Published:Updated:

குழந்தைகள் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட பெற்றோர் இப்படியும் உதவலாமே! #GoodParenting

குழந்தைகள் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட பெற்றோர் இப்படியும் உதவலாமே! #GoodParenting
குழந்தைகள் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட பெற்றோர் இப்படியும் உதவலாமே! #GoodParenting
குழந்தைகள் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட பெற்றோர் இப்படியும் உதவலாமே! #GoodParenting

குழந்தை வளர்ப்பில் பிரதானமானது அவர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பது. பெரியவர்களுக்குத்தான் பிரச்னைகள் வரும் என்பதல்ல. குழந்தைகளுக்கும் வரும்தானே! வழக்கமாக அவற்றைப் பெற்ற்றோர்கள் தீர்த்து வைப்பார்கள். அது சரியான நடைமுறைதான். ஆனால் முழுமையானது அல்ல. குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஒரு சிலவற்றையாவது அவர்களே தீர்த்துக்கொள்ளும் விதத்தில் பெற்றோர் பழக்க வேண்டியதும் அவசியம். 

முதலில், குழந்தைகளுக்கு எங்கிருந்தெல்லாம் பிரச்னைகள் வருகின்றன என்பதை பார்ப்போம். முதலில் வீடு, அடுத்து பள்ளி, நண்பர்கள், உறவினர்கள், சந்திக்கும் மனிதர்கள் உள்ளிட்டவற்றிலிருந்தே அவர்களுக்கு பிரச்னைகள் வருகின்றன. 

வீடு: குழந்தைகளுக்கான பிரச்னைகள் என்றதும் பலரும் வீட்டைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அங்கு நடப்பவை சின்னச் சின்ன விஷயங்கள் என நினைத்துவிடுகின்றன.  அது சரியானதல்ல. வீடு எனும்போது, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சகோதரன், சகோதரி ஆகியோர் உள்ளடக்கம். இவர்களில் யாரேனும் அந்தக் குழந்தையை அடித்தோ  திட்டியோ விட்டால் மற்றவர் சமாதானப்படுத்துகிறார். அந்த நேரத்தில் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு அப்படி செய்வது சரியானதுதான். ஆனால், சிறிது நேரம் கழித்து, குழந்தையை அடித்தவரிடம் சென்று அடித்த காரணத்தைக் கேட்கச் செய்து, தவறு யார் மீது இருக்கிறது என்பதை உரையாட வைக்க வேண்டும். ஒருவேளை தவறு பெரியவர்கள் மீது எனில் தயக்காமல் மன்னிப்பு கேட்கச் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் இது செயற்கையாக இருப்பதுபோல இருந்தாலும் நான்கைந்து உரையாடலுக்குப் பிறகு, வீட்டில் யாரேனும் அடித்தால் அல்லது திட்டினால் மற்றவரிடம் புகாராக வந்து சொல்வதைக் கைவிட்டு நேரடியாக அவரிடமே உரையாடும் தன்மையைக் குழந்தைகள் பெற்றுவிடுவர். 

பள்ளி: வீட்டை விடவும் அதிகமான பிரச்னைகளை, குழந்தைகள் சந்திக்கும் இடம் பள்ளி. காலையில் குறித்த நேரத்துக்கு வர முடியாமல் போகும் காரணம் சொல்வது தொடங்கி, மாலையில் பள்ளியை விட்டு வெளியே வரும் வரை நிறைய பிரச்னைகள். வகுப்பறையில் அவர்கள் சந்திக்கும் பிரதான பிரச்னை சிறுநீர் கழிக்க அனுமதி கேட்பது. ஆசிரியர் அனுமதி கொடுப்பாரோ மறுப்பாரோ என்றும் மற்ற நண்பர்கள் கேலி செய்வார்கள் என்றும் சிறுநீரை அடக்கி வைத்துகொள்ளும் வழக்கம் பல மாணவர்களிடம் இருக்கிறது. இதை, பெற்றோர்கள் வீட்டில் பேசி, குழந்தைகளின் தயக்கத்தை, பயத்தைப் போக்க உதவ வேண்டும். அதேபோலத்தான் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அதைத் தெளிவாக ஆசிரியர்களிடம் கூறி, ஓய்வு அல்லது வீட்டுக்குச் செல்ல அனுமதி பெற வைப்பதும். 

குழந்தைகள் தங்கள் பிரச்னைகளிலிருந்து விடுபட பெற்றோர் இப்படியும் உதவலாமே! #GoodParenting

நண்பர்கள்: குழந்தைகளுக்கு நண்பர்களோடு ஏற்படும் பிரச்னைகளை ஒரு வட்டத்துக்குள் வரையறுத்து விட முடியாது. தினந்தோறும் புதிய பிரச்னைகள் ஏற்படும். ஆனால், அடிப்படையில் சில விஷயங்கள்தான் இருக்கும். ஒன்று விளையாடும்போது ஏற்படுவது, அடுத்து நண்பனிடம் உள்ள பொருள் மீதான விருப்பம். எனவே பிரச்னையின் இந்த அடிப்படையைக் குழந்தைகள் புரிந்துகொள்ளும் அளவுக்குக் கொண்டு செல்லுங்கள்.  அப்படிச் செய்யும்போதே சின்னச் சின்ன பிரச்னைகள் தோன்றும் இடத்திலேயே மறைந்துவிடும். 

உறவினர்கள்: குழந்தைகள் சில உறவினர்கள் மீது அன்போடு இருப்பார்கள். அவர்கள் ஏதேனும் வாங்கித் தருவதாக அல்லது அழைத்துச் செல்வதாக உறுதி கொடுத்து, அதை நிறைவேற்றாமல் இருந்தால் குழந்தைகள் அவர்களோடு விலக்கம் காட்டுவர். அந்தச் சூழலை எப்படி அணுகுவது என்பதை அந்த உறவினர் வழியே உதவலாம்.
மிகச் சில உறவினர்கள் குழந்தைகளிடம் பாலியல் அத்துமீறலைச் செய்யலாம். அதனாலும் அவர்களிடமிருந்து குழந்தைகள் விலகிவிடலாம். அதைப் பெற்றோர் புரிந்துகொள்வதோடு, அவ்வாறு அத்துமீறுபவர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குவது மிகவும் அவசியம். உடலின் எந்தெந்த இடங்களில் கை வைக்ககூடாது என்பதையும் கூற வேண்டும். 

சந்திக்கும் மனிதர்கள்: சாலை, கடை, திரையரங்கு போன்ற இடங்களில் சந்திக்கும் முன் அறிமுகம் இல்லாத மனிதர்களாலும் குழந்தைகளுக்கு பிரச்னை ஏற்படும். எனவே, அவ்வாறான இடங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை வீட்டில் ஒத்திகையாகவே செய்து பார்க்கலாம். புதிய மனிதர்கள் தரும் உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்பதைச் சொல்வதன் மூலம் சக மனிதர்களை வெறுப்போடும், சந்தேகத்துடனும் பார்க்கும் மனநிலையைக் குழந்தைகளுக்கு உருவாக்கி விடக்கூடாது. 

குழந்தைகள் துணிவோடு வளரும்போது தன்னம்பிக்கை மிக்கவர்களாகத் திகழ்வார்கள். அவ்வாறு அவர்களின் வாழ்க்கை முறை அமைய பெற்றோர்களின் பங்களிப்பே பிரதானமானது.