Published:Updated:

''படியேறும்போதுகூட அவ்ளோ கவனமா இருப்பா சாரதா!'' - ஏழாவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையின் கதை

''படியேறும்போதுகூட அவ்ளோ கவனமா இருப்பா சாரதா!'' - ஏழாவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையின் கதை
''படியேறும்போதுகூட அவ்ளோ கவனமா இருப்பா சாரதா!'' - ஏழாவது மாடியிலிருந்து விழுந்த குழந்தையின் கதை

படிக்கும்போதே பதறுகிறது. குழந்தையின் இழப்பை அந்தக் குடும்பம் எப்படித் தாங்குமோ என நினைத்து இரவெல்லாம் தூக்கமின்றி மனது பிசைந்தது. காலையில் விடிந்ததுமே அந்த அப்பார்ட்மென்ட் முன்பு நின்றிருந்தேன்.

`வீட்டு பால்கனியிலிருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை பலி' என்ற அந்தச் செய்தியைப் படித்த ஒவ்வோர் இதயமும் சில நொடிகள் துடிக்க மறந்திருக்கும். 

சென்னை, சூளைமேட்டில் உள்ள சித்ரா அவென்யூவில் இருக்கும் அப்பார்ட்மென்ட்டைச் சேர்ந்தவர்கள் கோபால், கீதா. இவர்களுக்கு 4 வயதில் சாரதா என்கிற மகளும், 2 வயதில் ஈஷன் என்கிற மகனும் இருக்கின்றனர். ப்ரி-கேஜி படிக்கும் சாரதா, நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும், தூக்கம் வருகிறது என்று சொல்லியிருக்கிறாள். அவளைத் தூங்க வைத்துவிட்டு, கீழ் வீட்டில் இருப்பவரிடம் சென்று பேசிக்கொண்டிருந்தார் கீதா. திடீரென கண் விழித்த குழந்தை, தூக்கக் கலக்கத்துடன் அம்மாவைத் தேடியிருக்கிறாள். பால்கனி அருகே வந்து எட்டிப் பார்த்து, `மம்மி.. மம்மி..' என அழைத்திருக்கிறாள். சாரதாவின் குரல் கீதாவுக்குக் கேட்கவில்லை. பால்கனியில் இருக்கும் கம்பி மீது ஏறி அழைக்க முற்பட்டபொது, கால் தவறி ஏழாவது மாடியிலிருந்து விழுந்துவிட்டாள் அந்தக் குழந்தை.

படிக்கும்போதே பதறுகிறது. குழந்தையின் இழப்பை அந்தக் குடும்பம் எப்படித் தாங்குமோ என நினைத்து இரவெல்லாம் தூக்கமின்றி மனது பிசைந்தது. காலையில் விடிந்ததுமே அந்த அப்பார்ட்மென்ட் முன்பு நின்றிருந்தேன். காவலாளியிடம் அந்தச் சிறுமியின் வீட்டைப் பார்க்க வேண்டும் என்றதும் தயங்கினார். அடையாள அட்டையைப் பார்த்து அனுமதித்து, `இது முன் கேட். ரயில் நிலையத்தைக் கடந்து பின் கேட் வழியாகப் போனீங்கன்னா, முதல் பில்டிங்கில் வீடு இருக்கு'' என்றார்.

பின் கேட் வழியாக அந்த அப்பார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தேன். பெரும் நிசப்தம் காற்று முழுவதும் இழப்பைச் சுமந்திருந்தது. வீடும் அலுவலகமுமாக இருக்கும் அடுக்குமாடி அது. அங்கிருந்த ஓர் அலுவலகத்தில் விசாரித்தபோது, ``ஏழாவது மாடியில்தான் வீடு. அந்தப் பாப்பா ரொம்பவே அழகா இருப்பா. பாவம்... கடவுள் அந்தப் பிள்ளையைக் கூட்டிட்டு போயிட்டாரு'' என வருந்தினார். அமைதியாகக் கடந்தேன்.

அங்கிருக்கும் லிப்ஃட் அடிக்கடி பழுதாகும் என்பதால், யாரும் பயன்படுத்த மாட்டார்களாம். படிக்கட்டில் ஏறி ஏழாவது மாடியை அடைந்தேன். வலதுபுறம் ஒரு வீடும், இடதுபுறம் ஓர் அலுவலகமும் இருந்தது. வலதுபுறம் வீட்டின் காலிங் பெல் அழுத்தினேன். இரண்டு குழந்தைகள் ஓடிவந்து, ``யார் வேணும்?'' எனக் கேட்டார்கள். ``அம்மா இல்லையா?'' என்றதும், ``மம்மி உங்க ஃப்ரெண்ட் வந்திருக்காங்க'' எனக் கூப்பிட்டார்கள். 

வந்தவரிடம், ``இது சாரதா வீடா?'' எனக் கேட்டேன். 

``இல்லேம்மா எதிர் வீடு. அதிலேயே இரண்டு ரூம் இருக்கு. அதில் ஒரு ரூம் அவங்களுக்கான வீடு. நேத்தே குழந்தையின் இறுதிச் சடங்குகளைச் செஞ்சுட்டாங்களே. குழந்தை கீழே விழுந்ததும் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடினாங்க. இறந்துட்டதா சொன்னதும், சொந்தக்காரங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போய்ட்டாங்க. இன்னும் இங்கே யாருமே வரலை'' என்றார். 

சாரதா பற்றிச் சொல்ல முடியுமா என்றதுதான் தாமதம், அழுகையை அடக்கியவாறு பேசுகிறார்.

``எனக்கும் ரெண்டு பசங்க இருக்காங்க. எங்க வீட்டுலதான் அந்தக் குழந்தை அடிக்கடி வந்து விளையாடும். அவள் அப்பா ஹவுஸ் கீப்பிங் வேலை பார்க்கிறார். நேபாளத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும், தமிழ்ப் பேசுவாங்க. குழந்தையை வீட்டுல சாரதான்னு கூப்பிட மாட்டாங்க. ஈஷான்னு கூப்பிடுவாங்க. ஈஷா அம்மாவுக்கு 21 வயசுதான் இருக்கும். ரெண்டு குழந்தைகளையும் தனியாதான் பார்த்துப்பாங்க. ஈஷா ரொம்ப ஸ்மார்ட். படியில் இறங்கும்போதுகூட பார்த்துப் பார்த்து கவனமா இறங்குவா. `பார்த்தியா எவ்வளவு உஷார்'னு எல்லோரும் ஆச்சர்யப்படுவோம். பொம்மை மாதிரி அழகா இருப்பா. அவளுக்குத் தம்பின்னா உயிர். எப்பவும் தம்பியைவிட்டு நகரவே மாட்டா. கொஞ்சிட்டே இருப்பா. அவன் பால்கனி பக்கம் போனாலே. `போகாதே... போகாதே'னு பிடிச்சு இழுப்பா. அப்பேர்பட்ட குழந்தை, ஏதோ தூக்கக் கலக்கத்துல இப்படி ஏறியிருக்காளேன்னு நினைக்கிறப்பவே அழுகை வருது'' என்றார்.

``ஈஷாவின் அம்மாகிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன். குழந்தை தூங்கிட்டு இருந்தாலும், தனியா விட்டுட்டு வராதேன்னு. அந்த பால்கனியில் கேட் எல்லாம் இருக்கு. அதையாச்சும் மூடி, தாழிட்டு இருக்கணும். இப்படி நடக்கும்னு கண்டோமா என்ன. கஷ்டப்படும் குடும்பமா இருந்தாலும், ஈஷாவுக்கு செல்லம் கொடுத்து, கேட்டதை இல்லைன்னு சொல்லாமல் வாங்கிக்கொடுப்பாங்க. நேத்து ஸ்கூல்விட்டு வந்தபோதே, `தூங்கிட்டு சாயந்திரம் விளையாட வர்றேன் ஆன்ட்டி'னு சொன்னா. ஆனா, அது கடைசி தூக்கமா, அந்தத் தூக்கமே எமனா ஆகப்போகுதுன்னு தெரியாமல் போச்சு. `புது யூனிஃபார்ம், புது ஐடி கார்டு கொடுத்தாங்க'னு ஹேப்பியா வந்து காட்டினா. என் வீட்டுக்காரர் என் பசங்களை விளையாட்டா தூக்கிப் போடுறதை என்ஜாய் பண்ணுவாங்க. அப்படி ஒருநாள் ஈஷாவைத் தூக்கும்போது ரொம்ப பயந்தாள் .அப்படிப்பட்ட குழந்தை, ஏழாவது மாடியிலிருந்து தவறி விழுந்த நொடியில் எவ்வளவு பயந்திருக்கும்னு நினைச்சாலே உடம்பெல்லாம் நடுங்குது.

ஒரு குழந்தை கீழே விழுந்துடுச்சுன்னு சொன்ன நேரம், என் பொண்ணும் வெளியே விளையாடிட்டிருந்தா. என் குழந்தையோன்னு ஓடினேன். அவள் ஐந்தாவது மாடியில் நின்னுட்டிருந்தா. அடுத்து, `ஐயையோ ஈஷாவா இருக்கக் கூடாது'னு நினைச்சேன். ஆனா.. அது ஈஷாதான். `டாக்டர் என்ன சொன்னாங்க மம்மி. ஈஷா எப்போ வருவான்னு' என் பொண்ணும் பையனும் கேட்கறாங்க. ஈஷாவை சாமி கூட்டிட்டுப் போயிடுச்சுன்னு சொல்லும்போதே அழுதுட்டேன்'' எனக் கலங்குகிறார். அவரின் இரண்டு குழந்தைகளின் முகங்களிலும் ஈஷா பற்றிய நினைவுகள் ஆழமாகப் பொதிந்திருந்ததை உணர முடிந்தது.

விவரம் தெரியும் வரையில் குழந்தைகளைப் பல மடங்கு கவனத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதையே இந்தத் துயரச் சம்பவம் நமக்குச் சொல்கிறது. சின்ன அலட்சியமும் ஆறாத வடுவைக் கொடுத்துவிடும். 

மழைச்சாரல் வழியாக ஈஷாவைத் தேடும் அந்தக் குழந்தைகளைப் பார்த்தவாறு வலியுடன் அப்பார்ட்மென்ட்டை விட்டு வெளியேறினேன்.

அடுத்த கட்டுரைக்கு