அப்பா... அம்மா... என்னை மன்னித்துவிடுங்கள் ! - திருப்பூரில் நிகழ்ந்த துயரச் சம்பவம்

அப்பா... அம்மா... என்னை மன்னித்துவிடுங்கள் ! - திருப்பூரில் நிகழ்ந்த துயரச் சம்பவம்

தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த ஒரு சிறுவன், அதீத மன வேதனையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பூரில் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகரில் வசித்து வருகின்றனர் ராஜ்குமார் - தங்கம்மாள் தம்பதியர். இவர்களின் மகன் பெயர் விவேகானந்தன். 13 வயதான சிறுவன் விவேகானந்தன், திருப்பூர் கே.செட்டிபாளையம் எனும் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில், 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாகப் பள்ளியில் உள்ள சக மாணவர்களும் ஆசிரியர்களும் விவேகானந்தனைக் கேலி கிண்டல் பேச்சுகளால் காயப்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் விவேகானந்தன், நேற்று மாலை வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.
சமீப நாள்களாகப் பள்ளியில் தன் வகுப்பில் நடந்த சில சம்பவங்களையும் மாணவனின் வகுப்பு ஆசிரியர்களைப் பற்றியும், கடிதம் ஒன்றை எழுதி வீட்டில் வைத்துவிட்டு மாணவன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

மாணவர் விவேகானந்தன் எழுதி வைத்ததாக கூறப்படும் அந்தக் கடிதத்தில், "என்னுடைய சாவுக்கு ஆசிரியர் பிரபாகரன்தான் காரணம் என்றும், மற்றொரு ஆசிரியரான ரவி, என்னுடைய தந்தையிடம் போனில் பேசியபோதே இந்த முடிவை நான் எடுத்துவிட்டேன் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. அத்துடன் காமராஜ் என்ற தன் ஆசிரியரிடம் பேசுவதுபோல, வணக்கம் ஐயா... நான் வகுப்பறையில் உங்களுக்கு ஒரு நல்ல மாணவனாகத்தான் இருந்தேன் என்று நினைக்கிறேன். கடைசி மணித்துளிகளில், உங்களது முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை என்று நான் மிகவும் வருந்துகிறேன் ஐயா’ என்று எழுதியிருக்கிறார்.

மேலும், `என்னால் என் தந்தை மற்றும் தாய்க்கு எந்தவோர் அவமானமும் வரக்கூடாது. அப்பா அம்மா என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று மிகவும் உருக்கத்துடன் அந்தக் கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.
பின்னர், சம்பவம் தொடர்பாக நல்லூர் பகுதி காவல்நிலையத்தில் மாணவனின் பெற்றோர் புகார் தெரிவிக்க, அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சிறுவன் விவேகானந்தனின் உடலை மீட்டு திருப்பூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிக்கூட சிறுவர்களுக்கே உரிய, கையெழுத்து, பிழைகள் என மழலைத் தன்மை மாறாமல் எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதம் அவ்வளவு வலிகளைச் சுமத்துகொண்டு இருக்கிறது.