Published:Updated:

`காணவில்லை!’ - தூக்குத்தண்டனையை நிறைவேற்றும் ஹேங்மேன்கள்... ஏன்?

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலத்திலும் ஒவ்வொரு மரண தண்டனையை நிறைவேற்றும்போதும், ஹேங்மேனைத் தேடி அலைவது திகார் சிறை அதிகாரிகளின் வாடிக்கை.

மரண தண்டனை
மரண தண்டனை

சுதந்திர இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை குற்றவாளி நாதுராம் கோட்சே. காந்தியைக் கொன்ற வழக்கில், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு, ஒரே வார காலத்தில் அதாவது 1949-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அவரின் உயிர் பறிக்கப்பட்டது. கடைசியாகத் தூக்கிலிடப்பட்டவர் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தக் காரணமாக இருந்த தீவிரவாதி அப்சல் குரு. பல சினிமாக்களில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் முறையை பார்த்திருப்போம். குற்றவாளிகளைத் தூக்கில் போடுபவர்களை 'ஹேங்மேன்கள்' என்பார்கள்.

தற்போது, இந்திய சிறைகளில் இந்தப் பணியாளர்கள் இருக்கிறார்களா... என்றால் இல்லை என்பதுதான் பதில்! பல சிறைகளில் 'ஹேங்மேன்' என்று அழைக்கப்படும் இந்தப் பணியாளர்கள் காணாமலேயே போய்விட்டனர். இந்தியாவில் மட்டுமல்ல தெற்காசியாவிலேயே திகார் சிறைதான் மிகப் பெரியது. ஆயிரக்கணக்கில் இங்கே கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறையில் கடைசியாக அப்சல் குருவுக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குரு
மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குரு

அப்போது, இந்தச் சிறையில் தூக்குப்போடும் 'ஹேங்மேன்' பணியில் யாரும் இல்லை எனச் சர்ச்சை வெடித்தது. வேறு சிறையில் இருந்து வேறு யாரோ வந்து அப்சல் குருவைத் தூக்கிலிட்டனர் என்று சொல்லப்பட்டது. ஆனால், திகார் சிறையின் ரிக்கார்டுகளைப் பொறுத்தவரை, 'ஹேங்மேன் 'என்ற பணியில் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. 1950-ம் ஆண்டு இந்தச் சிறை கட்டப்பட்டது. அன்று முதல் இன்று வரை இதுதான் நிலை. 1987-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்த குற்றவாளிகள் சத்வந்த் சிங், கேகர் சிங் ஆகியோர் இதே சிறையில்தான் தூக்கிலிடப்பட்டனர். அப்போதும், திகார் சிறையில் ஹேங்மேன் இல்லை. மீரட் சிறையில் இருந்து ஹேங்மேன் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. தூக்குத்தண்டனையை நிறைவேற்றிய ஹேங்மேனுக்கு ரூ.200 அலவன்ஸ் வழங்கப்பட்டது.

திகார் சிறையில் 30 ஆண்டுகளாக அதிகாரியாகப் பணியாற்றி வரும் சுனில் குப்தா கூறுகையில், ''1989-ம் ஆண்டுக்குப் பிறகு, 2013-ம் ஆண்டு வரை அதாவது, அப்சல் குருவை தூக்கில் போடும் வரை திகார் சிறையில் வேறு யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அதனால், ஹேங்மேன் என்கிற பணியாளரை சிறைத்துறை மறந்தேவிட்டது. மேலும், சிறை என்பது கைதிகளைத் திருத்த மட்டும்தான். உயிரைப் பறிக்க அல்ல என்கிற எண்ணமும் உள்ளது. எப்போதாவது குற்றவாளிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. அதற்காகத் தனியே பணியாளரை நியமித்து சம்பளம் கொடுப்பது என்பது இல்லாத பணிக்குச் சம்பளம் கொடுப்பது போன்றது'' என்கிறார்.

அப்சல் குரு விவாகரத்துக்குப் பிறகு, திகார் சிறையில் ஹேங்மேன் இல்லாத விஷயம் வெளியே தெரிந்து, இருவர் அந்தப் பணிக்கு வர விரும்புவதாகத் திகார் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினர். எனினும், திகார் சிறை அதிகாரிகள் அதைக் கண்டு கொள்ளவில்லை.

திகார் சிறை
திகார் சிறை
டிவி சீரியல் ஐடியா; ராஜஸ்தான் பாம்பு; நீண்ட நாள் பிளான்! -கணவரைச் சிக்கவைத்த பிரேத பரிசோதனை அறிக்கை

தற்போது, நிர்பயா வழக்கில் கைதான வினே ஷர்மாவின் கருணை மனுவை டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் நிரகாரித்து விட்டார். தொடர்ந்து, வினே ஷர்மாவின் மனு உள்துறை அமைச்சகம் வழியாகக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் முடிவைப் பொறுத்து, உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும். குடியரசுத் தலைவரும் மனுவை நிராகரித்தால், 'பிளாக் வாரண்ட்' என்கிற மரண தண்டனையை நிறைவேற்றும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும்.

உத்தரவு கிடைத்த பிறகு, இந்த மாதம் முடிவதற்குள் ஏதாவது ஒரு நாளில் வினே ஷர்மாவுடன் நிர்பயா வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளும் தூக்கிலிடப்படலாம். நிர்பயா வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் கருணை மனு கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தூக்குத்தண்டனை நிறைவேற்ற வேண்டி இருப்பதால், மீண்டும் ஹேங்மேனைத் தேடி அலைகின்றனர் திகார் சிறை அதிகாரிகள்.

விஷ ஊசியால் மரண தண்டனையை நிறைவேற்றும் முறை
விஷ ஊசியால் மரண தண்டனையை நிறைவேற்றும் முறை
Vikatan

நாடு முழுவதும் பல சிறைகளில் ஹேங்மேன் பணி வெற்றிடமாகவே இருக்கிறது. மனித உரிமை ஆணையங்களும் மரண தண்டனைக்கு எதிரானவர்களும் எதிர்ப்பு தெரிவிப்பதால், இந்தப் பணியிடங்கள் காலியாகவே இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, சிம்லாவைச் சேர்ந்த ரவிகுமார் என்பவர் நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கில் போட தன்னை தற்காலிக ஹேங்மேனாகப் பணியில் அமர்த்தும்படி கடிதம் எழுதியுள்ளார்.