Published:Updated:

`டிப்ஸ் கேட்கும் சிலிண்டர் டெலிவரி பாய் மீது என்ன நடவடிக்கை?'- ஆயில் நிறுவனங்களுக்கு நீதிபதிகள் செக்

சிலிண்டர் டெலிவரி செய்யும்போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆயில் நிறுவனங்கள் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்கள்
சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்கள்

சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் லோகரங்கன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், `வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணத்துடன், அதை விநியோகிப்பதற்கான கட்டணமும் சேர்த்து ரசீதில் குறிப்பிடப்படுகிறது. ஆனால், சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக வலுக்கட்டாயமாக வசூலிக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

மேலும், `நாடு முழுவதும் 23 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ளன. டெலிவரிக்கு என கூடுதல் கட்டணம் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. சிலிண்டர் டெலிவரி செய்பவர்கள் கூடுதல் பணம் வசூலிப்பது குறித்து ஆயிரக்கணக்கானவர்கள் புகார்கள் தெரிவித்தும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிலிண்டர்கள் டெலிவரிக்காக கூடுதல் பணம் வசூலிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கும் உத்தரவிட வேண்டும் ’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Vikatan

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், `இது தொடர்பாக 2124 புகார்கள் உள்ளன. இதில் என்னமாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்பதை ஆயில் நிறுவன வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பினர்.

சிலிண்டர்
சிலிண்டர்

ஆயில் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தனர். அப்போது பேசிய நீதிபதிகள், ``ஏன் அதை இணையதளத்தில் வெளியிடவில்லை. டிப்ஸ் கேட்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆயில் நிறுவனங்கள் வருகிற 1-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு” உத்தரவிட்டுள்ளனர்.