Election bannerElection banner
Published:Updated:

ஜாலியாகப் பூத்த பிரெய்ல் மலர்!

ஜாலியாகப் பூத்த பிரெய்ல் மலர்!

'உங்களோட பாடப் புத்தகங்களைப் படிக்கிறப்ப ஜாலியா இருக்குமா... போரிங்கா இருக்குமா?'

இப்படிக் கேட்டதும் அந்த நிகழ்ச்சியில் கூடியிருந்த ஒட்டுமொத்த சுட்டிகளும் 'ஜாலியா இருக்கும்' எனச் சொல்லி அசரவைத்தார்கள். அவர்களின் உற்சாகம்  அத்தனை பேரையும் தொற்றிக் கொண்டது.

ஜாலியாகப் பூத்த பிரெய்ல் மலர்!

கேள்வி கேட்டவர், விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன். பதில் சொன்னவர்கள், சென்னையில் உள்ள லிட்டில் ஃப்ளவர் பார்வைக்குறையுடையோர் பள்ளிக் குழந்தைகள்.

'உங்க பாடப் புத்தகங்களே ஜாலி என்றால், இனி ஒவ்வொரு மாதமும் நீங்க படிக்கப்போகிற சுட்டி விகடன், இன்னும் ஜாலியாக இருக்கும். அழகான கதைகள், அறிவியல் தகவல்கள், உலகச் செய்திகள் என விதவிதமாகப் படித்து மகிழலாம்' என்றார் விகடன் நிர்வாக இயக்குநர்.

பூத்தது பிரெய்ல் மலர்!

ஆம். அது, சுட்டி விகடன் பிரெய்ல் பதிப்பு வெளியீட்டு நிகழ்ச்சி. தேசிய பார்வையற்றோர் நிறுவனத்தின் மண்டல இயக்குநர் கிருபானந்தம் யாசாராபூடி வெளியிட, லிட்டில் ஃப்ளவர் பள்ளியின் மாணவ, மாணவியர் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள, நெகிழ்ச்சியோடு ஆரம்பித்தது விழா.

ஜாலியாகப் பூத்த பிரெய்ல் மலர்!

'புத்தகமே மிகச் சிறந்த நண்பன். எனக்கு கோபம், வருத்தம் என எதுவாக இருந்தாலும் சிறிது நேரம் புத்தகம் படிப்பேன். மனம் உற்சாகம் அடைந்துவிடும். தமிழில் நிறைய பத்திரிகைகள் வந்தாலும் பார்வைக் குறையுடையோருக்கான புத்தகம் வருவது இல்லை. சுட்டி விகடன் அந்தக் குறையைத் தீர்த்துவைத்துள்ளது' என்றார் கிருபானந்தம் யாசாராபூடி.

வாசித்த விரல்கள்!

புத்தகங்களைப் பெற்றுக்கொண்ட ஐந்து பேரில், மாணவிகள் ஐஸ்வர்யா, அனுராதா இருவரும் மேடையிலேயே சில பக்கங்களை வாசித்து, கைதட்டல்களைப் பெற்றார்கள்.

ஜாலியாகப் பூத்த பிரெய்ல் மலர்!

'ஐஸ்வர்யா, இதுவரைக்கும் சுட்டி விகடனை மத்தவங்க படிக்கக் கேட்டுத்தான் தெரிஞ்சுப்போம். இனி, நாமே படிக்கலாம்' என்றார் அனுராதா.

'நான், பல பக்கங்களைப் படிச்சே முடிச்சுட்டேன் அனுராதா. இதில் எனக்குப் பிடிச்ச ஒன்றைச் சொல்றேன் கேளு. 'வெற்றிக்கான 16 டிப்ஸ்’ என்ற பகுதியில், 'எந்த முயற்சியிலாவது தோல்வி அடைந்தால், உங்களுக்கு நீங்களே கங்கிராஜுலேஷன்ஸ் சொல்லிக் கொள்ளுங்கள். ஏனென்றால், தோல்வி கற்றுக்கொடுக்கும் பாடத்தை உலகில் வேறு எந்த ஆசிரியரும் கற்றுக்கொடுக்க மாட்டார். தோல்வியே கற்றுக்கொள்தலின் ஆரம்பம்' என்ற வரிகள் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு' என்று ஐஸ்வர்யா தன் விரல்களை ஓட்டி வாசித்ததும் அரங்கம் முழுக்கக் கைதட்டல்.

சுட்டி விகடனுடன் இணைந்து பிரெய்ல் பதிப்பை அச்சிட்டு அளிப்பது, அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பு (ALL INDIA CONFEDERATION OF THE BLIND- AICB). அதன் தமிழ்நாட்டு அமைப்பின் செயலாளர் முத்துச்செல்வி பங்கேற்றார். 'மற்ற புத்தகங்களைத் தன்னார்வ அமைப்புகளிடம் நிதியைப் பெற்று, சொந்த முயற்சியில்தான் வெளியிட்டு இருக்கிறோம். ஆனால், விகடன் நிறுவனத்தார் அவர்களாக முன்வந்து, ஒவ்வொரு மாதமும் இந்தப் புத்தகம் வெளிவருவதற்கான முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். சுட்டி விகடன் பிரெய்ல் பதிப்பு மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 பார்வையற்றோர் பள்ளிகள், அமைப்புகள் பயன்பெறுவர். 5,500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து மகிழ்வார்கள்' என்றார்.

கடவுள் கற்ற பள்ளி!

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற எழுத்தாளரும் பேச்சாளருமான பாரதி கிருஷ்ணகுமார், தனது கலகல பேச்சால் அனைவரையும் ரசிக்க வைத்தார்.

ஜாலியாகப் பூத்த பிரெய்ல் மலர்!

'உலகில், வேறு எந்த மொழியிலும் இல்லாத சிறப்பு, பிரெய்ல் மொழிக்கு உண்டு. எழுதும்போது இடமிருந்து வலமாக எழுதுவார்கள். படிக்கும்போது வலமிருந்து இடமாகப் படிப்பார்கள். நீங்கள் தமிழை  பிழை இன்றிப் படிப்பதைக் கேட்டு மகிழ்ந்தேன். உங்களின் மொழித்திறன் சிறப்பாக இருக்கிறது. சுட்டி விகடன் பிரெய்ல் பதிப்பு உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்' என்றவர், ஒரு நிகழ்ச்சியையும் குறிப்பிட்டார்.

'ஒருநாள் எனது மகள், 'கடவுள் எந்த மொழியில் பேசுவார்?’ என்று கேட்டாள். 'அவர் எல்லா மொழியிலும் பேசுவார்' என்றேன். உடனே அவள், 'அந்த மொழிகளை அவர் எந்தப் பள்ளியில் படித்தார்?' என்று கேட்டாள். 'அவர் எந்தப் பள்ளிக்குமே போகாமல் கற்றுக்கொண்டார்' என்றேன். 'எல்லா மொழிகளும் தெரிந்த கடவுளே எந்தப் பள்ளிக்கும் போகாதபோது, நாங்கள் மட்டும் ஏன் பள்ளிக்குப் போக வேண்டும்?' என்று கேட்டாள். பதில் சொல்ல முடியவில்லை. குழந்தைகள் இப்படித்தான் கேள்விகளைக் கேட்டு, எங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுத்தருகிறீர்கள். இந்த நெகிழ்ச்சியான நேரத்தில், உங்களுக்காக ஒரு கதை சொல்கிறேன்' என்றவர், புகழ்பெற்ற லியோ டால்ஸ்டாயின் கதை ஒன்றைத் தனது பாணியில் கலகலப்பாகச் சொன்னார்.

ஜாலியாகப் பூத்த பிரெய்ல் மலர்!

அதன் பிறகு, மேடைக்கு வந்தார் ஆசியாவின் அதிவேக டிரம்மர். 'உலகின் சிறந்த ஏழு இளம் மேதைகளில் ஒருவர்’ போன்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற 17 வயது சித்தார்த். தனது இசையால் அனைவரையும் தாளம் போடவைத்தார்.

பிரெய்ல் சுட்டி விகடனுடன் மகிழ்ச்சியாக நடைபோட்ட சுட்டிகள், 'மற்றவர்கள் படிச்சுக் கேட்கும்போதே, சுட்டி விகடனின் வாசகர்களாக இருந்தவங்க நாங்கள். இப்போ, எங்களுக்கே எங்களுக்காக பிரெய்ல் சுட்டி விகடன் வந்துடுச்சு. இனிமே, எல்லாவற்றையும்  நாங்களே படிச்சுத் தெரிஞ்சுக்கப்போறோம்' என்றனர்.  அந்தக் குரலில் அளவுகடந்த உற்சாகம்!

படங்கள்: எம்.உசேன், சொ.பாலசுப்ரமணியன்

ஓவியம்: பிள்ளை

பாரதி கிருஷ்ணகுமார் சொன்ன கதை: நான் யார்?

ஜாலியாகப் பூத்த பிரெய்ல் மலர்!

மனித நடமாட்டமே இல்லாத ஒரு காடு. அங்கே இருந்த விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர், இந்தக் காடு யாருக்குச் சொந்தம் என்று சண்டை வந்துவிட்டது. கானகத்தின் தேவதை அங்கே தோன்றி, 'உங்களுக்குள் சண்டை வேண்டாம். நீங்கள் எல்லோருமே எனது பிள்ளைகள். உங்கள் எல்லோருக்கும் இந்தக் காட்டில் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது' என்று சொன்னாள்.

ஆனாலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் சண்டை ஓயவில்லை. ஒன்றை ஒன்று பயங்கரமாகத் தாக்கிக்கொண்டன. ஒரு கட்டத்தில், விலங்குகள் ஜெயித்துவிடும் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது, பறவைகள் கூட்டத்தில் இருந்த வெளவால் ஒன்று, சுயநலமாக யோசித்தது. அது பறவைகளிடம், 'எனக்கு இறக்கை இருந்தாலும் நான் பறவை அல்ல. உங்களைப் போல முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கவில்லை. குட்டி போட்டு பால் கொடுக்கிறேன். ஆகவே, விலங்கினமான நான் அவர்கள் கூட்டத்துக்கே செல்கிறேன்' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டது.

சில நாட்களில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மீண்டும் சண்டை நடந்தது. இந்த முறை, பறவைகளின் பக்கம் வெற்றி கிடைக்கும் நிலை. அப்போது அதே வெளவால், 'குட்டி போட்டு பால் கொடுப்பதில் வேண்டுமானால் நான் உங்களைப் போல இருக்கலாம். ஆனால், என்னுடைய மற்ற செய்கைகள் எல்லாம் பறவைகள் போன்றதே. ஆகவே, நான் பறவை இனம்தான். அதனால், பறவைகளிடமே செல்கிறேன்' என்றது.

ஜாலியாகப் பூத்த பிரெய்ல் மலர்!

அப்போது, கானகத் தேவதை தோன்றினாள். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இடையே மீண்டும் சமாதானம் செய்தாள். தங்கள் தவறை உணர்ந்த விலங்குகள், ஒற்றுமையாக வாழ முடிவுசெய்தன. ஆனால், சுயநலமாக நடந்துகொண்ட வெளவாலை இரண்டு பக்கமும் ஒதுக்கிவிட்டார்கள்.

பாவம் வெளவால், மற்றவர்கள் முகங்களில் விழிக்க வெட்கப்பட்டு, இருட்டுக் குகைக்குள் சென்று தலைகீழாகத் தொங்க ஆரம்பித்தது. இரவில்தான் வெளியில் வருகிறது. சுயநலக்காரர்களின் நிலை இதுதான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு