Published:Updated:

சின்னச்சின்ன வண்ணங்கள்!

சின்னச்சின்ன வண்ணங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

குறுக்கே ஓடு!

காட்டில், நரி ஒன்று உணவு தேடிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, காட்டுப்பூனை ஒன்று குறுக்காக ஓடி, மரத்தில் ஏறியது.

சின்னச்சின்ன வண்ணங்கள்!

நரிக்கு சரியான கோபம். ''ச்சே... சகுனமே சரியில்லை. ஏய் பூனைப் பயலே, இன்று மட்டும் எனக்கு உணவு கிடைக்காவிட்டால், நீ எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து உதைப்பேன்'' என்று எச்சரித்துவிட்டுச் சென்றது.

சிறிது தூரம் சென்றவுடனேயே, நன்கு கொழுத்த முயல் ஒன்றைக் கண்ட நரி, துரத்திச் சென்று உணவாக்கிக் கொண்டது.

''அடடா... இன்றைக்கு அதிர்ஷ்டம்தான். அந்த பூனைப் பயலின் முகராசி நல்லாத்தான் இருக்கு. அவனை ஃப்ரெண்டு பிடிச்சுக்கிட்டு, தினமும் அவன் முகத்திலேயே முழிச்சுட்டு வேட்டைக்குப் போகலாம்'' என்றெண்ணி, காட்டுப் பூனையைத் தேடிவந்தது.

நரியைக் கண்டதும், பயத்துடன் அருகில் இருந்த மரத்தில் ஏறிக்கொண்டது பூனை.

''நண்பா... பயப்படாதே. இன்று நீ குறுக்கே ஓடிய அதிர்ஷ்டத்தால், வெகு சுலபமாக உணவு கிடைத்தது. இன்று முதல் நாம் நண்பர்களாக இருப்போம். இனிமேல், நான் வேட்டைக்குக் கிளம்பும்போது, நீ குறுக்கே ஓட வேண்டும்’ என்றது நரி.

'இது என்னடா இம்சையாப் போச்சு. நாளைக்கே சரியான இரை கிடைக்கலைன்னா அதுக்கும் என்னையே காரணமாக்கி உதைப்பானே’ என நினைத்த காட்டுப்பூனை, தலையை ஆட்டியது.

நரி கொஞ்சம் தூரம் சென்றதும், 'வலிமையானவனிடமும் உயர்ந்த இடத்தில் இருப்பவனிடமும் மூடநம்பிக்கை இருந்தால், சுற்றி இருக்கிறவர்களுக்கும் பாதிப்பு. இனி, இங்கே இருக்கவே கூடாது’ என ஓட்டம் பிடித்தது.

- எஸ்.அபிநயா

வலியா வரமா?

அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்திருந்தார். அங்கு இருந்த பெரிய கோயிலில் தங்கினார். அவரைப் பார்க்க, மக்கள் திரண்டு வந்தனர். தங்களின் கஷ்டங்களைச் சொல்லி, தீர்வு கேட்டனர். முனிவரும் அவர்களுக்கு ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார்.

சின்னச்சின்ன வண்ணங்கள்!

அந்தக் கோயிலின் குளத்தை ஒட்டி ஒரு தென்னை மரம் இருந்தது. அது, இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது.

மக்கள் அனைவரும் சென்ற பிறகு, அந்த முனிவர் குளத்தை நோக்கி வந்தார். அப்போது, அந்தத் தென்னை மரம், ''ஐயா முனிவரே வணக்கம்' என்றது.

முனிவரும் வணங்கி, 'என்ன தென்னை மரமே, உன் குரலில் சோகம்?' என்று கேட்டார்.

''நீங்கள், மனிதர்களின் குறைகளைக் கேட்டு தீர்வு சொல்வதைக் கண்டேன். எனக்கும் நீண்ட காலமாக ஒரு பிரச்னை இருக்கிறது. அதைத்  தீர்க்க வேண்டும்' என்றது தென்னை மரம்.

''உனக்கு என்ன பிரச்னை?' என்று கேட்டார் முனிவர்.

''என் உடலைப் பாருங்கள். ஆங்காங்கே துளைகள். இதெல்லாம் ஒரு மரங்கொத்தியின் வேலை. அடிக்கடி இங்கே வந்து, என் உடலைக் கொத்தித் துன்புறுத்துகிறது. அந்த மரங்கொத்தி, இங்கே வராதவாறு நீங்கள் சபிக்க வேண்டும்' என்றது.

சின்னச்சின்ன வண்ணங்கள்!

சிரித்த முனிவர், ''மரமே, சிறிய வலிகளைத் தாங்கும் உறுதி இருந்தால்தான் பெரிய சாதனைகளைச் செய்ய முடியும். அந்த மரங்கொத்தி, உனக்குள் இருக்கும் பூச்சிகளை எடுத்துத் தின்பதற்காகவே கொத்துகிறது. அந்தப் பூச்சிகளை அப்படியே விட்டால், நீ விரைவிலேயே அழிந்துவிடுவாய். அதைத் தடுக்கும் தோழனாக மரங்கொத்தி இருக்கிறது. இது வலி அல்ல, உனக்குக் கிடைத்த வரம்'' என்றார் முனிவர்.

உண்மையைப் புரிந்துகொண்ட தென்னை மரம் புன்னகைத்தது.

அ.பழ.அறிவுக்கனி, சாவறா வித்யா பவன் மெட்ரிக் மே.நி.பள்ளி, கோயம்புத்தூர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு