பிரீமியம் ஸ்டோரி
இந்தியா

ஹாக்கிப் பெண்ணே நீ வாராய்!

ஹாக்கியில் இந்தியா புகழ்பெற்றுத் திகழ்ந்தது ஒரு காலம். அந்த நாள்களை மீண்டும் நினைவுபடுத்துவதுபோல, இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தியா


சமீபத்தில், ஜப்பானில் நடைபெற்ற ‘ஆசியக் கோப்பை 2017’ போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்திய, சீன மகளிர் அணியினர் மோதினார்கள். இதில்  இந்தியா வெற்றிபெற்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றது. இதன்மூலம், ஹாக்கி உலகக் கோப்பையில் விளையாடவும் இந்திய அணி தகுதிபெற்றது!

அதையும் வென்றுவாருங்கள் பெண்களே!

இந்தியா

கவிதாவைப் பார்த்துக் கத்துக்கலாம்!

இந்தியா


WWE என்று தொலைக்காட்சியில் வரும் மல்யுத்தப் போட்டிகளைப் பார்த்ததுண்டா?

மாமிச மலைகளைப்போல இரண்டு பேர் ஒருவர்மீது ஒருவர் மோதுவார்கள். பார்க்கிற நமக்குத்தான் பயமாக இருக்கும். ஆனால், அவர்கள் ஆவேசமாக மோதிக்கொள்வார்கள். பிறகு, சர்வசாதாரணமாக எழுந்து நடப்பார்கள். இது, உண்மையில் மல்யுத்தமா அல்லது பேசிவைத்துக்கொண்டு இப்படி நடிக்கிறார்களா என்றுகூட சந்தேகம் வரும். உலக அளவில் புகழ்பெற்ற WWE போட்டிகளில் முதன்முறையாக ஓர் இந்தியப் பெண் பங்கேற்கிறார் அவர் பெயர், கவிதா தேவி.

சுடிதார் அணிந்துகொண்டு கோதாவில் குதித்திருக்கும் கவிதாவின் சொந்த ஊர், ஹரியானா. இதற்குமுன் தெற்காசியப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாகப் பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கம் வென்றவர், இப்போது மல்யுத்தத்தில் புகுந்திருக்கிறார். கவிதாவைப் பார்த்து, இந்தியப் பெண்களுக்குத் தற்காப்புக்கலைகளில் ஆர்வம்வந்தால் மகிழ்ச்சிதான்!

இந்தியா

பாதுகாப்பு முக்கியம், டிரைவரே!

நீங்கள் பள்ளிக்கு எடுத்துச்செல்லும் ‘ஸ்கூல்பேக்’போல, சில கார்களில் ‘ஏர்பேக்’ என்ற காற்றுப்பையைப் பொருத்தியிருப்பார்கள். ஏதேனும் விபத்து நேர்ந்தால், இது சட்டென்று பெரிதாகும்.ஓட்டுபவர், அருகே அமர்ந்திருப்பவர் ஆகியோரின் உயிரைக் காக்கும்.

‘ஸ்கூல்பேக்’ இல்லாவிட்டால் பாடத்துக்குதான் ஆபத்து, ‘ஏர்பேக்’ இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து. ஆகவே, எல்லா கார்களிலும் ஏர்பேக் பொருத்துவது நல்லது. ஆனால், அரசாங்கம் இப்படிச் சொன்னால் யார் கேட்கிறார்கள்? பலர், செலவைக் குறைக்கலாம் என்று ஏர்பேக்கை விட்டுவிடுகிறார்கள்.

இனிமேல் இது சாத்தியமில்லை. இந்த அக்டோபர் முதல், இந்தியாவில் உற்பத்தியாகும் எல்லா கார்களிலும் ஏர்பேக், வேகம் அதிகமாகும்போது எச்சரிக்கும் கருவி, சீட்பெல்ட் அணியாததை எச்சரிக்கும் கருவி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியா

கிச்சடி அல்ல, இது கிச்டி!

இந்தியாவின் தேசிய மரம், ஆலமரம். இந்தியாவின் தேசிய விலங்கு, புலி. இந்தியாவின் தேசியப் பறவை, மயில் என்றெல்லாம் புத்தகங்களில் படித்திருப்பீர்கள். இந்தியாவின் தேசிய உணவு எது தெரியுமா?

அக்டோபர் மாதத்தில் இந்தியாவையே அலைக்கழித்த பரபரப்பு அதுதான். கிச்டியை இந்தியாவின் தேசிய உணவாக அறிவிக்கப்போவதாக ஒரு வதந்தி கிளம்பிவிட்டது. ‘கிச்டியா? கேள்விப்பட்டதே இல்லையே’ என்கிறீர்களா? இந்தியாவில் பலரும் இப்படித்தான். உண்மையில், ‘கிச்டி’ என்பது ருசியான, ஊட்டச்சத்து மிகுந்த டிபன்தான். ஆனால், அதை ஒட்டுமொத்த இந்தியாவும் உண்ணுவதாகச் சொல்ல இயலாது. நம் ஊர்ப் பொங்கலையும் இடியாப்பத்தையும் மற்ற பல மாநிலங்களில் யாரும் உண்பதில்லை என்பதுபோல, நாமும் இன்னும் பல மாநிலங்களும் ‘கிச்டி’யை உண்பதில்லை.

ஆகவே, ‘கிச்டியை இந்தியாவின் தேசிய உணவாக அறிவிக்கக்கூடாது’ என்று பலரும் பொங்கியெழுந்தார்கள். மற்ற பலர், ’இந்தக் கிச்டியை எப்படிச் சமைக்கிறது?’ என்று சமையல் குறிப்பைத் தேட ஆரம்பித்தார்கள்!

நம்மூரில் ‘கிச்டி’ இல்லை, ‘கிச்சடி’தான் உண்டு. பெயர் ஒரேமாதிரி இருந்தாலும், இவை இரண்டும் வெவ்வேறு உணவுகள். ஒருநாள், வீட்டில் சமைத்து ருசித்துப்பாருங்கள்.

இந்தியா

அலெக்ஸா இனி நம்ம அசிஸ்டென்ட்!

‘`அலெக்ஸா, இப்ப என்ன நேரம்?’’

‘`எட்டு மணி ஐம்பது நிமிடம்.’’

‘‘அலெக்ஸா, நாளைக்குக் காலையில எட்டு மணிக்கு நான் ரவியைச் சந்திக்கணும்.’’

‘`நாளை காலை எட்டு மணிக்கு ரவியுடன் சந்திப்பு.’’

‘‘அலெக்ஸா, நம்ம நாட்டோட மக்கள் தொகை என்ன?’’

‘‘இந்தியாவோட மக்கள் தொகை 132 கோடிக்கும் மேலே.’’

கொஞ்சம் பொறுங்கள். யார் இந்த அலெக்ஸா?

புகழ்பெற்ற அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் ‘குரல் உதவியாளர்’தான் இந்த அலெக்ஸா. ஒரு சிறிய ஒலிபெருக்கிச் சாதனத்தைப்போலிருக்கும் இதனிடம் நாம் ஏதாவது கேள்விகேட்டால், சட்டென்று இணையத்தில் தேடிப் பதில் சொல்கிறது. ஏதேனும் வேலையை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், இதனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும், சரியாக அதே நேரத்தில் சத்தமிட்டு நமக்கு நினைவுபடுத்தும்.

உலக அளவில் பல நாடுகளில் பெரும் புகழ்பெற்ற அலெக்ஸா, இப்போது இந்தியாவுக்கும் வந்திருக்கிறது. விலை 4,000 ரூபாயில் தொடங்குகிறது. ஆனால், இப்போதைக்கு அலெக்ஸாவிடம் ஆங்கிலம்தான் பேசவேண்டும்; வருங்காலத்தில் அலெக்ஸா தமிழிலும் பேசும் என்று நம்புவோம்!

இந்தியா

உங்களுக்கு சாப்பிடப் பிடிக்குமா?

இந்தியாவுக்கு மிக நீண்ட சமையல் வரலாறு இருக்கிறது. வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறுவிதமான உணவுப்பழக்கங்கள், வித்தியாசமான இனிப்புகள், காரப் பண்டங்கள், சத்து மிகுந்த உணவு ரகங்கள் என்று கலக்குகிறவர்கள் இந்தியர்கள். இந்தப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில், நவம்பர் 3, 4, 5 தேதிகளில் டெல்லியில் ‘World Food India 2017’ உணவுத் திருவிழா நடைபெற்றது. உணவுத்துறையில் சிறந்துவிளங்கும் பல நிறுவனங்களின் சமையல் கலைஞர்களுடைய கைவண்ணத்தை ஒரே இடத்தில் ருசிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஆனால், இது வெறுமனே சாப்பிட்டு விட்டுச் சென்றுவிடும் திருவிழா அல்ல, இந்திய உணவின் சிறப்பைப் பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு எடுத்துச்சொல்கிற வாய்ப்பும்கூட. இதன்மூலம் நம்முடைய உணவுப் பண்டங்கள் பல நாடுகளுக்குச்    செல்லக்கூடும்; நம் உணவுக் கலைஞர்கள் உலகெங்கும் கொண்டாடப் படக்கூடும்.

இத்தாலி பீட்ஸாவையும் சீன நூடூல்ஸையும் நாம் சாப்பிட்டால் போதுமா? நம் ஊர் இட்லி, தோசையை அவர்கள் சப்புக்கொட்டி ருசிக்கும் நாள் வரட்டும்!

இந்தியா

தெரியுமா?

* நமது நாடு மயிலை தேசியப் பறவையாக 1964-ம் ஆண்டு அறிவித்தது.

* சச்சின் டெண்டுல்கர், தனது முதல் சதத்தை 1990-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிறைவுசெய்தார்.

* கிரிக்கெட் பேட், வில்லோ மரத்தில் செய்யப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு