உலக சாக்லேட் தினம்!

பெயரைக் கேட்டாலே சுட்டீஸ்களுக்கு வாயூறும். இந்த சாக்லேட்டுகளுக்காக ஒரு தினம் கொண்டாடப் படுவது எவ்வளவு இனிப்பான விஷயம்! சுமார், ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சாக்லேட் தினக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் இந்த நாள் கொண்டாடப் பட்டாலும் பெரும்பாலான நாடுகளில் ஜூலை 7-ம் தேதி `சாக்லேட் தினம்’ கொண்டாடப்படுகிறது. கோக்கோ மரத்தின் விதைகளுடன், பால் உள்பட பல்வேறு பொருள்கள் சேர்த்து சாக்லேட்டுகள் தயாரிக்கப் படுகின்றன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேசிய மருத்துவர்கள் தினம்!
கடவுளுக்கு இணையான பணி என்றால், அது மருத்துவப் பணிதான். மருத்துவர்களைப் போற்றி கௌரவிக்கும்விதமாக உலகமெங்கும் மருத்துவர்கள் தினம் வெவ்வேறு நாளில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இது, ஜூலை முதல் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் தலைசிறந்த மருத்துவரான டாக்டர் பிதான் சந்திரராவின் நினைவாக இந்த தினம் டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஆச்சர்யம் என்னவென்றால், இவர் பிறந்ததும் ஜூலை-1 (1882) இறந்ததும் ஜூலை-1 (1962).

உலக மக்கள்தொகை தினம்!
மக்கள்தொகை குறித்த விழிப்புஉணர்வை உலகளாவிய அளவில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்தநாள் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக இந்தநாள் கொண்டாடப் படுகிறது. உலக மக்கள்தொகை தினமாக ஜூலை 11-ம் தேதி கொண்டாடப்படுவதற்கு, சுவாரஸ்யமான ஒரு பின்னணி உண்டு. 1987-ம் ஆண்டு இதே நாளில்தான், உலக மக்கள்தொகை 500 கோடியைத்தாண்டியது. குடும்பநலத் திட்டமிடல்கள் பற்றிய கருத்தரங்குகள், நாடகங்கள் போன்று பல்வேறு விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகள் இந்த நாளில் அரசால் நடத்தப்படுகின்றன.

மறைமலை அடிகள் பிறந்த தினம்!
புகழ்பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் ஆங்கிலத்தையும், சம்ஸ்கிருதத்தையும் நன்கு கற்றவர். தமிழை வடமொழிக் கலப்பின்றி தூய நடையில் எழுதி, பிறரையும் ஊக்குவித்தவர். தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர். தமிழ் மீதுகொண்ட பற்று காரணமாக `வேதாசலம்’ என்ற தனது இயற்பெயரை, `மறைமலை’ என மாற்றிக்கொண்டார். தமிழ்ச் சொற்பொழிவில் வல்லவர். தமிழைக் கொண்டாடும் நாம், தனித்தமிழ் இயக்கத் தந்தையையும் கொண்டாடு வோம்.

காமராஜர் பிறந்த தினம்!
எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர்பெற்றவர். தமிழகத்தின் முதலமைச்சராக ஒன்பது ஆண்டுகள் பதவிவகித்தவர். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் அழைக்கப் பட்டவர். இவரது குலதெய்வமான `காமாட்சி’ என்பதுதான் இவரது இயற்பெயர். பள்ளிக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் இவர் அதிக அக்கறைகொண்டு பாடுபட்டதால், இவரது பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தெரியுமா?
தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதரப் புறா.