Published:Updated:

“சுவாசத்துக்காகப் போராடினான் சுதந்திரம்!”

“சுவாசத்துக்காகப் போராடினான் சுதந்திரம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“சுவாசத்துக்காகப் போராடினான் சுதந்திரம்!”

“சுவாசத்துக்காகப் போராடினான் சுதந்திரம்!”

கஸ்டு 15 காலை... சுதந்திர தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த அதே நேரம். தொப்புள்கொடிகூட அறுபடாமல், தாயின் கருப்பை பிசுபிசுப்பும் கதகதப்பும் மாறாத பச்சிளங்குழந்தை ஒன்று சென்னை மாநகரின் கழிவுநீர்க் கால்வாயில் உயிர் பிழைக்கப் போராடிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சி, பெருங்கூட்டத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது. வெறும் அதிர்ச்சியுடன் அதனைக் கடந்துபோகாமல், அந்தக் குழந்தையைக் காப்பாற்றி, அதற்கு மறுபிறவி கொடுத்திருக்கிறார் கீதா என்ற ஒரு பெண்மணி. அவரிடம் பேசினோம்.

“சுவாசத்துக்காகப் போராடினான் சுதந்திரம்!”

‘‘கண்ணு... எனக்கு ஆலந்தூர்ல வீடு. வளசரவாக்கத்துல இருக்கிற பொண்ணு வீட்டுக்கு வந்துட்டுப்போவேன். செவ்வாய்க்கிழமை அங்கே தங்கிட்டேன். மறுநாள் காலையில சீக்கிரமே எழுந்து பரபரன்னு வேலை செஞ்சிட்டு இருந்தப்ப, ‘அம்மா, சீக்கிரம் வா... வாசல்ல ஒரு குழந்தை கிடக்குது’னு எம் மக கத்தினா. பதறி அடிச்சிட்டு ஓடினேன். வீட்டுக்கு வெளியில கார் பார்க்கிங் பக்கத்துல இருக்கிற கால்வாயில ஒரு குழந்தை சிக்கிட்டு இருந்துச்சு. சில பேரு கூட்டமா நின்னாங்க. நான் போய், கால்வாய்க்குப் பக்கத்துல படுத்துக் குழிக்குள்ளே பார்த்தேன். அந்தப் பச்சபுள்ள, மூச்சுவிட முடியாம திணறிக்கிட்டு இருந்துச்சு. அதைப் பார்த்ததும் எனக்கு படபடன்னு வந்துடுச்சு. சாக்கடைக்குள்ளே கைய விட்டுக் குழந்தையோட காலைப் புடிச்சு மெதுவா இழுத்தேன். புள்ள கொஞ்சம் கொஞ்சமா வெளியில வர்றப்போ, பிரசவம் பார்த்த மாதிரியே இருந்துச்சுய்யா. அங்கேயே அழுதுட்டேன். இப்புடி பச்சை மண்ணைச் சாக்கடையில் வீசிட்டுப் போறதுக்கு, பெத்தவளுக்கு  எப்படித்தான் மனசு வந்துச்சோ...’’ என்று தன் கைகளால் முகத்தைப் பொத்திக்கொண்டு உணர்ச்சிபொங்க அழுகிறார் கீதா.

அருகிலிருந்த கீதாவின் மகள் ஷாலினி, “நீ அழாதேம்மா. மதியத்துக்கு மேலே குழந்தையைப் பார்க்க உன்னைக் கூட்டிட்டுப் போறேன்” என்று தேற்றினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“சுவாசத்துக்காகப் போராடினான் சுதந்திரம்!”

“அம்மா நேத்துல இருந்தே சரியா சாப்பிடலை. ‘அந்தப் புள்ளை கண்ணுக்குள்ளேயே நிக்குதுடி’னு அழறாங்க. காலையில் பால்காரரு கத்தினதும்தான் வெளியில வந்து பார்த்தோம். சாக்கடையைச் சுற்றி பூனைங்க இருந்துச்சுங்க. அதைவெச்சுத்தான் குழந்தை இருக்குற இடத்தைக் கண்டுபுடிச்சோம். நேத்தெல்லாம் மழைத் தண்ணி ஆறு மாதிரி ஓடிட்டிருந்துச்சு. ஒருவேளை காலையிலும் மழை வந்திருந்தா, குழந்தை மூழ்கிச் செத்துப் போயிருக்கும். சுத்தி நின்னுட்டிருந்த யாருக்குமே குழந்தையைத் தூக்கணும்னு தோணலை. அம்மா உடனே அந்தக் குழந்தையைக் காப்பாத்திட்டாங்க. புள்ளை இல்லாத வேதனை எனக்குத்தான் தெரியும். கல்யாணமாகி எட்டு வருஷமா குழந்தை இல்லாமல் தவிச்சுட்டிருக்கேன். குழந்தையை வெளியே எடுத்தப்போ, எனக்கே பிரசவமான உணர்வு வந்துடுச்சு. உடனே ஓடிப்போயி சுடுநீர் வெச்சு எடுத்துட்டு வந்தேன். புள்ளை சாக்கடைத் தண்ணியைக் குடிச்சிருக்குமோன்னு வாயைத் துடைச்சு எடுத்தோம். மூக்குல, கண்ணுல இருந்த மண்ணையெல்லாம் சுத்தம் பண்ணினோம். அப்பவும் குழந்தையால் சரியா மூச்சுவிட முடியலை. உடனே கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டு ஓடினோம். அதுக்குள்ளே போலீஸ்காரங்களும், சைல்டுலைன் அதிகாரிகளும் வந்துட்டாங்க. எக்மோர் ஹாஸ்பிடலுக்குத் தூக்கிட்டுப்போய் இன்குபேட்டர்ல வெச்சாங்க” எனச் சம்பவத்தை விவரிக்கும் ஷாலினியின் கண்கள் கலங்குகின்றன.

“சுதந்திர தினம் அதுவுமா அந்தக் குழந்தையைக் காப்பாத்தினேன். அதனால்தான், குழந்தைக்கு ‘சுதந்திரம்’னு பேரு வெச்சேன். அந்தப் புள்ளைக்கு நான் இருக்கேன். என் மக இருக்கா. குழந்தையை நாங்களே வளர்க்கிறதா கேட்டிருக்கோம். கிடைச்சுட்டா, இளவரசன் மாதிரி வளர்ப்போம். பெத்தாதான் புள்ளையா என்ன? பெக்குறதைவிட வளர்க்கிறதுலதான்யா இருக்கு சாதனை” என்று பாசம்பொங்கக் கூறுகிறார் கீதா.

- எம்.பார்த்தசாரதி