Published:Updated:

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 4

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 4
பிரீமியம் ஸ்டோரி
News
சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 4

ரீவைண்ட்முகில்

ரோபோவுடன் சதுரங்கம் ஆடிய நெப்போலியன்!

பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன், நிஜத்தில் பல போர்க்களங்களைக் கண்டவர். எதிரிகளைச் சாதுர்யமாகத் தாக்கி வீழ்த்தும் வியூகம் அமைப்பதில் கில்லாடி. அவருக்கு செஸ் விளையாடப்பிடிக்கும். ஆனால், செஸ் விளையாட்டில் அவருக்கு, எதிரி ராஜாவை மடக்கும் திறமை போதாது.

ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே அதிக வலிமையுடைய ராணியை நகர்த்தி, வெளியில் விட்டுவிடுவார். (இதற்கு செஸ் விளையாட்டில் ‘நெப்போலியன் ஓப்பனிங்’ என்று பெயர்.) ‘போர் போர்’ என்று எப்போதும் தன் அரசியான ஜோசஃபினை அங்கும் இங்கும் தன்னுடன் அலைக்கழித்தார் நெப்போலியன். அந்தக் கோபத்தில், ஜோசஃபின்கூட, கேலியாகச் சொன்னார்... `செஸ்ஸிலும் சரி, நிஜத்திலும் சரி, பேரரசருக்கு ராணியைத் தன்னுடைய இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கத் தெரியாது’ என்று.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 4

கி.பி. 1809-ல் வாக்ரம் (Wagram) என்ற இடத்தில் போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓய்வு நேரத்தில் நெப்போலியன் செஸ் விளையாடினார். அதுவும் உலகின் முதல் எந்திர செஸ் பிளேயரான ‘தி டர்க்’ என்பதுடன். வெள்ளைக் காய்களைக்கொண்டு ஆட்டத்தை ஆரம்பித்த நெப்போலியன், வழக்கம்போல ராணியை வெளியில் கொண்டு வந்தார். சில நிமிடங்களிலேயே ராஜாவுக்கும் ராணிக்கும் சேர்த்து செக் வைத்தது டர்க். `செஸ்ஸில் ஓர் எந்திரத்தைக்கூட நம்மால் தோற்கடிக்க முடியவில்லையே’ என்று மாவீரன் நெப்போலியனுக்கு வருத்தம்தான்.

மனித உருவம்கொண்ட பொம்மையான டர்க், கி.பி.   1770-ல் வடிவமைக்கப்பட்டது. அது உட்கார ஒரு நாற்காலி, அதனுடன் இணைக்கப்பட்ட பெரிய மரப்பெட்டி, அதன் மேல் செஸ் போர்டு. இதுதான் அந்த எந்திர செஸ் பிளேயரின் வடிவம். இந்த டர்க், அப்போதே உலகின் பல நாடுகளுக்கும் சென்று, பல்வேறு தேசத்தின் செஸ் ஆட்டக்காரர்களையும் தோற்கடித்துப் புகழ்பெற்றது. பின்னரே, ஓர் உண்மை கண்டுபிடிக்கப்பட்டது. டர்க்குடன் இணைந்த பெட்டியில், செஸ் நன்கு விளையாடத் தெரிந்த ஒரு மனிதன் உள்ளே ஒளிந்திருந்து காய்களை நகர்த்தி விளையாடியிருக்கிறான். பெட்டிக்குள் ரகசியமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகள் மூலம் காய்களைக் கவனித்து, அவன் பொம்மையை இயக்கிப்  பலரையும் ஏமாற்றியிருக்கிறான். ஆக, எந்திரத்திடம் தோற்கவில்லை என்பதே நெப்போலியனுக்கான ஆறுதல்.

நீயும் நானும் ஒண்ணா?

அமெரிக்காவின் அந்த அரசு அலுவலகத்துக்கு, அன்றைக்கு ஒரு பெண் புகார் ஒன்றை அளிப்பதற்காக வந்தார். அவரது சோஷியல் செக்யூரிட்டி நம்பர் (நமக்கு ஆதார் நம்பர் போல) குறித்த புகார் அது. அதே நாளில் இன்னொரு பெண்ணும் அதே புகாருடன் அங்கே வந்தார். இருவரையும் விசாரித்தபோது... அந்த இரு பெண்களும் சரி, மற்றவர்களும் சரி, ஆச்சர்யத்தில் திகைத்துப்போயினர்.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 4

விஷயம் இதுதான். இரண்டு பெண்களுக்கும் கம்ப்யூட்டர் செய்த தவறால், ஒரே சோஷியல் செக்யூரிட்டி நம்பர் கொடுக்கப்பட்டிருந்தது. கம்ப்யூட்டரே குழம்பிப் போக நியாயமான காரணங்களும் இருந்தன. இரண்டு பெண்களுக்கும் ஒரே பெயர், பேட்ரீஷியா ஆன் கேம்பெல். இருவரது பிறந்த தேதியும் 1941, மார்ச் 31. இருவரது தந்தையரின் பெயரும், ராபர்ட் கேம்பெல். இரண்டு பெண்களுக்குமே 1959-ல் திருமணம் நடந்திருந்தது. இரண்டு பெண்களின் கணவர்களுமே ராணுவத்தில் வேலையில் இருந்தனர். இரண்டு பெண்களுக்கும் இரண்டு இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகளுக்கான வயது 21 மற்றும் 19-ஆக இருந்தது.

இவ்வளவு ஒற்றுமைகொண்ட அந்த இரு பெண்களும் பின்பு உரையாடிக்கொண்டனர். ‘நான் அக்கவுன்டன்டா வேலை பார்க்கிறேன். நீங்க?’ இன்னொரு பெண்ணும் சிரித்தபடியே சொன்னார், நானும்தான்!

சேவல் மனிதர்கள்

காலை நேரத்திலேயே அந்த மனிதர்கள் சுறுசுறுப்பாகக் கிளம்பிவிடுவார்கள். வீடுகளின் கதவுகளை நீண்ட கைத்தடி கொண்டு பலமாகத் தட்டுவார்கள். மாடி வீடு என்றால், மேலே உள்ள ஜன்னலை நீண்ட மூங்கிலைக்கொண்டு தட்டுவார்கள். சிலர், நீண்ட ஊதுகுழலில் காய்ந்த பட்டாணிகளைப் போட்டு ஊதுவார்கள். அது பட் பட் பட் எனக் கதவில் சத்தம் எழுப்பும். வீட்டுக்குள்ளிலிருந்து ஆட்கள் வந்து கதவைத் திறக்கும்வரைத் தட்டுவார்கள். வீட்டுக்குள்ளிருந்து ஆள் வெளியே வந்ததும் ‘குட் மார்னிங்’ சொல்லிவிட்டு, அடுத்த வீட்டுக்கு கதவைத் தட்டப் போய்விடுவார்கள்.

சிரிக்க சிரிக்க சரித்திரம்! - 4

‘வேலைக்கு நேரமாகி விட்டது. எழுந்து கிளம்புங்கள்’ என்று காலையிலேயே வீடு வீடாகச் சென்று தூங்குபவர்களை எழுப்பி விடுவதே அவர்கள் வேலை. 1920-களில் பிரிட்டனிலும் அயர்லாந்திலும் இப்படி எழுப்பிவிடும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் பெயர் Knocker-up. இதற்கு மாதச்சம்பளம் உண்டு. எழுப்பிவிட வேண்டியவர்களே தூங்கிவிட்டுத் தாமதமாகப் போனால், அவர்களுக்குச் சம்பளத்தில் பிடித்தமும் உண்டு.

1950-களில், எல்லோரும் வாங்கும் விலையில் அலாரம் அடிக்கும் கடிகாரம் கிடைக்க ஆரம்பித்த பின், உலகில் இப்படி ஒரு வேலையே மறைந்து போனது.

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி