Published:Updated:

பாபர் மசூதி இடிப்பு வழக்கு எந்த நிலையில் இருக்கிறது?

பாபர் மசூதி இடிப்பு

டிசம்பர் 6, 1992 சுமார் ஐந்து மணி நேர கரசேவகர்களின் வெறியாட்டத்துக்குப் பணிந்து தரைமட்டமானது பாபர் மசூதி.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு எந்த நிலையில் இருக்கிறது?

டிசம்பர் 6, 1992 சுமார் ஐந்து மணி நேர கரசேவகர்களின் வெறியாட்டத்துக்குப் பணிந்து தரைமட்டமானது பாபர் மசூதி.

Published:Updated:
பாபர் மசூதி இடிப்பு

டிசம்பர் 6, 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது பாபர் மசூதி. லட்சக்கணக்கான கரசேவகர்கள் ஊர்வலம் என்ற பெயரில் அத்துமீறி நிகழ்த்திய மத வன்முறையின் நினைவு தினம் இன்று. ஊர்வலத்தில் உணர்ச்சிவசப்பட்டு தங்கள் நம்பிக்கைகளுக்காக அவர்கள் ஆயுதம் ஏந்தியதாகச் சொல்லப்பட்டாலும், இது மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுக் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை என்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் நம் வரலாறுகளில் சிதறிக்கிடக்கின்றன.

பாபர் மசூதி
பாபர் மசூதி

அந்த ஆதாரங்களைத் தேடித் திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் வேலைதான் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சரி, 'இந்த வழக்கின் அடிப்படை விவரங்கள் என்ன? யார் மீது வழக்கு தொடக்கப்பட்டிருக்கிறது?'. இங்கே விரிவாகக் காண்போம்.

சுமார் 5 மணி நேரம்... கரசேவகர்களின் வெறியாட்டத்துக்குப் பணிந்து தரைமட்டமானது பாபர் மசூதி, அதைத் தொடர்ந்து இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன. முதல் வழக்கு முகம் தெரியாத ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் மீது கொள்ளை, திருட்டு, தாக்குதல், பொது அமைதிக்கு இடைஞ்சல் விளைவித்த குற்றங்களுக்காகவும், இரண்டாம் வழக்கு இரு மதக் குழுக்களுக்கிடையே பகையைத் தூண்டுவது, தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயல்களைச் செய்வது, பொது நலனுக்கு ஊரு விளைவிக்கும் வகையில் பேசுவது ஆகிய குற்றங்களுக்காகவும் பா.ஜ.க-வின் சங் பரிவார் தலைவர்களான எல்.கே.அத்வானி, அசோக் சிங்கால், வினய் கட்டியர், உமா பாரதி, சாத்வி ரிதம்பர, முரளி மனோகர் ஜோஷி, கிரிராஜ் கிஷோர் மற்றும் விஷ்ணு ஹரி டால்மியா ஆகிய எட்டு பேர் மீதும் பதியப்பட்டது. இவை தவிர்த்து இந்தச் சம்பவத்தையொட்டி 40 -க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்போது குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் ஷர்மா, உத்தரப்பிரதேச அரசின் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டு, மாநில சட்டப் பேரவையைக் கலைக்க உத்தரவிட்டார். பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய ஒரு தனி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. பா.ஜ.க, வி.ஹெச்.பி தலைவர்கள் உள்ளிட்ட 68 பேர் இதற்குக் காரணம் என்று விசாரணை ஆணையம் அறிக்கை தர அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

வழக்கை விசாரித்த அலகாபாத் விசாரணை நீதிமன்றம், எல்.கே.அத்வானி உட்பட பா.ஜ.க தலைவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம் லக்னோ சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு உத்தரவிட்டது. அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது லக்னோவில் சி.பி.ஐ நீதிபதி எஸ்.கே.யாதவ் விசாரணை நடத்துகிறார்.

அத்வானி
அத்வானி

இந்த நிலையில், சமீபத்திய அயோத்தி தீர்ப்பைத் தொடர்ந்து, பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் அதனுடைய தாக்கம் இருக்கக் கூடும் என்று பல சட்ட அறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விசாரித்த விசாரணை ஆணையத்தின் நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் பி.பி.சி-க்கு அளித்த பேட்டியில், "உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பையடுத்து, பாபர் மசூதி இடிப்பு சரியானது என்று நீதிமன்றத்தில் வாதிடுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும், அயோத்தி தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும்" எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்குகள் கடந்த 27 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதிலேயே தெளிவின்றி செயல்பட்டு வந்திருக்கிறது அரசு இயந்திரம். நீதித்துறை நில உரிமை யாருக்கு என முடிவு செய்யும் சிவில் வழக்குத் தீர்ப்பதில் காட்டிய அதே வேகத்தை, பாபர் மசூதியை இடித்த கிரிமினல் வழக்குக்கும் காட்டுவது காலத்தின் கட்டாயம்.

அரசும் அதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதியின் பதவிக்காலம் முடிந்தும் உச்ச நீதிமன்றம் அவருக்குப் பதவி நீட்டிப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இனியாவது விரைந்து இந்த வழக்குகளிலும் தீர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு
பாபர் மசூதி இடிப்பு வழக்கு

சி.பி.ஐ வழக்கு முடிந்தாலும், மேல்முறையீடு இருக்கிறது, மீண்டும் விசாரணை இருக்கிறது, இதையெல்லாம் தாண்டி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனையே கொடுத்தாலும் அப்போது அதில் சிலராவது இருப்பார்களா என்பதே சந்தேகம்தான்!