Published:Updated:

கண்முன்னே உயிரிழந்த 85,000 குழந்தைகள்; பரிதவித்த பெற்றோர்கள்! - பஞ்சத்தின் பிடியில் ஏமன்

கண்முன்னே உயிரிழந்த 85,000 குழந்தைகள்; பரிதவித்த பெற்றோர்கள்! - பஞ்சத்தின் பிடியில் ஏமன்
கண்முன்னே உயிரிழந்த 85,000 குழந்தைகள்; பரிதவித்த பெற்றோர்கள்! - பஞ்சத்தின் பிடியில் ஏமன்

`ஏமன்’ என்னும் வார்த்தையை வாசிக்கும்போதும் கேட்கும்போதும் உடைந்த கட்டடங்களும், பசியில் வாடிப்போயிருக்கும் குழந்தைகளின் முகங்களும்தான் கண் முன்னே வந்து செல்கின்றன.


 

இரண்டு வாரங்கள் முன்பு, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக மருத்துவ முகாமில் படுத்துக்கிடந்த அமல் ஹுசைன் என்னும் குழந்தையின் புகைப்படத்தை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. புகைப்படம் வெளியாகி ஓரிரு தினங்களில் அமல் உடல்நிலை மோசமாகி உயிரிழந்துவிட்டாள்.

Credits : The Newyork Times 

அமல் புகைப்படம் வைரலாகியதைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களும் அமலின் மரணத்தையும் ஏமனில் நடந்துவரும் உள்நாட்டுப் போர் குறித்தும் செய்திகள் வெளியிட்டன. ஆனால், அமல் போன்று 85,000 குழந்தைகள் ஏமன் மண்ணில் புதையுண்ட விஷயம் உங்களுக்குத் தெரியுமா. ஆம், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏமனில் 85,000 குழந்தைகள் பசியின் கொடுமையால் உயிரிழந்திருக்கின்றன. 

ஏமன் என்னும் தென்மேற்கு ஆசிய நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப்படைக்கும் இடையே 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா களமிறங்கியது. ஹவுதி கிளர்ச்சிப்படைக்கு இரான் ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.  இதனிடையே சவுதி கூட்டுப்படைக்கு அமெரிக்காவும் பக்கபலமாக செயல்பட்டு வருகிறது. சவுதி கூட்டுப்படை குறிவைப்பது கிளர்ச்சியாளர்களுக்குத்தான் என்றாலும் பலியாவது என்னவோ அப்பாவி பொதுமக்கள்தான். 

அதிர்ச்சி ரிப்போர்ட்.. 

ஏமனில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உதவிக்குழுக்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன. அப்படி இருந்தும் ஒவ்வொரு மாதமும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல்நலக் குறைவால் உயிரிழக்கிறார்களாம். 


 

`Save the Children' என்னும் சர்வதேச அமைப்பு சமீபத்தில் ஏமன் குழந்தைகளின் மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ஏப்ரல் 2015-ல் இருந்து அக்டோபர் 2018-ம் ஆண்டு வரையில் 84,701 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை Save the Children அமைப்பு ஐ.நா தரவுகளை அடிப்படையாக வைத்து தயார் செய்துள்ளது.  


 

Save the Children அமைப்பின் ஏமன் இயக்குநர் தாமர் கிரோலஸ் வெளியிட்ட அந்த அறிக்கையில், `ஏமனில் உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்து தற்போதுவரை 84,701 குழந்தைகள் உணவின்றி உயிரிழந்துள்ளனர் என்று தரவுகள் சொல்கின்றன. இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் 5 வயதுக்கூட நிரம்பாத பச்சிளம் குழந்தைகள். இது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறந்து போன அந்தக் குழந்தைகளின் உடல் உறுப்புகள் போதுமான உணவு கிடைக்காத காரணத்தால் செயலிழந்து போனதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது. தங்கள் கண் முன்னே குழந்தைகள் உயிரிழப்பதைத் தடுக்க முடியாமல் பெற்றோர்கள் பரிதவிக்கின்றனர். அந்தக் குழந்தைகள் அழுவதற்குக்கூட தெம்பில்லாமல் வெறித்துப் பார்க்கும் காட்சியைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

உணவில்லாமல் போனதன் பின்னணி.. 

`உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் ஏமனில் 2015-ம் ஆண்டு சவுதி கூட்டுப்படைகள் காலடி எடுத்து வைத்தன. ஹவுதி கிளர்ச்சிப் படைகள் இருக்கும் இடங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின. கிளர்ச்சியாளர்களை முடக்கும் பொருட்டு சவுதி படைகள் முதற்கட்டமாகத் துறைமுகங்களை மூடின. ஏமன் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் ஹோடைதா என்னும் மிகப்பெரிய துறைமுகம் வழியாகத்தான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால், துறைமுகம் மூடப்பட்டதையடுத்து உணவுப் பொருள்களின் இறக்குமதி பெருமளவு சரிந்தது.

முக்கியத்துவம் வாய்ந்த ஹோடைதா துறைமுகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர சவுதி கூட்டுப்படைகளும் ஹவுதி கிளர்ச்சிப்படையும் அடித்துக்கொண்டன. அவர்களின் சண்டையால் உணவுப் பொருள்களின் இறக்குமதி முற்றிலும் முடங்கியது. உணவுப் பொருள்கள் தட்டுப்பாட்டால் ஏமன் மக்கள் பஞ்சத்தில் தவிக்கும் நிலை உருவானது. அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்தது. ஏமன் கரன்சியின் மதிப்பும் சரிந்தது. அதன் விளைவாகக் குழந்தைகள் போதுமான உணவு கிடைக்காமல் பசியில் துடித்தன. துள்ளிக் குதித்து விளையாட வேண்டிய வயதில் எலும்பும் தோலுமாக மருத்துவ முகாம்களில் படுத்துக்கிடந்தன.

போர் நிறுத்த முயற்சியில் ஐ.நா...

உதவிக் குழுக்குள் தங்களால் கூடுமான வரை உணவுப் பொருள்களை விநியோகம் செய்தன. ஆனாலும் மக்களின் உணவுத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை. இவை அனைத்தையும் கூர்ந்து கவனித்துவரும் ஐ.நா போர் நிறுத்தம் செய்யவில்லை என்றால் `நம் கண்முன்னே ஏமன் பஞ்சத்தால் அழியும்’ என்று எச்சரித்தது. அதன் விளைவாகக்  கடந்த சில தினங்களாக போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஏமனுக்கு 250 மில்லியன் டாலர் உதவித்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளன. மேலும், ஐ.நா. தூதர் மார்ட்டின் கிரிபித்ஸ் ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஐ.நா-வின் முயற்சிகள் வெற்றி பெற்றால் மட்டுமே ஏமன் பஞ்சத்தில் இருந்து மீளும்! 

 ஏமன் போரின் பின்னணியைத் தெரிந்துகொள்ள இந்த லின்கை க்ளிக் செய்யவும்... Yemen Crisis