பிரீமியம் ஸ்டோரி

‘இந்தியாவின் பார்வையற்ற முதல் பெண் ஐ.எஃப்.எஸ் அதிகாரி’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார், சென்னையைச் சேர்ந்த பெனோ ஜெபின். 24 வயது பெனோ ஜெபின், எம்.ஏ. பட்டதாரி. பாரத் ஸ்டேட் வங்கியில் பணியாற்றிவந்த இவர், கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முழுப் பார்வையற்ற பெண் ஒருவர், இந்தியாவின் பெருமை மற்றும் பொறுப்புமிக்க பணிகளில் ஒன்றான, வெளியுறவுத் துறை அதிகாரி ஆகி இருப்பது அனைவருக்கும் தன்னம்பிக்கையளிக்கிறது.

பென்டிரைவ்

படம்: தி.கௌதீஸ்

பென்டிரைவ்

பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் பி&ஜி, ‘சிக்‌ஷா’ என்ற கல்விச் சேவை மூலம், ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவிவருகிறது. இந்தியா முழுவதும் 330-க்கும் மேற்பட்ட பள்ளிகளை உருவாக்கி இருக்கும் சிக்‌ஷா அமைப்பு, சுமார் 6 லட்சம் மாணவர்களுக்கு கல்வி வழங்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 49 பள்ளிகளை உருவாக்கி, 9,783 மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டி உள்ளது. இந்தச் செயல்திட்டம் தொடங்கி, 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சிக்‌ஷா பள்ளிகள் விழாக்கோலம் பூண்டன. இந்த விழாவில், பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்கள்.

பென்டிரைவ்

லகின் பீட்சா தயாரிப்பில் முதல் இடத்தில் இருக்கும் நாடு இத்தாலி. சமீபத்தில், மிக நீளமான பீட்சாவைத் தயார்செய்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மிலன் நகரில் நடந்த இந்த பீட்சா கண்காட்சியில், 60-க்கும் மேற்பட்ட சிறந்த பீட்சா தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். 5 டன் எடையில் 1.5 கி.மீ நீளத்துக்கு இந்த பீட்சா இருந்தது. இதைத் தயார்செய்ய 18 மணி நேரம் ஆனது.

பென்டிரைவ்

மெரிக்காவின், மினசோட்டா மாநிலத்தில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், 1,330 திருக்குறள்களையும் பொருளுடன் ஒப்பித்து, சாதனை படைத்துள்ளார், 7 வயது அத்விகா சச்சிதானந்தன். மினசோட்டா தமிழ்ச் சங்கமும், தமிழ்ப் பள்ளியும் இணைந்து, பொருளுடன் சொல்லப்படும் ஒவ்வொரு குறளுக்கும் ஒரு வெள்ளி என்ற புதுமையான போட்டியை கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்த்திவருகிறது.

இந்த ஆண்டு நடந்த போட்டியில், உலகப் பொதுமறையை மழலைத் தமிழில் பொருளுடன் சொல்லி, முந்தையப் போட்டிகளில் 430 குறள்களை ஒப்புவித்து முடித்திருந்த அத்விகா, இந்தப் போட்டியில் 900 குறள்களைச் சொல்லி அசத்தினார்.

பென்டிரைவ்

மீபத்தில், சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடந்த வித்தியாசமான நிகழ்ச்சி, மாணவர்களுக்குப் புது அனுபவமாக இருந்தது. அயர்லாந்தில் வசிக்கும் காரைக்குடியைச் சேர்ந்த இயற்பியல் துறை ஆராய்ச்சியாளர் குமார் பங்கேற்றார். அயர்லாந்துக் கல்வி முறை, பள்ளிகளின் வடிவமைப்பு, அங்குள்ள ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை நடுவது, சுற்றுச்சூழலைக் காக்க அவர்கள் கடைப்பிடிக்கும் விஷயங்கள் ஆகியவற்றை ஒலி, ஒளிக் காட்சிகளாகக் காண்பித்தார். மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். நிகழ்ச்சி முடிவில், ‘எங்க ஊரையும், பள்ளியையும் இதுபோல வெச்சுக்க முயற்சி செய்வோம்’ என மாணவர்கள் மகிழ்ச்சியோடு சொன்னார்கள்.

பென்டிரைவ்

மெரிக்காவின் ஒக்லஹாமா நகரத்தில் உள்ள ‘எமர்சன்’ என்ற பள்ளியைச் சீரமைக்கும் பணி நடந்தது. வகுப்பறைகளில் இருந்த  கரும்பலகைகளைக் கழற்றிப் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யம். 100 ஆண்டுகளுக்கு முன்னால் சுவரில் அமைக்கப்பட்டிருந்த கரும்பலகையில், அப்போது எழுதப்பட்டிருந்த பாடங்கள் அழிக்கப்படாமல் இருந்திருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கும் வேலைகள் நடந்தபோது, புதிய கரும்பலகைகளை, பழையவற்றின் மீது அப்படியே மாட்டிவிட்டதால், இந்தப் பாடங்கள் அழியாமல் இருந்துள்ளன. இப்போது, பழைய கரும்பலகைகளில் இருக்கும் பாடங்களைப் பாதுகாக்க, நகர நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பென்டிரைவ்

சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களுக்கு ஈடுகொடுப்பது போல, தன் உடலை ரப்பராக வளைத்து, சுட்டிகளின் மனதில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார், ராம்மேஹர் புனியா (Rammehar Punia). ஹரியானா மாநிலம், பானிபட்டைச் சேர்ந்த 35 வயது ராம்மேஹரை அனைவரும் ‘ரப்பர் மேன்’ என்றே செல்லமாக அழைக்கிறார்கள். இவர் ஒரு விவசாயி. பொழுதுபோக்காக, பல பள்ளிகளுக்குச் சென்று தனது சாகசத்தைக் காட்டுகிறார். அதில் இரண்டு தோள்களையும் ஒன்றாகச் சேர்த்து,  தோள்களுக்கு நடுவில் சிடி-க்களை உடைக்கிறார். ஒரு நிமிஷத்தில் 60 சிடி-களை உடைத்துச் சாதனை படைத்திருக்கிறார். உடலை ரப்பர் போல வைத்துக்கொள்ள, தினமும் நான்கு மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறாராம் ராம்மேஹர்.

பென்டிரைவ்

நான்கு கால்களுடன் பாய்ந்து ஓடும் ரோபோ சிறுத்தையை, அமெரிக்கா எம்ஐடி (Massachusetts Institute of Technology) விஞ்ஞானிகள் உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர். ‘லிடார்’ (LIDAR) என்ற தொழில்நுட்பம் மூலம் தயாரித்த இந்தச் சிறுத்தை ரோபோவை, சமீபத்தில் சோதித்துப் பார்த்தனர். எதிரே வரும் தடைகளை அறிந்து, தாவிக்குதித்துச் சென்றது. மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்தச் சிறுத்தை ரோபோ, 18 இஞ்ச் உயரம்கொண்டது. எதிரே இருக்கும் தடை எவ்வளவு உயரத்தில் இருக்கும் என்பதைத் துல்லியமாகக் கிரகித்து, அதற்கேற்ப சக்தியைப் பயன்படுத்தி, தாவிக் குதித்துச் செல்கிறது, இந்த சிறுத்தை ரோபோ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு