Published:Updated:

"லஞ்ச் பாக்ஸ் பிசினஸில் 1000 குழந்தைகளுக்கு நல்ல உணவு... 45 பேருக்கு வேலை!’’ - நெகிழும் கிருபா தேவி

"லஞ்ச் பாக்ஸ் பிசினஸில் 1000 குழந்தைகளுக்கு நல்ல உணவு... 45 பேருக்கு வேலை!’’ - நெகிழும் கிருபா தேவி
"லஞ்ச் பாக்ஸ் பிசினஸில் 1000 குழந்தைகளுக்கு நல்ல உணவு... 45 பேருக்கு வேலை!’’ - நெகிழும் கிருபா தேவி

ன்று நிலாவைக் காட்டி பால் சோறு ஊட்டிய தாய்மார்கள், இன்று யூடியூபில் ரைம்ஸ் காட்டி சாதம் ஊட்டுகிறார்கள். நிலவைப் பார்த்து குழந்தைகள் சாப்பிட்டபோது, அங்கே ஆயா வடையை மட்டுமே சுட்டுக்கொண்டிருந்தார். இந்த யூடியூப் சேனல்கள் அப்படியா? ஒவ்வொரு ரைம்ஸுக்கு இடையே விதவிதமான ஜங்க் ஃபுட் விளம்பரங்களைக் காட்டி சுண்டி இழுக்கிறது. கார்ட்டூன்களை கதாநாயகர்களாக நம்பும் பிஞ்சுகளுக்கு, விளம்பரத்தில் வரும் உணவு வகைகளும் அப்படித்தானே.

ஒரு பக்கம் விளம்பர மாயை, மற்றொரு பக்கம் பள்ளிக்குச் செல்லும் வேகத்தில் காலை உணவைத் தவிர்ப்பது எனக் குழந்தைகளின் வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான உணவை அவர்களுக்கு எப்படிக் கொடுப்பது எனப் புரியாமல் பெற்றோர்களும் தவிப்பில் இருக்கிறார்கள். இதற்கான தீர்வாக, ஆரோக்கியம் நிறைந்த உணவுகளைக் கொண்டுசெல்லும் 'லஞ்ச் பாக்ஸ்' திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார், சென்னை போரூரைச் சேர்ந்த கிருபா தேவி. 

“நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினீயர். என் கணவர் எம்.பி.ஏ முடிச்சுட்டு ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டிருக்கார். என் பையன் பெயர் மதி கணேஷ். அவனுக்கு மூணு வயசு இருக்கும்போது சாப்பாடு ஊட்டுறது பெரிய சவாலா இருந்துச்சு. ஆனால், அக்கம் பக்கத்து வீடுகளில் இருக்கிறவங்க தங்கள் குழந்தைச் சாப்பிட்டால் போதும்னு கடைகளில் விற்கும் ஜங்க் ஃபுட்ஸை வாங்கிக் கொடுப்பாங்க. அதைப் பாக்கிறப்ப மனசுக்குக் கஷ்டமா இருக்கும். இப்படி ரெடிமேடா கிடைக்கிறதை எல்லாம் வாங்கிக் கொடுக்காதீங்கன்னு அவங்ககிட்ட சொல்வேன். என் பையனும் சாப்பிடாமல் அடம்பிடிக்கிறப்ப என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.

ஆரம்பத்தில், அவன் ஆசைப்பட்டுக் கேக்கும் பீட்சா, கேக், பர்கர் போன்றவற்றை வீட்டிலேயே ரெடி பண்ணினேன். பீட்சாவில் மல்டி கிரைன்ஸ் தூவியும், மைதா சேர்க்காத கேக், அதில் ஸ்ட்ராபெரி, பைனாப்பிள்னு ஃப்ரூட்ஸை சேர்த்துக் கொடுத்தேன். பீட்ரூட் பர்கர், வெஜிடபுள் இட்லி என வித்தியாசமா செஞ்சுகொடுத்ததும் விரும்பிச் சாப்பிட ஆரம்பிச்சான். இதைப் பக்கத்து வீட்டில் இருக்கிறவங்களுக்கும் சொல்லிக்கொடுத்தேன். அப்போதான் ஏன் இதை ஒரு பிசினஸா பண்ணக்கூடாதுன்னு யோசிச்சு களத்தில் இறங்கினேன்” என்கிறார் கிருபா தேவி. 

திருமணத்துக்குப் பிறகு கணவருக்கு உதவியாக வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது பிசினஸ் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த கிருபா தேவிக்கு, தன் மகனுக்காக தயாரித்த ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளே புதிய பாதையைக் காட்டியுள்ளது. 

“பிசினஸ் பண்ணணும்னு முடிவு பண்ணினதும் எட்டு மாசம் நியூட்ரிஷன் பத்தின ரிசர்ச் பண்ண ஆரம்பிச்சேன். பலரும் என் ஐடியா சரி வராதுன்னு சொன்னாங்க. அப்போதான் என் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச ஒரு செஃப் அறிமுகமானார். அவரோடு சேர்ந்து நியூட்ரிஷனிஸ்ட் கொடுத்த ஐடியாக்களை வெச்சு ஸ்நாக்ஸ், ஃபுட்ஸ் எல்லாம் தயாரிக்க ஆரம்பிச்சேன். மூணு மாசத்துக்குக் குழந்தைகள், ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் என மூன்றாயிரம் பேருக்கு ஃப்ரீயா கொடுத்தேன். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சதும், ஆன்லைன்ல பிசினஸை ஆரம்பிச்சேன். 2013 டிசம்பர் மாசம் 25 லஞ்ச் பாக்ஸோடு ஆரம்பிச்ச இந்த பிசினஸ், இப்போ தினமும் 1000 பாக்ஸ் வரை சேல்ஸ் ஆகுது. 45 பேருக்கு வேலைவாய்ப்பையும் கொடுத்திருக்கேன். 

கவிஞர் தாமரை, டி.டி.வி தினகரன் போன்ற பிரபலங்களுக்கும் டாக்டர்ஸ், அட்வகேட்ஸ் எனப் பலரின் வீடுகளுக்கும் என் லஞ்ச் பாக்ஸை டெலிவரி பண்றதை நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. இன்றைய குழந்தைகளுக்கு சத்தான உணவுகளைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறோம் என்கிற மன நிறைவும் கிடைக்குது'' என்கிறார் பெருமிதப் புன்னகையோடு. 

கிருபா தேவியின் அடுத்தத் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களிடம் நியூட்ரிஷன் குறித்த விழிப்புஉணர்வு முகாமை நடத்துவது, இந்த லஞ்ச் பாக்ஸை குறைந்த விலையில் அவர்களிடமும் கொண்டுபோய்ச் சேர்ப்பது. 

நல்ல முயற்சிக்குப் பாராட்டும் பூங்கொத்தும்!