Published:Updated:

ஆசிரியர்களின் குரல் கேட்டு கோமாவிலிருந்து மீண்ட புதுக்கோட்டை பள்ளி மாணவன்!

ஆசிரியர்களின் குரல் கேட்டு கோமாவிலிருந்து மீண்ட புதுக்கோட்டை பள்ளி மாணவன்!

பரவலாக நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகள்தாம் கூடுதல் பலம். அந்த வகையில் அருண் பாண்டியனின் பெற்றோர், ஆசிரியர்கள் எனப் பலரும் கொடுத்த நம்பிக்கையும், சரியான நேரத்து சிகிச்சையும் காப்பாற்றி உள்ளது.

ஆசிரியர்களின் குரல் கேட்டு கோமாவிலிருந்து மீண்ட புதுக்கோட்டை பள்ளி மாணவன்!

பரவலாக நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகள்தாம் கூடுதல் பலம். அந்த வகையில் அருண் பாண்டியனின் பெற்றோர், ஆசிரியர்கள் எனப் பலரும் கொடுத்த நம்பிக்கையும், சரியான நேரத்து சிகிச்சையும் காப்பாற்றி உள்ளது.

Published:Updated:
ஆசிரியர்களின் குரல் கேட்டு கோமாவிலிருந்து மீண்ட புதுக்கோட்டை பள்ளி மாணவன்!

ந்தப் பள்ளி மைதானத்தில் நண்பர்களுடன் கபடி விளையாடிக்கொண்டிருந்தார், 12-ம் வகுப்பு அருண் பாண்டியன். பள்ளி முடியும் மணி அடித்ததும், பள்ளிக்கு அருகில் இருந்த பானிப்பூரி கடைக்குச் சென்று நண்பர்களுடன் பானிப்பூரி சாப்பிட ஆரம்பித்தவர், திடீரென மயங்கி கீழே சரிந்தார். பதறிய சக மாணவர்கள், அருகிலிருந்த கந்தர்வகோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தூக்கிச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், ``பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால்தான் காப்பாற்ற முடியும்'' எனச் சொல்லிவிட்டனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருண் பாண்டியன், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோது, கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பெற்றோர் கதறி அழுத நிலையில், ஆசிரியர்கள் கொடுத்த நம்பிக்கை வார்த்தைகள் அருண் பாண்டியனை மீட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோயில் அடுத்த மின்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, தருமன். இவரது மகன் அருண் பாண்டியன். கந்தர்வக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். அவருக்குத்தான் இப்படி ஓர் அதிர்ச்சியும் நெகிழ்ச்சியுமான சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் மணிகண்டன், ``எங்கள் பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியர் சோமசுந்தரத்துக்கு கையில் அடிபட்டதால், கந்தர்வக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றிருந்தோம். அங்கே அருண் பாண்டியன் பற்றிய தகவல் கிடைக்க, தஞ்சாவூர் மருத்துவமனைக்கு ஓடினோம். அவசர சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட நிலையில், அருண் இருந்தான். உடலில் அசைவு இல்லை. `உடல்நிலை மோசமாக உள்ளது. கோமா நிலை' என டாக்டருங்க சொன்னதும், பெற்றோரும், மாணவர்களும் கதறிட்டாங்க. எங்களுக்கும் அதிர்ச்சியா இருந்தாலும், நம்பிக்கை இழக்கலை. அருணின் காதுக்குப் பக்கத்தில் போய், `தம்பி கண் முழிச்சுப் பாருயா!'' எனப் பேச்சு கொடுத்துட்டே இருந்தோம். எங்கள் வார்த்தைகள் அவன் காதுகளில் விழ விழ, கண்கள் அசைந்தன. அடுத்த சில நொடிகளில், கண் விழிச்சுப் பார்த்தான். கை, கால்களை அசைச்சான். எங்களைப் பார்த்து, 'சார், நீங்க எப்போ வந்தீங்க? என்ன ஆச்சு?' என விசாரித்ததும்தான் எங்களுக்கே உயிர் வந்துச்சு” என நெகிழ்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அருண் பாண்டியனின் தந்தை தருமன், ``அருணை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போறாங்கன்னு சொன்னதும், உசுரைக் கையில் பிடிச்சுட்டு ஓடினோம். இங்கே வந்து பார்த்தா, முகத்துல, நெஞ்சுல எல்லாம் வொயர் மாதிரி வெச்சிருக்காங்க. அசைவில்லாமல் கிடந்தான். `உங்க புள்ளைக்குக் கோமா. பிழைக்க வைக்கிறது கஷ்டம்'னு டாக்டர் சொன்னதும், எங்களுக்கு அசைவில்லாமல் போயிருச்சு. சாமி மாதிரி வாத்தியாருங்க வந்து, நம்பிக்கையோடு பேசினாங்க. இப்போ, நல்லா பேசறான். ஆனாலும், எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்துடுவோம்'னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அதான், கொஞ்சம் பயமாக இருக்கு” என மகிழ்ச்சி பாதி, பயம் பாதியாகப் பேசுகிறார்.

அருண் பாண்டியனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ``நுரையீரலில் சளி அதிகமாக இருந்ததால், எலும்புகள் இருக்கமாகி, நுரையீரல் இயங்குவது கடினமாகும். அதனால் மயங்கி விழுந்திருக்கிறார். மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மாணவரின் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் குறைந்துள்ளது. ஆக்சிஜன் எடுத்தால் நிலைமை மோசமாகும் சூழல். கிட்டத்தட்ட கோமா நிலைதான். பரவலாக நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் வார்த்தைகள்தாம் கூடுதல் பலம். அந்த வகையில் அருண் பாண்டியனின் பெற்றோர், ஆசிரியர்கள் எனப் பலரும் கொடுத்த நம்பிக்கையும், சரியான நேரத்து சிகிச்சையும் காப்பாற்றியுள்ளது. ஸ்கேன் எடுத்துப் பார்த்து, நுரையீரல் தேங்கியுள்ள சளியை அகற்றச் சிகிச்சை அளிப்போம்'' என்றனர்.

ஆசுவாசமான புன்னகையுடன் பேசிய அருண் பாண்டியன், ``இப்போ உடம்பு பரவாயில்லை சார். எனக்கு நடந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு நிறைய பேர் வந்து அன்போடு விசாரிக்கிறாங்க. ஆனா, கும்பல் கூடுதுனு  மருத்துவமனை நிர்வாகம் திட்டறாங்க. டிஸ்சார்ஜ் ஆகிட்டு, வீட்டிலிருந்து வந்து காட்டிக்கச் சொல்றாங்க. பெட் இல்லைன்னு சொல்லிட்டதால, தரையில் பாய் விரிச்சுப் படுத்திருக்கேன்” என்றார்.

இதுகுறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி முதல்வர் இளங்கோவன், (தொலைபேசியில்) ''அருண் பாண்டியன் பற்றி சில மணி நேரத்துக்கு முன்னாடிதான் எனக்குத் தகவல் கிடைச்சது. ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர்ஸிடம் பேசிவிட்டு முழுமையாகச் சொல்றேன். அருண்  பாண்டியன் தரையில் அமர்ந்திருக்கும் விஷயத்திலும் விசாரிச்சு நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

சற்று நேரத்தில் அருண் பாண்டியனுக்குப் படுக்கை வழங்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அருண் பாண்டியனின் தந்தை, தருமன் மகிழ்ச்சியுடன் நமக்கு நன்றி கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism