Published:Updated:

மீட்கப்பட்ட குழந்தையின் பொக்கைவாய்ச் சிரிப்பு! - உருகிய இன்ஸ்பெக்டர்

மீட்கப்பட்ட குழந்தையின் பொக்கைவாய்ச் சிரிப்பு! - உருகிய இன்ஸ்பெக்டர்
மீட்கப்பட்ட குழந்தையின் பொக்கைவாய்ச் சிரிப்பு! - உருகிய இன்ஸ்பெக்டர்

''மீட்கப்பட்ட பின்னரும் குழந்தை அழுதுகொண்டேதானிருந்தான். தாயின் கரங்களில் ஒப்படைக்கப்பட்ட பின்னும் அழுகையை நிறுத்தவில்லை. என் கையில் அவனை எடுத்தேன். என் முகத்தைப் பார்த்தான். கண்கள் விரிய பொக்கை வாயால்  சிரிக்க, எனக்கும் அப்படி ஒரு சந்தோஷம்'' எனக் கூறும் ஹைதராபாத்தைச் சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமாருக்கு, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத புகைப்படமாக இது அமைந்துவிட்டது. இணையங்களில் தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகிவருகிறது. 

ஹைதராபாத் நம்பல்லி பகுதியைச் சேர்ந்த நான்கு மாதக் குழந்தை ஃபாஷன் கானை, அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுவிட, தாயார் ஹூமாரா பேகம், பதறியபடி நம்பல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.  துரிதமான போலீஸ் அதிகாரிகள், குழந்தையைக் கடத்தியவரை 15 மணி நேரத்தில் கைதுசெய்து, குழந்தையை மீட்டனர். குழந்தையைத், தாயிடம் ஒப்படைக்கும்போது,  அது, தன்னை மீட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்து பொக்கைவாய் சிரிப்பை வெளிப்படுத்தியது, மனதைக் கொள்ளைகொள்ளும் வகையில் இருந்தது. 

இன்ஸ்பெக்டர் மட்டுமல்ல, சுற்றியிருந்தவர்கள் முகத்திலும் குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்பு மகிழ்ச்சியை வரவைத்தது. தாயார் ஹூமாரா  பேகம், கண்ணீர் மல்க இன்ஸ்பெக்டர் சஞ்சய் குமாரிடமிருந்து குழந்தையைப் பெற்றுக்கொண்டு, மனதார நன்றி தெரிவித்தார். குழந்தையை கடத்திச்சென்றது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.