Published:Updated:

வளர்ச்சிக் குறைந்தக் குழந்தைகள்..! அரசு உதவியை நாடும் தாய்

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M
வளர்ச்சிக் குறைந்தக் குழந்தைகள்..! அரசு உதவியை நாடும் தாய்
வளர்ச்சிக் குறைந்தக் குழந்தைகள்..! அரசு உதவியை நாடும் தாய்

வளர்ச்சிக் குறைபாடுள்ள தனது குழந்தைகளைப் பார்ப்பதற்கு அரசின் உதவியை நாடியுள்ளார் பெண் ஒருவர்.

இதுபற்றி அந்தத் தாயிடம் கேட்டதற்கு, ``என் பேரு ராஜலட்சுமி. என் வீட்டுக்காரர் பெயர் முரளி. அவர் என்னுடைய சொந்த அத்தை பையன். எங்களுக்கு அங்கண்ணன் என்ற 14 வயது பையனும், மதன் என்ற 13 வயது பையனும் இருக்கிறார்கள். நாங்க சேலம் வ.உ.சி., மார்க்கெட் பக்கத்தில் குடியிருக்கிறோம்.

எங்களுக்கு முதற்குழந்தை அங்கண்ணன் பிறந்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. அது கொஞ்ச நாளிலேயே கலைந்துவிட்டது. ஏனென்றால் அவன் வயதுக்கு தகுந்த வளர்ச்சி இல்லை. காது கேட்கவில்லை, உக்காரவில்லை, இரணிய கோளாறு என பல பிரச்னைகள் இருந்தது. டாக்டர்களிடம் இதுபற்றி விளக்கம் கேட்பதற்கு முன்பே இன்னொரு பையன் மதன் பிறந்தான். அவனும் அவனுடைய அண்ணனைப் போல பேச முடியாமல், கேட்க முடியாமல், நடக்க முடியாமல் இருந்தான்.

என் கணவர் அச்சு அலுவலகத்தில் பிரிண்டிங் ஆப்ரேட்டராக இருக்கிறார். அதில் கிடைக்கின்ற சொர்ப்ப வருமானத்தையும் குழந்தைகளை டாக்டர்களிடம் காட்டுவதற்கே வருமானம் போதவில்லை. பல டாக்டர்களிடம் குழந்தைகளை தூக்கிச் சென்று காட்டினோம். மரபு சம்பந்தமான வியாதி. சொந்தத்தில் திருமணம் செய்ததால் ஏற்பட்ட பாதிப்பு. சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறைபாடால் ஏற்பட்ட வியாதி. எங்கு கூட்டிச் சென்றாலும் குணப்படுத்த முடியாது என்று கூறிவிட்டார்கள்.
 
அதையடுத்து, குழந்தைகளுக்கு வைத்தியம் செய்வதை நிறுத்திவிட்டு உடல்நிலை சரியில்லை என்றால் மட்டும் டாக்டர்களிடம் காட்டுவோம். மற்றபடி இரண்டு குழந்தைகளையும் வீட்டில் செல்லமாக வளர்த்துவருகிறேன். சரியாக காது கேட்கவில்லை என்றாலும் நான் படும் துயரங்களைப் பார்த்து என் குழந்தைகள் குட்டிச் சைக்கிளில் சின்னஞ்சிறு குடத்தில் எனக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கும்.

இவர்களுக்கு பணிவிடை செய்வதால் என்னால் எந்த வேலைக்கும் போக முடியவில்லை. ஆரோக்கியமான உணவுகள் கொடுத்தால் அடிக்கடி இவர்களுக்கு நோய் வருவதை தவிர்க்க முடியும் என டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுக்கக்கூட வசதி இல்லை. அரசு என் குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும்'' என்றார்.