Published:Updated:

``ஆட்டிசம் பேரனுக்காக தினமும் ஸ்கூலுக்குப் போறேன்”! நாராயணி பாட்டி

``ஆட்டிசம் பேரனுக்காக தினமும் ஸ்கூலுக்குப் போறேன்”! நாராயணி பாட்டி
News
``ஆட்டிசம் பேரனுக்காக தினமும் ஸ்கூலுக்குப் போறேன்”! நாராயணி பாட்டி

``இங்க வந்ததுல இருந்தே அவனும் சந்தோஷமா இருக்குறான். நானும் நிம்மதியா இருக்குறேன். எம்பேரனைத் தவிர மற்ற எல்லாப் புள்ளைங்களும் `பாட்டி பாட்டி'னு என்னையேவே சுத்திச் சுத்தி வருதுங்க”

`குட் மார்னிங் பாட்டி' சென்னை, மேற்கு முகப்பேரிலுள்ள அம்பத்தூர் நகராட்சி முதன்மைப் பள்ளியின் அந்த வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு மத்தியில் 70 வயது மதிக்கத்தக்க பாட்டி நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கோரஸாக இப்படிச் சொல்ல நமக்கு ஆச்சர்யம். ``அந்த க்ளாஸ் ரூம்ல என்ன நடக்குது மேடம். வழக்கமா எல்லாப் பசங்களும் குட் மார்னிங் டீச்சர், குட் மார்னிங் சார்னுதானே சொல்லுவாங்க. இது ரொம்ப வித்தியாசமா இருக்கே. யார் அந்தப் பாட்டி” என்றோம் ஆவலோடு. 

``அவங்க பேரு நாராயணி. இந்த ஸ்கூல்லதான் அவங்களோட பேரன் ஐந்தாவது படிக்கிறான். நாராயணி அம்மாதான் தினமும் அவனைக் கூடவே இருந்து பத்திரமா பார்த்துக்கிறாங்க” என்கிறார் தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி. அந்தப் பையனுக்காக ஏன் இந்தப் பாட்டி தினமும் ஸ்கூல் வர்றாங்க. கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க மேடம்” என்றதும் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களை அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு மெள்ளப் பேசத் தொடங்குகிறார்.

``நித்தீஷ்வர்ஷன் எங்ககிட்ட வரும்போது 7 வயசு இருக்கும். யார்கிட்டயும் எதுவும் பேசமாட்டான். அவனுக்குன்னு ஒரு தனி உலகம் இருந்தது. கண்ணசைவு மூலமாவே எல்லாத்தையும் தெரியப்படுத்துவான். அவனை மாதிரி ஆட்டிசம் நிலைகொண்ட குழந்தைகளை அரசுப் பள்ளிகள்ல மற்ற மாணவர்களோடு படிக்க வைப்பதென்பது ரொம்ப சவாலான விஷயம். ஆனாலும், எங்க பள்ளியில நாங்க ஆரம்பத்துல இருந்தே பல புதிய முயற்சிகளை முன்னெடுத்துக்கிட்டு இருக்கிறோம். ஏற்கெனவே எங்ககிட்ட ஆட்டிசம் பாதிப்புள்ள மாணவர்கள் இருந்தாங்க. அதைப் பற்றிக் கேள்விப்பட்டுதான் அவனோட பேரன்ட்ஸ் எங்க ஸ்கூலுக்கு வந்திருந்தாங்க. ஆரம்பத்துல நித்தீஷ் ஓடிட்டே இருப்பான். ஒரு இடத்துல அமைதியா இருக்கவே மாட்டான். அவனை உட்கார வைக்கிறதே பெரிய விஷயமா இருக்கும். அதனால, அப்போ இருந்தே நான் நித்தீஷ் மேல தனியா கவனம் எடுக்க ஆரம்பிச்சிட்டேன். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

7 வயசுல அவனுக்கு ஏ,பி,சி,டி மட்டும்தான் ஓரளவுக்குச் சொல்ல முடிஞ்சது. நான் அவனை முதல் வகுப்பு பிள்ளைகளோட உட்கார வைக்காமல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களோடுதான் உட்கார வைத்தேன். எடுத்ததும் பாடபுத்தகம் மூலமா க்ளாஸ் போகாம படங்கள் மூலமா சொல்லிக் கொடுத்தேன். என்னதான் நாங்களே பாத்துக்கிட்டாலும் க்ளாஸ் ரூம்ல டீச்சர்ஸ் நடத்துறதை அவனுக்குத் திரும்பத் திரும்ப யாராவது சொல்லிக் கொடுத்தா நல்லா இருக்கும்னு முடிவு பண்ணிதான் அவன் அப்பா, அம்மாவை வர வெச்சோம். மற்ற மாணவர்களுக்கு 2, 3 முறை சொல்லிக் கொடுத்தா நித்தீஷ்க்கு 30 முறை சொல்லிக் கொடுக்கணும். அப்போதான் அவனோட மெமொரியில அது ஸ்டோர் ஆகும். ஆரம்பத்துல அப்பா இல்லன்னா அம்மா வந்துட்டு இருந்தாங்க. கொஞ்ச நாள்ல அவங்களுக்கு பதிலா நித்தீஷோட பாட்டி வர ஆரம்பிச்சிட்டாங்க. பேரனை மட்டுமே கவனிச்சிட்டு இருந்த பாட்டி ஒரு கட்டத்துல மற்ற மாணவர்கள் மேலயும் அக்கறை எடுத்துக்கிட்டாங்க. அடிக்கடி கதை சொல்றது, பாட்டுப் பாடுவதுனு அவங்க அதிரடி கிளப்பியதும், பசங்க எல்லாரும் அவங்ககிட்ட ஈஸியா ஒட்டிக்கிட்டாங்க. டீச்சர்ஸ்கிட்ட இருந்த பயம் பாட்டிக்கிட்ட இருந்ததில்ல. எல்லா விஷயங்களையும், அவங்ககிட்ட ஷேர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அது எங்களுக்கும் ப்ளஸ்ஸா அமைஞ்சது. அதனால, க்ளாஸ்ல டீச்சர்ஸ் இல்லாத நேரம் பாட்டிதான் கதை சொல்லியும், வாய்ப்பாடு சொல்லிக் கொடுத்தும் பாத்துக்குவாங்க. இப்படியே போகப் போக பாட்டியும் எங்க ஸ்கூல்ல ஒரு டீச்சர் போலவே ஆகிட்டாங்க” என்கிறார் பூரிப்புடன். 

``எம்பேரன்தான்யா நித்தீஷ்வர்ஷன். என் மகனோட புள்ள. அவன் பொறந்த ஒன்னரை வயசுலதான் அவனுக்கு இந்தக் குறைபாடு இருக்குன்னு தெரிய வந்துச்சு. விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்ப துடிச்சுப் போயிட்டோம். ஆனாலும், மனசத் தேத்திக்கிட்டு பையன வளர்த்தோம். என் மகனும் மருமகளும்கூட இப்புடி இருக்கிற பையன வீட்டுல வெச்சுப் பாத்துக்க முடியாது. நாம ஏதாவது ஹோம்ல சேர்த்துடலாம்னு சொன்னாங்க. ஆனா, நான்தான் எம்பேரனை நான் பாத்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்கன்னு சொன்னேன். இதுக்கு முன்ன அவனை, பணம் கட்டி வேற ஒரு தனியார் பள்ளிக்கூடத்தல சேர்த்திருந்தோம். அங்க அவனைச் சரியா கவனிக்க மாட்டேன்ட்டாங்க. அதனாலதான், இங்க கூட்டிட்டு வந்தோம். இங்க வந்ததுல இருந்தே அவனும் சந்தோஷமா இருக்குறான். நானும் நிம்மதியா இருக்குறேன். எம்பேரனைத் தவிர மற்ற எல்லாப் புள்ளைங்களும் `பாட்டி பாட்டி'னு என்னையேவே சுத்திச் சுத்தி வருதுங்க. அவங்ககிட்ட எனக்குத் தெரிஞ்ச கதைகளைச் சொல்லுறேன். பாட்டு பாடுறேன். அதனால, என்ன அவங்களுக்கு ரொம்பப் புடிச்சிடுச்சு. இப்போ எம் பேரனும் வாய்ப்பாடுலாம் சொல்லப் பழகிட்டான். அவனுக்குச் சொல்லிக் காட்டுறதை விட எழுதிக் காட்டுனாதான் மனசுல பதியும். `அ' எழுத்தை மட்டும் 100 முறை எழுதிக்காட்டுவேன். இப்படி ராத்திரியும் பகலும் அவன்கூடவே இருந்து ஓரளவுக்கு அவனை முன்னேத்தியிருக்கிறேன். இதுக்கப்பறம் என் மூச்சு நின்னாக்கூட நான் கவலைப்படமாட்டேன்பா” என்கிறார் தன் பேரனின் தலையை வருடியவாறே. 

ஆட்டிசப் பாதிப்போடு பிறந்த குழந்தையை ஹோமில் சேர்த்து கவனித்துக் கொள்ளலாம் என்று பெற்றோர்களே சொன்னபோதும் தன் பேரனைத் தன்னோடு வைத்திருந்து இரவையும் பகலையும் அவனுக்காகவே அர்ப்பணித்து பள்ளி வரை சென்று பாடம் சொல்லிக் கொடுக்கும் நாராயணி பாட்டி வணக்கத்திற்குரியவர். எழுபது வயதிலும் தளராத அவர் முயற்சிக்கு சபாஷ்.