Published:Updated:

"அந்தச் சாதியில பொறந்த உனக்கெல்லாம் படிப்பு எதுக்கு?" மாணவனை அவமானப்படுத்திய கோவை டீச்சர்!

"அந்தச் சாதியில பொறந்த உனக்கெல்லாம் படிப்பு எதுக்கு?" மாணவனை அவமானப்படுத்திய கோவை டீச்சர்!
"அந்தச் சாதியில பொறந்த உனக்கெல்லாம் படிப்பு எதுக்கு?" மாணவனை அவமானப்படுத்திய கோவை டீச்சர்!

``நீயெல்லாம் எதுக்குப் படிக்க வர்ற… இந்தச் சாதியில் பொறந்தவனுக்கெல்லாம் படிப்பு எதுக்கு? கக்கூஸ் கழுவுறதுக்குத்தான் நீயெல்லாம் லாயக்கு!" எனச் சக மாணவர்கள் மத்தியில், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவரை நிற்கவைத்து, அவரது ஆசிரியை இப்படிச்  சாதிய வன்மத்தைக் கக்கினால், அந்த மாணவர் என்ன நிலைக்கு ஆளாவார்? அதோடு மட்டுமல்ல, அடுத்ததாக எல்லோரும் பார்க்கும்படியாக அவருடைய புத்தகங்கள் எல்லாவற்றையும் அந்த டீச்சர் மாடியிலிருந்து கீழே தூக்கி வீசினால்... உள்ளுக்குள் அந்த மாணவர் எவ்வளவு நொறுங்கிப் போவார்? கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள ஓர் அரசுப் பள்ளியில்தான் இப்படியான கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. 

கோவை கிணத்துக்கடவுப் பகுதியை அடுத்து உள்ளது காளியண்ணன் புதூர். அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாகப் பணியாற்றும் ஜமுனேஸ்வரி என்பவர்தான் இந்தக் கொடுமையைச் செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பள்ளியின் பத்தாம் வகுப்பு `ஆ' பிரிவு மாணவ, மாணவிகள் அத்துணைபேரும் சேர்ந்து கோவை கலெக்டர் அலுவலகம்வரை புகார் அனுப்பி இருக்கிறார்கள். என்ன பிரச்னை? காளியண்ணன் புதூருக்கு விரைந்தோம்...

நாம் சென்றது பள்ளிக்கூடம் விடும் நேரம். தலைமை ஆசிரியர் சின்னகண்ணுவைச் சந்தித்து புகார் குறித்து விசாரித்தோம். இப்படி ஒரு சம்பவத்தை இதற்கு முன்பு கேள்விப்படாத முகபாவனையோடு, ``எங்கள் பள்ளியில் அப்படி எதுவும் நடக்கவில்லை" என்று மறுத்தவரிடம், ``பத்தாம் வகுப்பு மாணவர்கள் 40 பேர் சேர்ந்து புகார் சொல்லியிருக்கிறார்களே.. அது பொய்யா?" என  அழுத்திக் கேட்டதும், தன்நிலை தடுமாறினார் தலைமை ஆசிரியர். அதன்பிறகும், அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ``சாதிப் பிரச்னையெல்லாம் இங்கு கிடையாது" என்றே சமாளித்தார். ``அப்படியென்றால், மாணவர்களிடம் இதுகுறித்து விசாரிக்கலாமா?" என்று கேட்டோம். ``பரீட்சை இருப்பதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் சீக்கிரமே வீட்டுக்குப் போய்விட்டார்கள்" என்று சடாரென பதில் சொன்னார். ``சரி, புகார் சொல்லப்பட்டிருக்கும் ஆசிரியை ஜமுனேஸ்வரியையாவது பார்க்கலாமா?" எனக் கேட்டு முடிப்பதற்குள், ``இன்னைக்கு அவங்க லீவ்"  என்று அவரிடமிருந்து வேகமாகப் பதில் வந்தது.  பாவம் அந்தத் தலைமை ஆசிரியர்?  நாம் அவரைச் சந்திப்பதற்கு  முன்பு சில மாணவர்களிடம் பேசி,  பத்தாம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில்தான் இருக்கிறார்கள் என்பதையும், ஜமுனேஸ்வரி டீச்சர் இப்போதுதான் அவசர அவசரமாகக் கிளம்பிப் போகிறார் என்ற தகவலையும் தெரிந்துகொண்டது அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை. நாம் உண்மையைச் சொன்னதும் உடைந்துபோனதுடன், அவரால் அதற்குமேல் எதுவும் பேச முடியவில்லை. வேறு வழி இல்லாமல் மாணவர்களைச் சந்திக்க அனுமதித்தார்...

``எங்க பெயரெல்லாம் வெளில வந்தா ஹால் - டிக்கெட் கொடுக்காம பழி வாங்கிருவாங்கண்ணே" என்று பதறிய மாணவ, மாணவிகளுக்கு தைரியம் சொல்லிப் பேசினோம், ``இத்தனை நாள்ல `உங்களுக்கு என்ன பிரச்னை'னு நீங்க மட்டும்தான் வந்து கேட்டுருக்கீங்க. ஹெச்.எம்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணினோம்; சி.இ.ஓ-வுக்குப் புகார் அனுப்பினோம். அவ்வளவு ஏன், கலெக்டர் ஆபீஸுக்கேபோய் மனு  கொடுத்தோம். ஆனால், இன்னவரைக்கும் எங்களைக் கூப்பிட்டு என்ன நடந்ததுனு யாரும் விசாரிக்கவே இல்லை. ஜமுனேஸ்வரி டீச்சர்மேல புகார் சொன்னதால எங்க க்ளாஸுக்கு யாருமே பாடம் எடுக்க வர்றதில்லை. `யார் சொல்லி நீங்க புகார் கொடுத்தீங்க? உங்களுக்கு இந்த ஸ்கூல் அட்ரஸே ஒழுங்காத் தெரியாது. எப்படி சி.இ.ஓ வரைக்கும் போனீங்க? சொல்லுங்க. யார் இதைச் செய்யச் சொன்னது'னு எனக் கேட்டு ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக் கூப்பிட்டு விசாரிச்சாங்க. `உண்மையைச் சொன்னா உன்னை எதுவும் செய்யமாட்டோம். உனக்கு என்ன உதவி வேணுமோ அதை நாங்க செய்வோம்'னு ஒவ்வொருத்தவங்ககிட்டயும் தனித்தனியாப் பேசி ப்ரெய்ன் வாஷ் பண்ணப் பாத்தாங்களே ஒழிய, எங்களோட பிரச்னையைச் சரி பண்ண யாரும் தயாரா இல்லை. எங்க பின்னாடி இருந்து எங்களை யாரோ இயக்குறதுக்கு... நாங்க என்ன தீவிரவாதி கூட்டமா? அந்த டீச்சரோட கொடுமை பொறுக்க முடியாம முதல்ல ஹெச்.எம்கிட்ட கம்ப்ளைன்ட் சொன்னோம். ஆனா, அவர் நாங்க சொல்றதையே அவர் காதுல வாங்கிக்கல. அந்த டீச்சருக்குத்தான் சப்போர்ட் பண்ணாங்க. எங்களுக்கு வேற வழி தெரியல. எல்லோரும் சேர்ந்து பேசித்தான்  புகார் கொடுத்தோம்" என்றவர்கள் நடந்ததை விவரிக்க ஆரம்பித்தார்கள்...

``எங்க க்ளாஸ்ல எல்லாச் சாதியச் சேர்ந்த பிள்ளைங்களும் படிக்கிறோம். எங்களுக்குள்ள எந்த உயர்வு தாழ்வும் இல்லாம ஒற்றுமையா இருக்கோம். ஜமுனேஸ்வரி டீச்சர் பல வருஷமா இந்த ஸ்கூல்ல வேலை பார்க்குறாங்க. `கடுமையா நடந்துப்பாங்க. அடிக்கிறது, பனிஷ்மென்ட் கொடுக்கிறதெல்லாம் பிரச்னையே இல்லை. பள்ளிக்கூடம்னா அப்படித்தான் இருக்கும்’ங்கிறது எங்களுக்கு நல்லாவே தெரியும். திடீர்னு சாதியைச் சொல்லிக் கேவலப்படுத்த ஆரம்பிச்சதை எங்க யாராலும் தாங்கிக்க முடியலை. ரகு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பையன், ஒருநாள் ஹோம் வொர்க் செஞ்சுட்டு வரலை. அதுக்காக அவன் சாதிப்பெயரைச் சொல்லி அசிங்கமாத் திட்டிட்டாங்க. `நீயெல்லாம் எதுக்குடா பள்ளிக்கூடத்துக்கு வர்ற'னு... அவன் சாதியைச் சொல்லி, `இந்தச் சாதிக்காரவனுங்களுக்கெல்லாம் படிப்பு எதுக்குடா? போய் கக்கூஸ் கழுவு'னு எங்க எல்லோர் முன்னாடியும் திட்டி அவனோட நோட்டு, புத்தகங்களை மாடியிலிருந்து கீழ தூக்கி வீசிட்டாங்க. அவன் அழுதுட்டான்... அதிலிருந்து ஒருமாசத்துக்கு மேல அவன் பள்ளிக்கூடத்துக்கே வரலை. அதிலிருந்து அவன் இல்லாத வகுப்புக்குப் போறதுக்கு எங்களுக்கு ஒரு மாதிரியாவே இருந்துச்சு. அந்தப் பையனுக்கு மட்டுமல்ல, அதுக்குப் பிறகு அந்தச் சாதியச் சேர்ந்த மத்த பசங்களாலயும் ஸ்கூல்ல இயல்பா இருக்க முடியலை. ஆனா, அந்த டீச்சர் அதைப் பத்தியெல்லாம் கண்டுக்கவே இல்லை. அவங்க எப்பவும்போல ஜாலியா ஸ்கூலுக்கு வந்துட்டுப் போனாங்க. அப்புறம், ரகுகிட்டயும் அவங்க அப்பா, அம்மாகிட்டயும்  பேசி அவனை ஸ்கூலுக்கு வர வெச்சுட்டோம். 

அதுக்குப் பிறகும் ஜமுனேஸ்வரி டீச்சர்  தன்னோட அணுகுமுறையை மாத்திக்கலை. ரகுவை, சாதியைச் சொல்லி கார்னர் பண்ணிட்டே இருந்தாங்க. ஹெச்.எம்கிட்ட நடந்ததைச் சொன்னோம். ஆனா, அவர் அதைக் கண்டுக்கவே இல்லை. டீச்சர்ஸெல்லாம் சேர்ந்து எங்கமேல பழியைத் திருப்பினாங்க. `இதுங்களுக்கு படிப்பே ஏறலை. படிக்கறதுக்கு பயந்துகிட்டு இப்டி கம்ப்ளைன்ட் பண்ணுதுங்க'னு சொன்னாங்க. அதைக் கேட்டதும்,  எங்களுக்கு ஆத்திரம் தாங்கல. வாழ்க்கையே போனாலும் பரவாயில்லைங்கிற அளவுக்கு தைரியம் வந்துருச்சு. வீட்ல உள்ளவங்ககிட்ட பேசி புரிய வெச்சுட்டு அவங்களோட சப்போர்ட்லதான் புகார் கொடுத்தோம். அதுக்குப் பிறகு பிரச்னை இருக்காதுன்னு நினைச்சோம். ஆனா, அதுக்குப் பிறகு எங்க க்ளாஸ்ல உள்ள எல்லோருக்கும் பிரச்னை கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க கம்ப்ளைன்ட் கொடுத்ததால, எங்களுக்கு யாரும் பாடம் நடத்த வர்றதில்லை. ஆனா, எக்ஸாம்ல மார்க் எடுக்கலைனு அடிக்கிறாங்க. எதுவுமே நடத்தாம நாங்க எப்படி மார்க் எடுக்க முடியும்?  `யார் கம்ப்ளைன்ட் கொடுக்கச் சொன்னது'னு கேட்குறாங்க. `சொல்லலைன்னா ஹால்-டிக்கெட் கிடைக்காது'னு மிரட்டுறாங்க. இதுகூடப் பரவாயில்லை. ஏ.ஹெச்.எம் அமுதவள்ளி டீச்சருடைய கணவரெல்லாம் ஸ்கூலுக்குள்ள வந்து, `கம்ப்ளைன்ட் கொடுக்கிற அளவுக்கு உங்களுக்குத் தைரியம் வந்துருச்சா'னு கேட்டு எங்களை மிரட்டுறார். ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு வர்றது நரக வேதனையா இருக்கு. அதிகாரிங்களெல்லாம் வந்து விசாரிச்சதா சொல்றாங்க. ஆனா, எந்த மாற்றமும் நடக்கலை. நாங்க கேட்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். நாங்க படிக்கலைன்னா எங்களை எவ்வளவு வேணும்னாலும் அடிங்க... கொல்லுங்க... ஆனா, அந்த டீச்சரை மட்டும் மாத்திருங்க. அவுங்க எங்களுக்கு வேணாம்” என்று சொல்லும் அத்துணை மாணவர்களின் குரலிலும்  அவ்வளவு ஆதங்கம். 

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு இறுதியாக தலைமை ஆசிரியர் சின்னகண்ணுவைச் சந்தித்து விளக்கம் கேட்டோம், ```என்கிட்ட எந்தப் புகாரும் வரலை' என்று முதலில் சொன்னவர், இறுதியில் `சி.இ.ஓ-க்கு அனுப்பியதுபோல புகார் கடிதம் எனக்குக் கொடுக்கவில்லை'" என்று சொன்னபோது, அந்தப் பள்ளியின் நிலவரம் அப்பட்டமாகத் தெரிந்தது. வருத்தத்தோடு, அவருக்கு மாணவர்களின் நிலைமையை விளக்கிச் சொன்னோம். அதன்பிறகு, சி.இ.ஓ அலுவலகத்திலிருந்து வந்து விசாரித்துள்ளார்கள். ``அந்த டீச்சரை அந்த க்ளாஸுக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டோம். இனிமேல் பிரச்னை இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்" என்றார்.

இதுகுறித்து ஆசிரியை ஜமுனேஸ்வரி, "இந்த விவகாரம் குறித்து மாணவர்கள் சொல்வது அனைத்தும் பொய். அவர்கள் சொல்வதுபோல் எதுவுமே நடக்கவில்லை. உள்ளுக்குள்ளிருந்தும் வெளியிலிருந்தும் சிலர், மாணவர்களை தவறான பாதைக்கு இழுக்கிறார்கள். இதுகுறித்து தலைமை ஆசிரியரிடமும், சி.இ.ஓ-விடமும் நான் விளக்கமளித்துள்ளேன். இதற்குமேல்  சொல்வதற்கு ஒன்றுமில்லை" என்றார்.

தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் 

என்பதைப் பயிற்றுவிக்க வேண்டியவர்களே, இப்படி நடந்துகொள்வதைவிடப் பாவச்செயல் வேறென்ன இருக்க முடியும்?