Published:Updated:

செவ்வாய் ரோபோ சக்சஸ் ஹீரோக்கள்!

பி.எஸ்.முத்து

பிரீமியம் ஸ்டோரி

''நாங்களே உருவாக்கிய ரோபோ முதலை  இது. கையைப் பக்கத்தில்  கொண்டு போகாதீங்க கடிச்சிடும்' என்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த இளம் ரோபோட்டிக் சாதனையாளர்களான ஆரோக்ஜோ, மோதேஷ்வர் மற்றும் சிவமாணிக்கம்.

செவ்வாய் ரோபோ சக்சஸ் ஹீரோக்கள்!

சும்மா ஜோக் அடிக்கிறாங்க என நினைத்து, அந்த ரோபோ முதலை அருகே கைகளைக் கொண்டு சென்றால், நிஜமாகவே கடிக்க வருகிறது.

''கடந்த வருடம் மலேசியாவில் நடந்த ரோபோட்டிக் போட்டியில் பங்கேற்றபோது, 35-வது இடம்தான் பிடிக்க முடிஞ்சது. மனம் சோர்ந்துவிடாமல் இந்த முறை ஜெயிச்சே ஆகணும்னு திட்டமிட்டு உழைச்சோம். அதற்கான பலன் கிடைச்சிருக்கு' என்கிற மோதேஷ்வர் குரலில் வெற்றிப் பெருமிதம்.  

உலக அளவில் ஒவ்வொரு வருடமும், சர்வதேச ரோபாட் ஒலிம்பியாட் (International Robot Olympiad)போட்டி நடத்தப்படுகிறது. 11-ம் ஆண்டாக ரஷ்யாவில் நடைபெற்ற போட்டியில், 62 நாடுகளைச் சேர்ந்த 367 அணிகள் பங்குபெற்றன. அதில், உயர் இளநிலைப் பிரிவில், இரண்டாம் இடம் பிடித்து மூவரும் சாதனை படைத்திருக்கிறார்கள். முதல் இடத்தை ஜப்பான் நண்பர்கள் பிடித்திருக்கிறார்கள்.

'நான், செயின்ட் மைக்கேல் அகாடமியில் படிக்கிறேன். மோதேஷ்வர், அக்‌ஷயா பள்ளியில் படிக்கிறான். சிவா, டி.ஏ.வி பப்ளிக் பள்ளியில் படிக்கிறான். நான்கு வருடங்களாக, 'டெக்னாலஜி எஜுகேஷன் சொல்யூஷன்’ பயிற்சி நிறுவனத்தில் ரோபோட்டிக் பற்றி படிக்கிறோம்'' என்கிறார் ஆரோக்ஜோ.

''ரஷ்யாவில், ரெகுலர் மற்றும் ஓப்பன் பிரிவுகளில், மூன்று நாட்கள் போட்டி நடந்தது. ரெகுலர் பிரிவில், ஸ்பாட்லேயே கான்செப்ட் கொடுத்தாங்க. அங்கேயே செஞ்சு காட்டினோம். ஓப்பன் பிரிவில், முதலிலேயே தலைப்பு கொடுத்துட்டாங்க. இந்த வருடம், 'ரோபோக்களும் விண்வெளியும்’ என்ற தலைப்பு. ஒவ்வொரு டீமுக்கும் தனித்தனி இடம். நாமே செட்டிங் போடணும். ஃபைபரில் நாங்க போட்ட செவ்வாய் கிரக செட்டைப் பார்த்து, பலரும் பாராட்டி, போட்டோ எடுத்துக்கிட்டாங்க. இந்தப் போட்டியில், பார்வையாளர்களோடு நடுவர்களும் கலந்து இருப்பாங்க. ஸ்டால் அமைக்கிறது, நம்ம பிரசன்டேஷன், யாராவது உதவி பண்றாங்களா என எல்லாவற்றையும் கவனிச்சுதான் மார்க் போடுவாங்க. மொத்த மதிப்பெண் 200. எங்க ஸ்டாலில் நின்னு போட்டோ எடுத்துக்கிட்டுப் போன ஒருத்தர்தான், 9 நடுவர்களில் ஒருத்தர்னு தெரிஞ்சதும் செம ஷாக்'' கண்கள் விரியச் சொல்கிறார் சிவமாணிக்கம்.

செவ்வாய் ரோபோ சக்சஸ் ஹீரோக்கள்!

''நாங்கள் உருவாக்கிய ரோபோவின் பெயர், 'இன்ஃபினிட்டி  எம் மார்ஸ் ரோவர் (Infinity M MARS Rover) இது, செவ்வாய் கிரகத்தின் திட, திரவ, வாயுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரிக்கும். நீரின் சாம்பிளை பூமிக்கு அனுப்பும். மண்ணின் செயல்பாடு பற்றிச் சொல்லும். செவ்வாய் கிரகத்தில் பாறைகள்  கரடுமுரடாக   இருப்பதால், அனுப்பும் இயந்திரங்கள் பாறையில் சிக்கிக்கும். அதுக்கு ஒரு தீர்வாக, எங்க ரோபோவில் ஸ்பெஷல் சக்கரத்தை மாட்டிவிட்டு, செயல்படுத்திக் காட்டினோம். எங்க ரோபோவின் இன்னொரு ஸ்பெஷல், கிடைக்கும் சூரிய ஒளி, காற்றில் இருந்து தனக்குத் தேவையான சக்தியை பேட்டரியில் சேர்த்துவைக்கும்'' என்றார் மோதேஷ்வர்.

மூவரின் வருங்கால திட்டம் என்ன?

செவ்வாய் ரோபோ சக்சஸ் ஹீரோக்கள்!

''இந்திய ராணுவத்தில், 'அயர்ன் மேன்’ மாதிரி போருக்கான ரோபோக்களைக் கண்டுபிடிக்கணும்' என்கிறார் ஆரோக்ஜோ.

''நான், வித்தியாசமான டிசைன்களில் கார்களை உருவாக்குவேன்' என்கிறார் சிவமாணிக்கம்.

''வருங்காலத்தில் மனிதர்கள் செய்யும் கடினமான வேலை என்று எதுவும் இருக்கக் கூடாது. அந்த வேலைகளை எல்லாம் செய்யும் ரோபோக்களை உருவாக்குவேன்'' என்கிறார் மோதேஷ்வர்.

'எதிர்கால உலகம் ரோபோக்களின் உதவியுடன்தான் இயங்கும். இன்னும் நிறைய மாணவர்கள் ரோபோட்டிக்ஸ் பற்றி தெரிஞ்சுக்கணும்'' என்கிறார், மூவரின் பயிற்சியாளர் காட்வின் வர்கீஸ்.

எதிர்கால ரோபோட்டிக்ஸ் துறையில் புகுந்து விளையாடக் காத்திருக்கிறார்கள், இந்தக் குட்டி ஹீரோக்கள்.

படம்: தி.ஹரிஹரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு