Published:Updated:

வாழ்க்கையின் நாயகர்கள்!

வாழ்க்கையின் நாயகர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கையின் நாயகர்கள்!

வாழ்க்கையின் நாயகர்கள்!

வாழ்க்கையின் நாயகர்கள்!

வாழ்க்கையின் நாயகர்கள்!

Published:Updated:
வாழ்க்கையின் நாயகர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வாழ்க்கையின் நாயகர்கள்!

ன்று வழக்கத்தைவிட இன்னும் பரபரப்பாக இருந்தது வில்லிவாக்கம் பேருந்துநிலையச் சாலை. காரணம், காவல்துறை பாதுகாப்போடு மாணவர்கள் படைசூழ ஊர்வலம் சென்றுகொண்டிருந்த ஒரு ஜானவாச கார். அதில் இரு சிறுவர்கள் கையில் கோப்பையும் கழுத்தில் பதக்கமும் முகத்தில் மகிழ்ச்சியுமாக உலா வந்துகொண்டிருந்தனர். `யார் இவர்கள்?’ என விசாரிக்கத் திரும்புகையில், பதில் சொன்னது அருகில் இருந்த பேனர். `தங்கம் வென்ற இளஞ்சிங்கங்களே... வருக வருக!’

வாழ்க்கையின் நாயகர்கள்!

கோவாவில் நடைபெற்ற தேசிய டேக்வாண்டோ போட்டியில், தமிழகம் சார்பில் பங்குபெற்று ஆர்.அனில்குமார் 23 கி.கி பிரிவிலும் பி.வினோத் 27 கி.கி பிரிவிலும் தங்கம் வென்று கலக்கியிருக்கிறார்கள். நம் மாநிலத்துக்குப் பெருமை சேர்த்தவர்களைப் பாராட்டவே அந்த மேளதாள, ஜானவாச கார் ஊர்வலம்.

அவர்களை நேரில் பார்த்தபோது,  `ஒடிந்த தேகமும் ஒட்டிய கன்னங்களுமாய் இருக்கும் இந்தச் சிறுவர்களா அசுர வேகத்தில் சண்டையிட்டு கோவாவையே கலக்கினர்!’ என ஆச்சர்யமாய் இருந்தது. ``ஹாய்!’’ என, கைகுலுக்கியவர்களின் பேச்சிலும் குரலிலுமிருந்த மழலைத்தன்மை,  உள்ளங்கை ஸ்பரிசத்தில் கொஞ்சமும் இல்லை. உறுதி இருந்தது, கைகளில் மட்டுமல்ல... அவர்களின் கதைகளிலும்.

வாழ்க்கையின் நாயகர்கள்!

வினோத்தும் அனிலும் வில்லிவாக்கம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கியிருக்கும் விடுதி, பள்ளியிலிருந்து சிறிது தூரம்தான். அந்த விடுதிக்குப் புதுவரவான இருவரும், விவரம் தெரிந்த காலத்திலிருந்து பாலமந்திர் காமராஜர் டிரஸ்ட் காப்பகத்தில்தான் வளர்ந்திருக்கிறார்கள். இருவருமே ரயிலில் தொலைக்கப்பட்ட வர்கள். இது அவர்களுக்குச் சொல்லப்பட்ட கதை. உண்மையா என்பது அந்த ரயிலுக்கே வெளிச்சம். தங்களுக்குப் பெயர் வைத்ததுகூட யாரென இருவருக்கும் தெரியாது. விடுதியில் வினோத்தைச் சேர்த்துவிட்ட `ஓர் அண்ணா’வையும், அனிலைச் சேர்த்துவிட்ட `ஓர் அக்கா’வையும் அவர்கள் அதன்பிறகு பார்க்கவேயில்லை.

காலை 6 மணிக்கு எழுவதில் ஆரம்பித்து தொழுது, பல் துலக்கி, குளித்து, துவைத்து, மீண்டும் தொழுது, உண்டு, படித்து, விளையாடி, மீண்டும் தொழுது, பிறகு 8 மணிக்கெல்லாம் உறங்குவதில் முடிகிறது அவர்களது ஒருநாள் வாழ்க்கை.

வாழ்க்கையின் நாயகர்கள்!சில நாளில் மட்டும் திரையரங்கம், மெரினா அல்லது பூங்கா. மற்ற நாளில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டி ருக்கும் அந்த விடுதிதான் அவர்களது உலகம்.

அனில் முதல்முறை விடுதிக்கு வந்த தினம், வினோத்துக்கு நினைவிருக்கிறது. அனிலோடு அவன் அண்ணனும் வந்திருக்கி றான். வந்த சில நாளிலேயே அங்கிருந்து அவன் தப்பிக்க முயன்ற தால், வேறு விடுதிக்கு மாற்றியிருக்கிறார்கள். அந்த அண்ணனையும் அனில் அதன் பிறகு சந்திக்கவில்லை. தன் அண்ணன் தன்னைவிட உயரமாய் இருப்பான் என்பதைத் தவிர அனிலுக்கு அண்ணனைப் பற்றிய வேறு எந்த ஞாபகமும் இல்லை. விடுதிக்கு வந்த புதிதில் `பீமப்பா... பீமப்பா’ என அழுவானாம் வினோத். ஒருவேளை அவன் அப்பாவின் பெயர் பீமாக இருக்குமோ என யோசித்து, வினோத் பெயரின் முன்னால் `B’ இனிஷியல் சேர்த்திருக்கிறார்கள். 

வாழ்க்கையின் நாயகர்கள்!

புது விடுதியில், தினமும் அதிகாலை டேக்வாண்டோ எனும் கொரிய தற்காப்புக் கலை வகுப்பு கட்டாயம். அதனாலேயே வகுப்புக்குச் சென்றிருக்கிறார்கள். கற்பூரப்புத்திக்காரர்கள் விரைவிலேயே நுணுக்கங்களைக் கற்றிருக்கிறார்கள். கற்றுக்கொடுத்த ஆசிரியருக்கே வலித்திருக்கிறது இவர்கள் அடித்த அடி. வனமரங்கள் வலியவை!

விடுதியைத் தொடர்ந்து பள்ளியிலும் டேக்வாண்டோ வகுப்புகள் நடை பெற்றுக்கொண்டிருக்க, அதிலும் முதல் வரிசையில் போய் நின்றிருக்கிறார்கள். சர்வதேச டேக்வாண்டோ கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் கெபிராஜ் மற்றும் ஆசிரியர் முரளி ஆகியோர்தாம் இவர்களைக் கண்டெடுத்துப் பட்டை தீட்டியவர்கள். சிறப்புப் பயிற்சிக்கும் ஆடை மற்றும் உபகரணங்களுக்குமான செலவுகளை, பள்ளி ஆசிரியர்களே இணைந்து செய்திருக்கிறார்கள்.

வாழ்க்கையின் நாயகர்கள்!

சாலையில் நின்றுகொண்டிருந்த ஒரு காரில் ஒட்டியிருந்த லயன்ஸ் கிளப் ஸ்டிக்கரைப் பார்த்து, ஒருவரிடம் உதவி கேட்டுப் பணம் பெற்றிருக்கிறார் ஓர் ஆசிரியர்.  இப்போது தேசிய அளவிலான போட்டியில் தங்கம் கிடைத்திருக்கிறது இருவருக்கும். அடுத்த ஆசிய அளவிலான போட்டிக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். போட்டிக்குச் சென்று வர உதவி எதிர்பார்த்தி ருக்கிறார்கள். அனிலுக்குக் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று ஆசை. தனது ஊர்வலத்துக்குப் பாதுகாப்பாய் வந்த காவலர்களைப் பார்த்ததும் அனிலுக்கு இன்னும் காவலர்களைப் பிடித்துப்போய்விட்டது. வினோத்துக்கு விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டுமாம்.

சண்டையிடுங்கள், கனவுகள் பலிக்கும் வரை!

ப.சூரியராஜ் - படங்கள்: வீ.நாகமணி