Published:Updated:

காணாமல் போகும் குழந்தைகள் என்ன ஆகிறார்கள்..? அதிர்ச்சி விவரம்..கவனம்! #Data

காணாமல் போகும் குழந்தைகள் என்ன ஆகிறார்கள்..?  அதிர்ச்சி விவரம்..கவனம்! #Data
காணாமல் போகும் குழந்தைகள் என்ன ஆகிறார்கள்..? அதிர்ச்சி விவரம்..கவனம்! #Data

ருடா வருடம் குழந்தைகள் தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் கடத்தல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியா முழுவதும் தினசரி 180 குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். 2015-ம் ஆண்டு வரையில் கடத்தப்பட்டு, கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை 84 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கடத்தப்படும் குழந்தைகள் எங்கே செல்கிறார்கள், எப்படி அவர்களை கடத்திச் செல்கிறார்கள் என்பது முழுமையாக விடை காணமுடியாத புதிராகவே உள்ளது. 

தமிழ்நாட்டில் கடத்தப்படும் பெரும்பாலான ஆண் குழந்தைகள், ஆந்திராவின் உள்கிராமப் பகுதிகளில் இருக்கும் முறுக்குத் தொழிற்சாலைகள், பேக்கரிகள் போன்ற தொழில்களுக்கும், சிறுமிகள் பாலியல் தொழிலுக்கும் கொண்டுசெல்லப்படுவதாக குழந்தைகள் உரிமை ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். ஆனால், இதுகுறித்த எவ்வித ஆய்வும் புள்ளிவிவரங்களும் அரசாங்கத்திடம் இல்லை என்பது வேதனையான விஷயம். 

குழந்தைக் கடத்தலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. ஒரு சில குழந்தைகளைக் காவல்துறையினர் விரைவாகக் கண்டுபிடித்துள்ளனர். ஒரு சில குழந்தைகள் இன்றளவும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர். காணாமல்போய் மீட்கப்பட்டக் குழந்தைகளின் பெற்றோர் மனநிலை தற்போது எப்படி உள்ளது என்பதுகுறித்து கேட்டோம். 

நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது): 

“நாங்க கூட்டுக் குடும்பம். வீடு முழுக்க ஆள்கள் இருந்துட்டே இருப்பாங்க. வேலையும் அதிகமா இருக்கும். என்னதான் வேலையில் கவனமா இருந்தாலும், என் பையனையும் ஒரு கண் பார்த்துப்பேன். அவனுக்கு இரண்டரை வயசாகுது. எப்பவும் வீட்டுக்குள்ளேதான் விளையாடிட்டு இருப்பான். அன்னைக்கு எங்க கெட்ட நேரம் வெளியில் விளையாடப் போயிருக்கான். அவனை ஏமாற்றி கடத்திட்டுப் போய்ட்டாங்க. பையனைக் காணோம்னு தெரிஞ்சதுமே துடிதுடிச்சுப் போயிட்டோம். எனக்கு வலிப்பே வந்துடுச்சு. என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டு, என் கணவர் போலீஸ்ல உடனே கம்ப்ளைன்ட் கொடுத்தார்.

சொந்தக்காரங்களும் ஆளுக்கொரு திசையில் தேடினாங்க. கடத்தினவங்களை சிசிடிவி மூலமா போலீஸ்காரங்க கண்டுபிடிச்சுட்டாங்க. ஒரே நாளில் எங்க குழந்தையையும் மீட்டுக் கொடுத்துட்டாங்க. என் மகனைப் பார்த்ததும்தான் உசுரே வந்துச்சு. இப்போ அவனை ரொம்ப கேர் எடுத்துப் பார்த்துக்கறோம். அவனை தூங்கவெச்சுட்டுத்தான் குளிக்கவே போறேன். அவனும் என்னைவிட்டு எங்கேயும் போறதில்லே. அந்த அளவுக்கு அந்த நாளின் பயத்திலிருந்து குழந்தை வெளியே வரலை. இப்பவும் ராத்திரியில் பதறி அடிச்சு அழறான். என்னையும் என் வீட்டுக்காரரையும் தவிர யாரையும் தூக்க விடமாட்டேங்கறான்.

அடிக்கடி காய்ச்சல் வருது. சாமி புண்ணியத்துல தொலைஞ்ச வேகத்துல எங்க மகன் கிடைச்சுட்டான். ஆனா. எத்தனையோ பேர் வருஷக் கணக்குல குழந்தைக் கிடைக்காமல் துடியா துடிக்கறாங்க. குழந்தையைப் பறிகொடுத்துட்டு ஒரு தாயா எவ்வளவு கஷ்டப்படுவாங்கனு எங்களுக்குத் தெரியும். பத்து மாசம் வலிகளைப் பொறுத்து பெத்த குழந்தையை யாரோ தூக்கிட்டுப்போய் கொடுமைப் படுத்தறாங்கனு நினைச்சாலே வயிறு எரியுது. பாவிங்களா... தன்னை கொடுமைப்படுத்துறதுகூட அந்தப் பச்சப் பிள்ளைகளுக்குப் புரியாதே. தயவுசெய்து யாராச்சும் கடத்தி வைச்சிருந்தா அவங்க அம்மா, அப்பாகிட்ட ஒப்படைச்சுருங்க. குழந்தையைப் பிரிஞ்சு நடைபிணமா அலைய விட்டுடாதீங்க'' எனக் கண்ணீர் ததும்ப பேசினார்.

முத்துமாரி, நெல்லை :

நேசத்துடன் விரல் பிடித்து நடந்த குழந்தை, திடீரென காணாமல் போனால் எந்தப் பெற்றோரின் துடிப்பு எப்படி இருக்கும்? காணாமல்போன குழந்தை திரும்பக் கிடைத்துவிட்டால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? இதோ அப்படி ஒரு திக் திக் சம்பவத்தின் பின்னணி... 

நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் அமுதா பிரைட் நகரைச் சேர்ந்தவர், சண்முகசுந்தரம். ஹோட்டல் தொழிலாளி. இவர் மனைவி முத்துமாரி. இவர்களுக்கு பரணிஷ் என்ற 4 வயது மகனும் 2 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். உறவினரை வழியனுப்பிவைக்க பேருந்து நிலையம் வந்த இடத்தில், ஜெயஸ்ரீயைத் தொலைத்துவிட்டு தவித்துப்போனார்கள். நெல்லை போலீஸாரின் துரித நடவடிக்கையால் இரண்டு மணி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டது.

இதுபற்றி பேசிய முத்துமாரி, “அக்டோபர் 21-ம் தேதி சொந்தக்காரங்களோடு என் தங்கையை ஊருக்கு அனுப்பிவைக்க பஸ் ஸ்டான்டுக்குப் போயிருந்தோம். குழந்தைகள் அங்கேயே ஓடியாடி விளையாடிட்டு இருந்தாங்க. பஸ் வந்ததும் சொந்தக்காரங்க பஸ்ஸில் ஏறினாங்க. அவங்களுக்கு கை காட்டிவிட்டு திரும்பினால், குழந்தை ஜெயஸ்ரீயைக் காணலை. பஸ் ஸ்டாண்ட் ஃபுல்லா தேடிட்டு போலீஸுக்குப் போனோம். அவங்களும் தேடினாங்க. அக்கம்பக்கத்தில் இருந்தவங்களும், ‘ஏம்மா... குழந்தையைப் பத்திரமாப் பாத்துக்காம அலட்சியமா இருக்கலாமா’னு அங்குமிங்கும் தேடினாங்க. அப்போ ஒருத்தர், ’கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பொம்பளை குழந்தையோடு செய்துங்கநல்லூர் பஸ்ஸில் ஏறிப்போனாங்க. அந்தப் பெண்ணைப் பார்த்தால் சந்தேகமா இருந்துச்சு’னு சொன்னார். உடனே போலீஸுக்குச் சொன்னோம். அவங்க செய்துங்கநல்லூர் போலீஸுக்கு தகவல் கொடுத்துட்டு எங்களையும் ஜீப்பில் கூட்டிட்டுப் போனாங்க.

அந்த பஸ்ஸில் போறது எங்க குழந்தைதானானு தெரியாமலே அழுதுட்டே போனோம். அந்த பஸ் செய்துங்கநல்லூர் போய்ச் சேர்ந்துடுச்சு. அந்த ஊர் போலீஸ் பஸ்ஸிலிருந்து இறங்கின பெண்ணை குழந்தையோடு பிடிச்சுவெச்சிருந்தாங்க. என் குழந்தை ஜெயஸ்ரீயைப் பார்த்ததும் கதறி அழுதுட்டே தூக்கிக்கிட்டேன். போலீஸ் அந்தப் பெண்ணை விசாரிச்சாங்க. விளையாடிட்டிருந்த குழந்தையைத் தூக்கிவந்ததாக அவள் சொன்னா. இப்போ நினைச்சாலும் நெஞ்சு பதறுது. பஸ்ஸில் போகும்போது என் குழந்தை கதறி அழுதிருக்கு. அந்தப் பொம்பளை கன்னத்திலே அடிச்சிருக்கா. எந்தத் தாய்க்கும் இந்த மாதிரி நடக்கவே கூடாது’’ என்று நடுக்கத்துடன் கூறுகிறார்.

போலீஸ் விசாரணையில், குழந்தை ஜெயஸ்ரீயை கடத்திச்சென்ற பெண்ணின் பெயர் கோமதி என்பதும், செய்துங்கநல்லூர் அருகில் உள்ள நாட்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், பேருந்து நிலையத்தில் பாலியல் தொழில் செய்துவருவதும் தெரியவந்தது. மது போதையில் இருந்தவள், குழந்தையைத் தூக்கிச்செல்ல திட்டமிட்டு இருக்கிறாள் என்பதும் தெரியவந்தது.

தங்களுடைய குழந்தையைக் கடத்தியதற்காக கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட பெண்ணால், குழந்தைக்கு மீண்டும் ஆபத்து ஏற்படுமோ என்கிற அச்சம் அந்தத் தம்பதிக்கு இப்போதும் இருக்கிறது. 

2013 முதல் 2015 வரையில் காணமல்போய் இன்றளவும் கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை 84 சதவிகிதம். டெல்லியில் மட்டும் மூன்று ஆண்டுகளில் 22,000 குழந்தைகள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களில் 9,000 குழந்தைகளை இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படிப் பல ஊர்களில் காணாமல்போகும் சிறுவர்களை யார் கடத்திச் செல்வது? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்? இன்றளவும் பல குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் அலட்சியமாக இருப்பதற்கு அவர்கள் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்ததுதான் காரணமா? ஏழைகள் என்றால், அவர்களுக்கும் பந்தம் பாசம் இருக்காதா? 

உங்கள் ஊர் சிக்னல்களில், நீங்கள் பார்க்கும் பிச்சைக்காரக் குழந்தைகளில் பலர், இப்படி இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து கடத்திவரப்பட்ட குழந்தைகளாக இருக்கலாம். இந்தியாவில் 11 குழந்தைகளில் ஒரு குழந்தை ஏதோ ஒரு காரணத்தால் கட்டாயமாக வேலையில் அமர்த்தப்படுகிறது. இவர்களில் 80% குழந்தைத் தொழிலாளர்கள், கிராமப் பின்னணிகொண்டவர்கள். நான்கில் மூன்று பேர் விவசாயத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும், இவர்கள் அதிகபட்சமாக வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். சென்னையில் பிச்சை எடுக்கவைக்கப்படும் குழந்தைகள், தினசரி 50 முதல் 200 ரூபாய் வரை சம்பாதித்தே ஆக வேண்டும் என்று கடத்தல்காரர்களால் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 

காணாமல்போன சிறுமிகளில் 45 சதவிகிதத்தினர் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் ஒரு லட்சம் சிறுமிகள் ஆண்டுதோறும் கட்டாயமாக விபசாரத்தில் தள்ளப்படுகிறார்கள். அந்தச் சிறு வயதில் அவர்களைப் பாலியல் தொழிலுக்குள் சிக்கவைக்கும் கயவர்களுக்கு எதிராக நம் அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது?