் சம்பளம் ஆகியவற்றுக்கு 30.42 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. போலீஸ் தரப்பில் செய்யப்பட்ட செலவுகள் இதில் சேரவில்லை. வழக்கறிஞர் கட்டணச் செலவு, இடைத்தேர்தல் செலவு இரண்டையும் கூட்டினால் 40,34,88,500 ரூபாய் வருகிறது.
வாழ்க ஜனநாயகம்!