Published:Updated:

இந்தியா

இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா

இந்தியா

இந்தியா

சுத்தம் சோறு போடும்!

தெருவோர உணவுகள் என்றால், சிலர் சப்புக்கொட்டுவார்கள். பலர் முகம் சுளிப்பார்கள். ``அவங்க எந்த எண்ணெய்யில சமைக்கிறாங்களோ, பாத்திரத்தையெல்லாம் சுத்தமா கழுவுறாங்களோ இல்லையோ, யாருக்குத் தெரியும்? இதைச் சாப்பிட்டா வியாதிதான் வரும்!’’ என்பார்கள்.

இந்த அவப்பெயரை மாற்றும்விதமாக, அஹமதாபாத்தில் இருக்கும் கங்காரியா ஏரிப் பகுதியில் இருக்கும் தெருவோரக் கடைகள், `மிகவும் பாதுகாப்பானவை’ என்று இந்திய அரசின் உணவுப் பாதுகாப்புக்கான FSSAI அமைப்பின் சான்றிதழைப் பெற்றிருக்கின்றன. இங்கு உள்ள 66 கடைகளிலும் பானிபூரி, பேல்பூரி, பாப்கார்ன், டோக்ளா, மசால்தோசை, பாவ்பாஜி என எதை வேண்டுமானாலும் விருப்பம்போல் வாங்கிச் சாப்பிடலாமாம். அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் மிகத் தரமான உணவுப்பொருள்கள் என்று FSSAI உறுதிப்படுத்தியிருக்கிறது. இதன்மூலம், இந்தியாவிலேயே மிகத் தூய்மையான தெருவோர உணவுகள் கிடைக்கும் மையம் என்கிற கௌரவத்தைப் பெற்றிருக்கிறது `கங்காரியா ஏரி’.

ஒவ்வோர் ஊரிலும் இப்படி ஒரு தூய்மையான தெருவோர உணவு மையம் அமைந்தால் மகிழ்ச்சிதான். நோய்களைப் பற்றிக் கவலைப்படாமல் சப்புக்கொட்டிச் சாப்பிடலாம்!

இந்தியா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மக்கள் சேவையே!

ந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் `CSR’ எனப்படும் Corporate Social Responsibility பிரிவு இருக்கும். அதாவது, அந்த நிறுவனத்துக்குக் கிடைக்கும் லாபத்தில் ஒரு பகுதியைச் சமூகத்துக்குத் திருப்பித் தருகிற பொறுப்பை இந்தப் பிரிவு நிறைவேற்றும்.

இப்படி நாடு முழுக்கப் பல நிறுவனங்கள் CSR-க்காகக் கணிசமான தொகையைச் செலவு செய்வதைப் புரிந்துகொண்ட இந்திய ரயில்வே, railsahyog.in என்ற ஓர் இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. `உங்களுடைய CSR நிதியைப் பயன்படுத்தி, நம் ரயில்நிலையங்களை மேம்படுத்த உதவுங்கள்’ என்று கோருகிறது.

நிறுவனங்கள் வழங்கும் CSR தொகையைப் பயன்படுத்தி ரயில்நிலையங்களில் கழிவறைகள், குப்பைத்தொட்டிகள், இருக்கைகள், பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரங்கள் போன்றவை அமைக்கப்படும். இந்த வசதிகளில் அந்தந்த நிறுவனத்தின் பெயர், வணிகச் சின்னமும் இடம்பெறும்.

இந்தியா

புதிய தீர்வு!

மாற்றுத்திறனாளிகள் பலர், சக்கர நாற்காலியில் வெளியிடங்களுக்குச் சென்றுவருகிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வருவதற்கும், வாகனங்களில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்காகப் புதிய சக்கர நாற்காலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார்கள் டெல்லி IIT-யைச் சேர்ந்த அமித் குமார், ரிதுபர்ணா குஹா என்கிற மாணவர்கள். சக்கர நாற்காலியில் உள்ளோர் அதிலிருந்து இன்னோர் இடத்துக்கு மாறுவதற்கு உதவும் இந்தக் கண்டுபிடிப்புக்காக, இவர்களுக்கு `ஜேம்ஸ் டைசன்’ என்கிற இந்திய விருது கிடைத்திருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை உருவாக்கக்கூடிய இந்தக் கண்டுபிடிப்புக்காக, அமித், ரிதுபர்ணா இருவரும் நிறைய உழைத்திருக்கிறார்கள். பலரிடம் பேசிப் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, சக்கர நாற்காலியில் நடமாடுவோரைத் தொடர்ந்து கவனித்து, தீர்வுகளை வடிவமைத்து, பலவிதமான முயற்சிகளைச் செய்துப்பார்த்து இந்தச் சக்கர நாற்காலியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்தியா

செல்லப் பிராணிகளுக்குப் பூங்கா!

பூங்காவுக்கு நாயை அழைத்துச் செல்கிறவர்கள் உண்டு. ஆனால், நாய்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒரு பூங்காவைப் பார்த்ததுண்டா?

அந்த அதிசயப் பூங்கா ஹைதராபாத்தில் திறக்கப்பட்டிருக்கிறது. 1.2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் இருக்கைகள், நடைபாதைகள், விளையாட்டுப் பகுதிகள் என அனைத்தையும் நாய்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கியிருக்கிறார்கள். ஆங்காங்கே விதவிதமான நாய்களின் ஓவியங்கள், நீச்சல்குளம், நாய்களை அழைத்து வருகிறவர்களுக்கான வசதிகள், நாய் பயிற்சியாளர்கள், நாய்களுக்கான மருத்துவமனை, அவற்றுக்குத் தேவையான பொருள்களை விற்கும் கடை என அனைத்தும் உண்டு. நாய்களுக்கென ஓர் உணவகம் திறக்கும் யோசனையும் இருக்கிறதாம்! இத்தனையும் குறைந்த கட்டணத்தில்.

ஹைதராபாத் மாநகராட்சியின் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவுக்கு, மக்கள் பிரமாதமான வரவேற்பைத் தெரிவித்துள்ளார்கள்.

இந்தியா

தெரியுமா?

*இந்தியாவின் மிக உயர்ந்த விருது பாரத ரத்னா.