Published:Updated:

இந்தியாவின் முதல் பெண் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பு; யார் இந்த பி.வி. நாகரத்னா?

நீதிபதி பி.வி.நாகரத்னா
நீதிபதி பி.வி.நாகரத்னா

பி.வி.நாகரத்னாவைப் பொறுத்தவரை இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சீனியாரிட்டி பட்டியலில் இவரது பெயர் தற்போது 33-வது இடத்தில் இருக்கிறது.

இந்தியா குடியரசு நாடாக 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி பிரகனப்படுத்தப்பட்ட நாள் முதல் இப்போது வரை இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை 48 பேர் அலங்கரித்துள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவர்கூட பெண் இல்லை என்பதே கசப்பான உண்மை. ஆனால், இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று அவ்விதியை மாற்றி எழுதும் வாய்ப்பை அதிகமாகப் பெற்றிருக்கிறார் நீதிபதி பி.வி.நாகரத்னா.

நீதிபதி பி.வி.நாகரத்னா
நீதிபதி பி.வி.நாகரத்னா
https://karnatakajudiciary.kar.nic.in

இந்திய உச்சநீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு 9 பேரை சமீபத்தில் பரிந்துரைத்துள்ளது. அவற்றுள் மூன்று பேர் பெண்கள். இந்தியாவின் தற்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியான என்.வி.ரமணாவின் தலைமையைக் கொண்ட மூத்த நீதிபதிகள் குழுதான் இம்முடிவை எடுத்துள்ளது. இந்தப் பரிந்துரைப் பட்டியலில்தான் பி.வி. நாகரத்னாவின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்தியத் தலைமை நீதிபதி பதவிக்கான வாய்ப்புகள் இவருக்குப் பிரகாசமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பரிந்துரை மட்டும் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் 2027-ம் ஆண்டு இந்தியா தனது முதல் பெண் தலைமை நீதிபதியைப் பெற்றுவிடும்.

நீதிபதி பி.வி.நாகரத்னா தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணிபுரிந்து வருகிறார். வணிக மற்றும் அரசியலமைப்புச் சட்டங்கள் சார்ந்த மிக முக்கியத் தீர்ப்புக்களை இவர் கர்நாடகாவில் வழங்கியுள்ளார்.

1962-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி பிறந்த இவர், இந்தியத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய ஈ.எஸ்.வெங்கடராமையாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

supreme court
supreme court
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுழற்றிய சாட்டை! - மோடி அரசை `கவனிக்க’த் தொடங்கிவிட்டதா உச்ச நீதிமன்றம்?

ஈ.எஸ்.வெங்கடராமையா, சுதந்திர இந்தியாவின் 19-வது தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர். நீதிபதி நாகரத்னா தலைமை நீதிபதி பதவியைப் பெற்றுவிட்டால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியை அலங்கரித்துள்ளனர் என்கிற பெருமையும் இவரது குடும்பத்திற்கு வந்துசேரும்.

பி.வி.நாகரத்னாவைப் பொறுத்தவரை இந்திய உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சீனியாரிட்டி பட்டியலில் இவரது பெயர் தற்போது 33-வது இடத்தில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தினால் தலைமை நீதிபதியையும் சேர்த்து மொத்தமாக 33 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் இருப்பர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு